அமித்ஷா கொடுத்த பிளான்.! டிடிவி, ஓபிஎஸ்யை தூக்க ஸ்கெட்ச்- ஆக்ஷனில் அண்ணாமலை- நடப்பது என்ன.?
OPS and TTV back into the BJP alliance: தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், அதிமுக- பாஜக கூட்டணியை பலப்படுத்து அமித்ஷா திட்டமிட்டு காய்நகர்த்தி வருகிறார்.

நெருங்கும் தமிழக தேர்தல்
சட்டமன்ற தேர்தலுக்காக அரசியல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இன்னும் சுமார் 120 நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், கூட்டணி பேச்சு வார்த்தை, தொகுதி பங்கீடு என அரசியல் கட்சிகள் ரகசியமாக தொடங்கியுள்ளன. அந்த வகையில் ஆளுங்கட்சியாக உள்ள திமுக, பலம் வாய்ந்த கூட்டணியாக உள்ளது. கடந்த 2018ஆம் ஆண்டிற்கு பிறகு காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட், மதிமுக, முஸ்லிம் லீக், மமக உள்ளிட்ட கட்சிகள் இணைந்து தேர்தலை எதிர்கொண்டு வருகிறது. 2024ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின் போது நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதிமய்யமும் இணைந்துள்ளது. எனவே இந்த கூட்டணியோடு 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள திமுக திட்டமிட்டு வருகிறது.
அதிமுக கூட்டணி பிளான் என்ன.?
இதனையடுத்து காங்கிரஸ் கட்சியிலும் தொகுதி பங்கீடு தொடர்பாக குழு அமைத்துள்ளது. இந்த குழுவும் திமுக தலைவரும், முதலமைச்சருமான ஸ்டாலினை சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளது. விரைவில் அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது. இந்த பரபரப்பான நிலையில் எதிர்கட்சியாக உள்ள அதிமுக முதல் ஆளாக பாஜகவை தங்கள் கூட்டணியில் இணைத்துள்ளது. அடுத்ததாக பாமக மற்றும் தேமுதிக ஆகிய கட்சிகளை இணைக்கவும் காய் நகர்த்தி வருகிறது. அதே நேரம் கடந்த 2024ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணியில் இடம்பிடித்திருந்த ஓ.பன்னீர் செல்வம் மற்றும் டிடிவி தினகரன் கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்தனர்.
தமிழக தேர்தல்- களம் இறங்கிய அமித்ஷா
இந்த நிலையில் பாஜக மாநில தலைவராக இருந்த அண்ணாமலை மீண்டும் தங்கள் அணியில் ஓபிஎஸ் மற்றும் டிடிவியை இணைக்க தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். பலமுறை நேரில் சந்தித்தும் ஆலோசனை நடத்தியிருந்தார். இதனையடுத்து கடந்த வாரம் டெல்லி சென்ற ஓபிஎஸ் அமித்ஷாவை சந்தித்து தமிழக அரசியல் நிலவரம் தொடர்பாக பேசியிருந்தார். அடுத்ததாக அண்ணாமலையும் அமித்ஷாவுடன் ஆலோசனை நடத்தினார். இந்த நிலையில் பீகார் சட்டமன்ற தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில், அமித்ஷாவின் பார்வை தற்போது தமிழகம் மீது திரும்பியுள்ளது.
எனவே தமிழகத்தில் 2026ஆம் ஆண்டு தேர்தலில் திமுகவை வீழ்த்த வியூகங்கள் தொடர்பாக அமித்ஷா தொடர்ந்து ஆலோசித்து வருகிறார். கூட்டணியை பலப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கை தொடர்பாகவும் அண்ணாமலை உள்ளிட்ட பாஜக மூத்த தலைவர்களிடம் கேட்டறிந்துள்ளார். அதிக வாக்குகளை கொண்ட கட்சியாக இருந்த அதிமுக, தற்போது மூத்த தலைவர்கள் பிரிந்து சென்ற காரணத்தால் வாக்குகள் பல பிளவுகளாக பிரிந்து வருகிது. எனவே அதிமுக வாக்குகள் சிதறாமல் கிடைக்க ஓபிஎஸ் மற்றும் டிடிவியை சமாதானம் செய்து மீண்டும் அதிமுக- பாஜக கூட்டணியில் இணைக்க பிளான் போட்டதாக கூறப்படுகிறது.
ஓபிஎஸ், டிடிவி- மீண்டும் பாஜக கூட்டணி
இதனையடுத்தே நேற்று முன் தினம் ஓபிஎஸ் உடன் அண்ணாமலை ஒரு நிகழ்சியில் சந்தித்து பேசினார். நேற்று கோவையில் தனது இல்லத்தில் டிடிவி தினகரனுக்கு அண்ணாமலை விருந்து வைத்து சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக ஆலோசித்துள்ளார். அப்போது கூட்டணி தொடர்பாக பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த பேச்சுவார்த்தைக்கு பிறகே உடனடியாக நேற்று இரவே டெல்லிக்கு புறப்பட்ட அண்ணாமலை, மீண்டும் பாஜக மூத்த தலைவர்களை சந்தித்து டிடிவி மற்றும் ஓபிஎஸ் கோரிக்கை தொடர்பாக ஆலோசிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதே நேரம் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோரை கூட்டணியில் இணைப்பது குறித்து தேசிய தலைமை முடிவெடுக்கும் என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.





















