ராமநாதபுரம்: பள்ளபச்சேரியில் 500 ஆண்டுகளாக நடைபெற்று வரும் பொன் ஏர் பூட்டும் விழா
விழாவானது குலுக்கல் முறையில் அந்த கிராமத்தில் உள்ள நபர்களின் பெயர் எழுதி போட்டு யார் பெயர் வருகிறதோ அவர் அந்த ஏர் கலப்பையை தோளில் சுமந்தவாறு அவரது வீட்டில் இருந்து மேளதாளம் முழங்கும்
முதன் முதலாக ஒரு நிலப்பகுதியில் நல்ல நாளில் ஏர் பூட்டி உழத் தொடங்குவதைப் பொன்னேர் பூட்டல் என்பார்கள். தமிழ்நாட்டின் கிராமங்களில் இந்த விழாவானது சித்திரை மாதத்தில் நடத்தப்படுகிறது. தமிழ் வருடப்பிறப்பின் முதல் நாளான சித்திரை 1 அன்று பாரம்பரியமாக விவசாயிகள் விவசாய பணிகளை முதன்முதலாக தொடங்குவதன் அடையாளமாக பொன் ஏர் பூட்டும் விழா நடைபெறுவது வழக்கம், தற்போது இந்த பழக்கம் குறைந்துள்ள சூழலில் ஒரு சில கிராமங்களில் மட்டுமே இந்த பொன்னேர் பூட்டும் விழா அல்லது சித்திரை உறவு நிகழ்வு கொண்டாடப்பட்டு வருகிறது .இந்த பொன் ஏர் பூட்டும் திருவிழாவை ராமநாதபுரம் மாவட்டம் கமுதி தாலுகா அபிராமம் அருகே உள்ள பள்ளப்பச்சேரி கிராமத்தில் வழக்கமான உற்சாகத்துடன் விவசாயிகள் கொண்டாடினர். தமிழர்களின் பண்பாடு இன்னும் கிராமப்பகுதிகளில் அழியாமல் பாதுகாக்கப்பட்டு வருகின்றது. நேற்று தமிழ்ப் புத்தாண்டு தினத்தையொட்டி, அ.பள்ளபச்சேரி கிராம விவசாயிகள் ஒன்று கூடி ஒற்றுமையாக, பொன் ஏர் பிடித்து விவசாய நிலங்களை உழுது பாரம்பரியத்தை கடைபிடித்தனர்.
தமிழ்ப் புத்தாண்டு தினமான சித்திரை முதல் தேதியில் விவசாயத்தை துவக்கினால் அந்த ஆண்டு முழுவதும் விவசாயம் செழிப்பாக இருக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. அதன்படி ஒவ்வொரு ஆண்டும் தமிழ் புத்தாண்டு அன்று விவசாயிகள் பொன் ஏர் பூட்டுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்த பொன் ஏர் என்பது விவசாயம் மற்றும் விவசாயத்திற்கு பயன்படும் கருவிகள், காளை மாடுகளுக்கு மரியாதை செய்வது மட்டுமின்றி, இந்த திருவிழாவின் முக்கிய நோக்கம் பாரம்பரிய விதைகளை பாதுகாப்பதும் ஆகும். பாரம்பரிய விதைகளின் முளைப்பு திறன் குறித்தும் விவசாயிகள் அறிந்து கொள்கின்றனர். அந்த வகையில் நேற்று, ராமநாதபுரம் மாவட்டம் அபிராமம் அருகே உள்ள அ.பள்ளபச்சேரி கிராமத்தில் வழக்கமான உற்சாகத்துடன் பொன் ஏர் பூட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. விவசாயிகள் ஒன்று திரண்டு நிலத்தை உழுவதற்கு தேவையான ஏர் கலப்பைகளை சுத்தம் செய்தனர். பின் காளைகளுக்கும், ஏருக்கும் அலங்காரங்கள் செய்தனர். தொடர்ந்து சூலம் பார்த்து திசையை தேர்வு செய்து விதைப்பு மேற்கொள்வது வழக்கம்.
இந்த நிகழ்ச்சியில் கிராமத்தில் உள்ள அனைத்து விவசாயிகளும், மனமாச்சர்யமின்றி ஒற்றுமையுடன் இந்த உழவுப்பணியை முடித்தனர். பின் நவதானியங்களை இந்த நிலத்தில் விதைப்பார்கள். மண் மனம் மாறாத இந்த பொன் ஏர் திருவிழா காலங்காலமாக இங்கு நடந்து வருகிறது. அபிராமம் அருகே உள்ள பள்ளப்பச்சேரி கிராமத்தில் கடந்த 500 ஆண்டுகளுக்கு மேலாக விவசாயத்தை போற்றும் வகையில் பொன் ஏர் பூட்டும் திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது . இந்த விழாவானது குலுக்கல் முறையில் அந்த கிராமத்தில் உள்ள நபர்களின் பெயர் எழுதி போட்டு யார் பெயர் வருகிறதோ அவர் அந்த ஏர் கலப்பையை தோளில் சுமந்தவாறு அவரது வீட்டில் இருந்து மேளதாளம் முழங்க உற்சாக வரவேற்பும் , பூரண மரியாதையும் அளிக்கப்பட்டது.
இதனையடுத்து, பொதுமக்கள் அ.பள்ளபச்சேரி கிராமத்தில் இருந்து தொடங்கி அபிராமம் நகர் பகுதியில் முக்கிய வீதி வழியாக சென்று அபிராமத்தில் உள்ள சப்பானி கோவிலில் அங்கு கொழு தயார் செய்யப்பட்டு அங்கிருந்து நேராக உடையநாதபுரம் அய்யனார் கோவிலுக்கு சென்று, அய்யனாருக்கு தீபாராதனை செய்யப்பட்ட பின் அந்த கோவிலின் முன்பு உள்ள நிலத்தில் விதைப்பு மேற்கொள்ளப்பட்டது.இந்த நிகழ்வில் ஆண்கள் கலப்பை பிடித்து ஏர் உழும் போது அவர்களின் பின்னே பெண்கள் விதை விதைதுக்கொண்டே சென்றனர்.இந்த நிகழ்ச்சியானது காலங்காலமாக தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட விவசாய பொதுமக்கள் சாதிமத பேதமின்றி இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.