எறும்பு ஊர பாறையும் தேயும் என்பது போல ஸ்டாலின் மெல்ல மெல்ல நடந்தாவது இவைகளை ஈட்டியிருக்கார்- கே.எஸ். அழகிரி
குலாம் நபி ஆசாத் பத்மபூஷன் விருதினை பெற்றுக் கொண்டார். இதிலிருந்து தெரிகிறது அவர் என்ன எதிர்பார்த்து இருப்பார் என்று.
அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை 'இந்தியா ஒற்றுமை யாத்திரை' என்ற பெயரில் 3 ஆயிரத்து 500 கிலோ மீட்டர் தூரம் நடைபயணம் நடத்துகிறார். இந்த நடைபயணம் வருகிற 7-ந் தேதி கன்னியாகுமரியில் இருந்து தொடங்குகிறது. இதுதொடர்பாக தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகளுக்கான ஆலோசனை கூட்டம் தூத்துக்குடியில் தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. கூட்டத்துக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக அகில இந்திய காங்கிரஸ் செயலாளரும், தமிழக காங்கிரஸ் பொறுப்பாளருமான சிரிவெல்ல பிரசாத் கலந்து கொண்டு பேசினார்.
கூட்டத்தில் மாநில தலைவர் கே.எஸ். அழகிரி பேசும்போது, வரலாற்று சிறப்பு மிக்க அரசியல் பயணத்தை ராகுல் காந்தி கன்னியாகுமரியில் தொடங்குகிறார். ஒரு அரசியல் புரட்சியை இங்கிருந்து அவர் தொடங்குகிறார். நாட்டின் விடுதலைக்காக மகாத்மா காந்தி தண்டி யாத்திரை மேற்கொண்டார். அதுபோல ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தங்களை நாட்டில் இருந்து ஒழிக்க, அகற்ற ராகுல் காந்தி இந்த பயணத்தை மேற்கொள்கிறார். இதனை வெற்றிகரமாக நடத்த வேண்டும். இந்த வெற்றிக்காக எதை வேண்டுமானாலும் தியாகம் செய்யலாம்.
தமிழகத்தில் மீண்டும் காமராஜர் ஆட்சியை அமைக்க வேண்டும் என்பதே நம் லட்சியம். அதற்கு அடித்தளமாக இந்த நடைபயணம் அமையும். பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு நம்பிக்கை இருக்க வேண்டும். கன்னியாகுமரியில் நாம் ஏற்படுத்தும் மாற்றம் தான் நாடு முழுவதும் ஏற்படும். எனவே, நடைபயணம் தொடக்க நிகழ்ச்சியை ராகுல் காந்தியே வியக்கும் அளவுக்கு வெற்றிகரமாக்கி காட்ட வேண்டும்.
நமது எதிரிகள் வலிமை மிக்கவர்கள். அறிவுக்கூர்மையானவர்கள். அவர்களை எதிர்ப்பது எளிதானது அல்ல என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். திருக்குறளை மொழிபெயர்த்தவர்கள் ஆன்மிகம் என்ற ஆன்மாவை அப்புறப்படுத்திவிட்டார்கள் என்று தமிழக கவர்னர் விமர்சித்து உள்ளார். இது வரம்புமீறிய செயல். எந்தவித மதசார்பும் இல்லாத நூல் திருக்குறள். கவர்னர் முதலில் திருக்குறளை முழுமையாக படிக்க வேண்டும். இதுபோன்ற கலாச்சார படையெடுப்பை தான் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் நடத்துவார்கள். அதனை எதிர்கொண்டு நாம் முறியடிக்க வேண்டும். நடைபயணத்துக்கு வரும் ஒவ்வொருவரும் கையில் கொடி ஏந்தி வர வேண்டும் என்றார்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்துத்த அவர், ”தமிழகத்தில் பாரதிய ஜனதா 23 இடங்களை தேர்தலில் கேட்டு பெற்றது. ஆனால் நான்கு இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. இதில் இன்றைய தலைவரும் அன்றைய தலைவரும் வெற்றி பெற வில்லை. ஆனால் காங்கிரஸ் 25 இடங்களை தேர்தலில் சந்தித்து 18 இடங்களை வெற்றி பெற்றது. இதில் எங்களுடைய வெற்றி சதவிகிதம் 72 ஆகும். எங்களுக்கும் ஒரு திராவிட கட்சி துணையாக இருந்தது. அவர்களுக்கும் ஒரு திராவிட கட்சி துணையாக இருந்தது. அப்பொழுது மத்தியிலும் அவர்கள் ஆட்சி இருந்தது மாநிலத்திலும் அவர்கள் ஆட்சி இருந்தது. எங்களுக்கு மத்தியிலும் ஆட்சி இல்லை மாநிலத்திலும் ஆட்சி இல்லை ஆனால் நாங்கள் வெற்றி பெற்றுள்ளோம் இதிலிருந்து யார் வளர்ந்து கொண்டிருக்கிறார்கள் யார் பலம் பெற்று இருக்கிறார்கள் என்று தெரிகிறது.
மத்தியில் ஆட்சி அமைப்பதற்கு இந்தியா முழுவதிலும் உள்ள எங்களைப் போன்றவர்களை ஒன்றிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். திராவிட முன்னேற்ற கழகம் கொடுத்த தேர்தல் வாக்குறுதிகள் 5 வருடத்திற்கானது. அதற்குள்ளாக அனைத்து வாக்குறுதிகளை பற்றியும் நிறைவேற்ற வேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது. அது போன்றது தான் ஆயிரம் ரூபாய் இல்லத்தரசிகளுக்கு வங்கி கணக்கில் செலுத்துவது என்பதும். மேலும் பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தால் ஒவ்வொருவருக்கும் 15 லட்சம் வங்கி கணக்கில் செலுத்தப்படும் என்றார்கள். ஆட்சிக்கு வந்து எட்டு ஆண்டுகள் ஆகிறது அது அந்த வாக்குறுதி என்னவானது. கடந்த ஓராண்டாக தமிழக அரசு செயல்படுவதை பார்த்து சிறப்பாக செயல்படுகிறார்கள் என்று தெரிகிறது. எறும்பு ஊர பாறையும் தேயும் என்பது போல ஸ்டாலின் மெல்ல மெல்ல நடந்தாவது இவைகளை ஈட்டியிருக்கார் அதை நான் பாராட்டுகிறேன் வரவேற்கிறேன்.
பாரதிய ஜனதா கட்சி ஊழலற்ற ஆட்சி நடத்தி வருவதாக கூறுவது தவறு குற்றச்சாட்டு ரபேல் ஊழல் வழக்கு உள்ளது குறிப்பிடத்தக்கது. குலாம் நபி ஆசாத் பற்றி கூறும்பொழுது அனைவரும் நல்லவர்களாகவே இருக்கிறார்கள். ஆனால் சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக தாங்கள் மாற வேண்டிய சூழ்நிலை வரும்போது தலைமை மீது சேற்றை வாரி இறைக்கிறார்கள். பாஜக அரசு பத்மபூஷன் விருதை இருவருக்கு வழங்கினார். அதில் ஒருவர் குலாம் நபி ஆசாத் மற்றொருவர் கம்யூனிஸ்ட் கட்சியைச் சார்ந்த புத்ததேவ் பட்டாட்சியார். இதில் புத்தவ்தேவ் பட்டாட்சியார் விருது பெரிய தகுதி உடையது. ஆனால் விருதை வழங்குபவர் தகுதியில் சிறியவர் அதனால் எனக்கு அந்த விருது வேண்டாம் என்றார். அதே சமயம் குலாம் நபி ஆசாத் விருதினை பெற்றுக் கொண்டார். இதிலிருந்து தெரிகிறது அவர் என்ன எதிர்பார்த்து இருப்பார்” என்று கூறினார்.