பல்பிடுங்கிய விவகாரம்: பல்வீர் சிங் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்தது சிபிசிஐடி காவல்துறை
பல்பிடுங்கிய விவகாரம்: பல்வீர் சிங் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்தது சிபிசிஐடி காவல்துறை
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் காவல் உட்கோட்டத்தில் உள்ள அம்பாசமுத்திரம், விக்கிரமசிங்கபுரம், கல்லிடைக்குறிச்சி காவல் நிலையங்களில் விசாரணைக்கு வந்தவர்களின் பற்கள் பிடிங்கியது சம்பந்தமாக புகார்கள் வந்ததின் பேரில் அம்பாசமுத்திரம் ஏஎஸ்பி பல்பீர் சிங் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இதனை அடுத்து இந்த வழக்கை விசாரிப்பதற்காக சேரன்மகாதேவி சார் ஆட்சியர் முகமது சபீர் ஆலம் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டார். அவருடைய இடைக்கால அறிக்கையின் பரிந்துரையின் படி மூத்த ஐஏஎஸ் அதிகாரி அமுதா அவர்களை விசாரணை அதிகாரியாக தமிழ்நாடு அரசு நியமித்தது.
இந்த நிலையில் நெல்லை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் சுபாஷ் என்பவரின் புகாரின் பேரில் பல்வீர் சிங் மீது நான்கு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்திருந்தனர். மூத்த ஐஏஎஸ் அதிகாரி அமுதா. அவர்களின் இரண்டு கட்ட விசாரணை அறிக்கையின் படி இந்த வழக்கானது சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. விசாரணை அதிகாரியாக சிபிசிஐடி காவல் ஆய்வாளர் உலக ராணி நியமிக்கப்பட்டார். அவர் இந்த வழக்கு விசாரணை சம்பந்தமாக புகார் கொடுத்த சுபாஷ் மற்றும் பலரிடமும் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திலும் ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இந்த நிலையில் இந்த வழக்கை விசாரிப்பதற்காக மேலும் சிபிசிஐடி திட்டமிட்ட குற்றங்கள் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சங்கரும் நியமிக்கப்பட்டார்.
இந்த நிலையில் அம்பாசமுத்திரம் காவல் நிலையத்தில் அருண்குமார் என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் சிபிசிஐடி போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தனர். இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு இந்த வழக்கை கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சங்கர் விசாரணைக்கு எடுத்துக்கொண்டு பல்வீர் சிங் மற்றும் சில காவலர்கள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளார். மேலும் விக்கிரமசிங்கபுரம் காவல் நிலையத்தில் வேத நாராயணன் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் சிபிசிஐடி காவல் ஆய்வாளர் விஜயலட்சுமி பல்வீர்சிங் மீது மற்றொரு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். சிபிசிஐடியின் இந்த இரண்டு வழக்குகள் சம்பந்தமாக விசாரணைக்கு ஆஜராகுமாறு கணேசன், அருண்குமார், இரண்டு சிறார்கள், ராசு, மகேந்திரன், சாம் ஆகியோர் வருகிற 5-ஆம் தேதி வெள்ளிக்கிழமை நெல்லை சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணை அதிகாரிகள் முன்னிலையில் ஆஜராக சம்மன் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்