(Source: ECI/ABP News/ABP Majha)
விடுதலை செய்தால் மட்டும் போதுமா...! படகுகளையும் மீட்டுத்தர அரசுக்கு மீனவர்கள் கோரிக்கை
மீனவர்களிடமிருந்து பறிமுதல் செய்த படகுகளையும் விடுவிக்க வேண்டும், கச்சத்தீவு திருவிழாவுக்கு அனுமதி தரவேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இலங்கை சிறையில் இருந்த தமிழக மீனவர்கள் 56 பேர் கடந்த 25 ந்தேதியும், முன்னதாக 5 ந்தேதி 12 மீனவர்களும் அந்நாட்டு நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டனர். ஆனால் பறிமுதல் செய்யப்பட்ட படகுகள் அரசுடமையாக்கப்பட்டுள்ளது. எனவே, மீனவர்களிடமிருந்து பறிமுதல் செய்த படகுகளையும் விடுவிக்க வேண்டும், கச்சத்தீவு திருவிழாவுக்கு அனுமதி தரவேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
'படகுகளையும் விடுவிக்க வேண்டும்'
கடந்த ஆண்டு டிசம்பர் 18,19 தேதிகளில், ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற தென்னரசு, லியோன், பீட்டர் கருப்பையா உள்ளிட்ட 6 பேருக்குச் சொந்தமான விசைப்படகுகளையும் அதில் இருந்த 43 மீனவர்களையும், மண்டபம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து கடலுக்குச் சென்ற சபரிதாஸ், அருளானந்தம் ஆகிய இருவருக்குச் சொந்தமான இரண்டு விசைப் படகுகளையும் அதிலிருந்த 12 மீனவர்களையும், புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப் பட்டிணத்தில் இருந்து இரண்டு விசைப்படகுகளையும் அதிலிருந்த மீனவர்கள் 13 பேரையும் எல்லை தாண்டி இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைந்து அனுமதியின்றி மீன் பிடித்தாக வழக்கு பதிவு செய்த இலங்கை கடற்படையினர் தனித்தனியாக சிறைப்பிடித்து யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா சிறைகளில் அடைத்தனர். மேலும் கைது செய்யப்பட்ட மீனவர்கள் ஒவ்வொருவரையும் கையை உயர்த்தி நிற்கச் செய்து அவர்கள் மீது கிருமி நாசினி பீய்ச்சி அடித்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
68 தமிழக மீனவர்களையும், 10 விசைப் படகுகளையும் விடுதலை செய்ய வலியுறுத்தி ராமேஸ்வரத்தில் டிசம்பர் 20 தேதியில் இருந்து வேலை நிறுத்தம், ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் என தொடர்ப் போராட்டங்களை நடத்தினர். ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் சங்கர்லால் தலைமையில், ராமேசுவரம் மீனவப் பிரதிநிதிகள் இடையிலான பேச்சு வார்த்தையின்போது மீனவர்களை மீட்பதற்காக மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருவதால் வேலை நிறுத்தைத்தை கைவிட வேண்டும் எனக் கேட்டுக் கொள்ளப்பட்டது. இதனடிப்படையில் ராமேஸ்வரம் மீனவர்கள் வேலைநிறுத்தத்தை வாபஸ் பெற்று ஜனவரி 3ஆம் தேதியில் இருந்து மீண்டும் கடலுக்குச் சென்று வருகின்றனர்.
இந்த நிலையில், வவுனியா சிறையில் அடைக்கப்பட்டிருந்த மண்டபம் மீனவர்கள் 12 பேர் மீது எல்லை தாண்டி மீன்பிடித்தல், தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில் வழக்கு இலங்கையில் உள்ள மன்னார் நீதிமன்றத்தில் கடந்த 5 ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. இந்த மீனவர்கள் மீண்டும் இலங்கை எல்லைக்குள் மீன்பிடித்தால் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்ற நிபந்தனையில் அடிப்படையில் 12 மீனவர்களையும் விடுதலை செய்து நீதிபதி சிவக்குமார் உத்திரவிட்டார்.
மேலும், மீனவர்களின் இரண்டு விசைப்படகுகள் மற்றும் வலைகள் உள்ளிட்ட மீன்பிடி உபகரணங்களை இலங்கை வெளிநாட்டு மீன்பிடி தடைச்சட்டத்தின் கீழ் அரசுடமையாக்கப்படுகிறது என்றும் மன்னார் நீதிமன்றம் உத்திரவிட்டது. படகுகளுடன் மீனவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்த்திருந்த நிலையில் தமிழக மீனவர்களுக்கு இந்த தீர்ப்பு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.இதனையடுத்து, விடுதலை செய்யப்பட்ட 12 மீனவர்களில் 9 பேர் மட்டுமே ஊர் திரும்பி இருந்த நிலையில், நேற்று எஞ்சிய 3 மீனவர்களும் நேற்று தாயகம் திரும்பினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், இதில், ராமேஸ்வரம் மீனவர்கள் 43 பேர்களும், ஜெகதாப் பட்டிணம் மீனவர்கள் 13 பேர்களும் நீதிமன்றக் காவலில் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.இதுதொடர்பான வழக்கு கடந்த 25ஆம் தேதி இலங்கை ஊர்க்காவல்துறை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி கஜநிதிபாலன் மீனவர்கள் 56 பேரையும் நிபந்தனைகளுடன் விடுதலை செய்து உத்தரவிட்டார். மேலும், மீனவர்களை சிறை பிடித்தபோது பறிமுதல் செய்த 8 விசைப்படகுகள் தொடர்பான வழக்கு வரும் ஏப்ரல் 1ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது. அப்போது படகின் உரிமையாளர்கள் நீதிமன்றத்தில் ஆஐராக நீதிபதி உத்தரவிட்டார். இதனையடுத்து விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் 56 பேரும் கொழும்புவில் உள்ள மெருஹானா முகாமிற்கு அழைத்து செல்லப்பட்டனர். ஓரிரு நாட்களில் தாயகம் திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில்,மீனவர்கள் விடுதலையால் ராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள், சிறை பிடிக்கப்பட்ட மீனவர்களின் குடும்பத்தினர் மகிழ்ச்சியில் இருந்தாலும், மீனவர்களோடு படகுகளையும் விடுவிக்க வேண்டும், மேலும், கடந்த காலங்களில் சிறைப்பிடிக்கப்பட்ட 105 படகுகளை ஏலம் விடுவதை இலங்கை அரசு கைவிட வேண்டுமென அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு அந்நாட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருந்த ராமேஸ்வரம் மற்றும் புதுக்கோட்டையைச் சேர்ந்த மீனவர்களை விடுதலை செய்தால் மட்டும் போதாது அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட படகுகளையும் விடுவிக்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏனெனில் மீனவர்களின் வாழ்வாதாரமான படகுகளை இலங்கை அரசு அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது மீனவர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பையும் கண்டனத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், இம்முறை கச்சத்தீவு புனித அந்தோனியார் தேவாலய திருவிழாவில் இந்திய யாத்திரிகர்களுக்கு அனுமதி வழங்காதிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் கடந்த 26 ந்தேதி அதிகாரப்பூர்வமாக தெரிவித்தார். மேலும், கொரோனா அச்சம் காரணமாக, இலங்கையை சேர்ந்த உள்ளூர் யாத்திரிகர்களுடன் கட்டுப்படுத்தப்பட்ட ரீதியில் வருடாந்தர உற்சவத்தை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் இலங்கை அரசு அறிவித்துள்ளது மீனவர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை தந்துள்ளது.
'கச்சத்தீவு திருவிழாவுக்கு செல்ல அனுமதி வேண்டும்'
இந்த நிலையில், பாம்பன் வடக்கு கடற்கரைகள் பாரம்பரிய மீனவர்கள் கூட்டமைப்பு சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. நாட்டுப்படகு மீனவர் சங்க தலைவர் ராயப்பன் தலைமை வகித்தார். அடைக்கலம் ஜெரோமியாஸ் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கச்சத்தீவு திருவிழா வருகிற மார்ச் 11, 12 தேதிகளில் நடைபெற உள்ளது. இதில் இலங்கை பக்தர்களுக்கு அந்த அரசு அனுமதி அளித்துள்ள நிலையில் இந்தியாவில் இருந்து கச்சதீவு செல்லும் பக்தர்களுக்கு கொரனா வைரஸ் காரணம் காட்டி அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. கடந்த பல ஆண்டுகளாக கச்சத்தீவில் ஆலயம் கட்டி வழிபடும் இந்திய பாரம்பரிய மீனவர்களில் 200 பேருக்காவது மத்திய மாநில அரசுகள் கச்சத்தீவு திருவிழாவிற்கு செல்ல அனுமதி அளிக்க வேண்டும்.
இந்திய படகுகளை இலங்கை அரசு ஏலம் விடும் நடவடிக்கையை வன்மையாக கண்டிக்கின்றோம் இலங்கையில் நல்ல நிலையில் உள்ள இந்திய மீனவர்களின் படகுகளை மீட்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இலங்கையில் உள்ள தமிழக மீனவர்களின் விசைப்படகு மற்றும் நாட்டுப் படகுகளுக்கு தமிழக அரசு அறிவித்துள்ள இழப்பீடு ஏற்புடையது அல்ல. ஆகவே தமிழக அரசு இந்த அறிவிப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று தீர்மானங்கள் நிறை வேற்றியுள்ளனர்.