அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கை 2 மடங்கு உயர்வு; என்ன காரணம்?- அமைச்சர் மா.சு. பேட்டி!
தமிழகத்தில் உள்ள சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் புற நோயாளிகளின் எண்ணிக்கை இரண்டு மடங்கு உயர்ந்துள்ளது.
நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி ஆண்டு விழா மற்றும் முதலாம் ஆண்டு மருத்துவ மாணவர்களுக்கான வெள்ளை அங்கி மருத்துவ உடை அணிவிப்பு விழா, சிறந்த மருத்துவ பேராசிரியர்கள் மற்றும் சிறந்த மாணவர்களுக்கு விருது வழங்கும் விழா இன்று மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியம் கலந்துகொண்டு விருது வழங்கி, முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வெள்ளை அங்கி வழங்கினார்.
தொடர்ந்து விழாவில் அமைச்சர் பேசியதாவது:
’’நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 2,047 படுக்க வசதி உள்ளது. 47 துறைகள் செயல்பட்டு வருகிறது. இங்கு நாளொன்றுக்கு புற நோயாளிகள் 4,000 பேர் வந்து செல்கின்றனர். உள்நோயாளிகள் நாள் ஒன்றிற்கு சுமார் 1,250 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த இரண்டு வருடத்தில் மூவாயிரம் ஆக இருந்த புற நோயாளிகளின் எண்ணிக்கை 4 ஆயிரமாக உயர்ந்துள்ளது.
இதுபோன்று தமிழகத்தில் உள்ள சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் புற நோயாளிகளின் எண்ணிக்கை இரண்டு மடங்கு உயர்ந்துள்ளது. இது அரசு மருத்துவ சேவை மீது மக்கள் நம்பிக்கை கொள்ள தொடங்கி உள்ளனர் என்பதை காட்டுகிறது. நெல்லை அரசு மருத்துவமனையில் 600 படுக்கை வசதியுடன் நவீன வசதிகள் கொண்ட மருத்துவ கட்டிடம் 72 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டு வருகிறது.
அரசு மருத்துவமனைக்கு அதிக அளவில் கிராம மக்கள் வருவதைத் தொடர்ந்து நெல்லை அரசு மருத்துவமனையில் கூடுதலாக 50 படுக்கையுடன் 23 முக்கால் கோடி மதிப்பில் தீவிர சிகிச்சைப்பிரிவு கட்டப்பட்டு வருகிறது. மேலும் 35.18 கோடி ரூபாய் மதிப்பில் துணை மருத்துவமனை கட்டிடங்கள் 100 படுக்கைகளுடன் கட்டப்பட்டு வருகிறது. இதன் பணி முடியும் தருவாயில் உள்ளது.
அம்பாசமுத்திரத்தில் 6.80 கோடி ரூபாய் மதிப்பில் மகப்பேறு சிகிச்சைப் பிரிவும், வள்ளியூரில் அரசு மருத்துவமனை மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டும் பணிகள் நடந்து வருகிறது. மேலப்பாளையம் அரசு மருத்துவமனையில் 5.83 கோடி ரூபாய் மதிப்பில் புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகிறது.
ஆரம்ப மற்றும் துணை சுகாதார நிலையங்களுக்கு 178 கோடி ஒதுக்கப்பட்டு பணிகள் நடக்கிறது. நெல்லை மாவட்டத்திற்கு மருத்துவ பணிகளுக்காக அதிக அளவில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த நிதிநிலை அறிக்கையில் மருத்துவத்துறைக்கு 136 அறிவிப்புகள் வெளியிடப்பட்டது. இதில் நவீன நரம்பு அறுவைச்சிகிச்சை உபகரணம் வழங்குதல், PAY வார்டு, முழு உடல்தகுதி பரிசோதனை கூடம் அமைப்பது உள்ளிட்ட 5 அறிவிப்புகள் நெல்லை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்தியாவிலேயே சிறந்த மாநிலம்
மருத்துவ வசதி அளிப்பதில் இந்தியாவிலேயே சிறந்த மாநிலமாக தமிழகம் உள்ளது. அதுபோன்று அதிக மருத்துவக் கல்லூரிகளை கொண்ட மாநிலமும் தமிழகம்தான். இங்கு 74 கல்லூரிகள் உள்ளன. தற்போது புதிய எக்ஸ் வைரஸ் பரவுவதாக கூறப்படுகிறது. கொரோனாவைத் தொடர்ந்து பல்வேறு வைரஸ்கள் வந்து கொண்டு இருக்கிறது.
தற்போது பரவும் எக்ஸ் வைரஸ் உள்ளிட்ட பேரிடர்களை எதிர்கொள்ள தமிழகமும், தமிழக மருத்துவத் துறையும் தயாராக உள்ளது. கடந்த 11 ஆண்டுகளில் தமிழகத்திற்கு 478 விருதுகள் கிடைத்துள்ளன. கடந்த ஆண்டு 239 விருதுகள் கிடைத்துள்ளன. 50 சதவீத விருதுகளை தமிழகம் பெற்றுள்ளது.’’
இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.