(Source: ECI/ABP News/ABP Majha)
காவல்துறையினர் மனிதனை மனிதனாக நடத்துவது தான் மனித தன்மை - மனித உரிமை ஆணைய உறுப்பினர் கண்ணதாசன்
யார் தவறு செய்தாலும் தப்பிக்க விடக்கூடாது என தமிழக அரசு எவ்வாறு உறுதியாக உள்ளதோ அதுபோல ஆணையமும் உள்ளது என்று அவர் தெரிவித்தார்.
மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் கண்ணதாசன் நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை மத்திய சிறையில் ஆய்வு மேற்கொண்டார். இதனை தொடர்ந்து அவர் பாளையங்கோட்டை புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள அரசினர் கூர்நோக்கு இல்லத்தில் ஆய்வை மேற்கொண்டார். அங்குள்ள சிறுவர்கள் வைக்கப்பட்டுள்ள அறை, அவர்களுக்கான உணவு தயாரிக்கும் சமையல் கூடம், பார்வையாளர் அமரும் இடம் உள்ளிட்டவைகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இதைத் தொடர்ந்து கண்ணதாசன் செய்தியாளருக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறும் பொழுது,
"பாளையங்கோட்டை கூர்நோக்கு இல்லத்தில் இருந்து 12 சிறுவர்கள் தப்பி சென்றதாக கிடைத்த தகவலின்படி சிறார்களின் பிரச்சினைகள் குறித்து விசாரிப்பதற்கு வந்திருக்கிறோம். தமிழகத்தில் உள்ள கூர்நோக்கு இல்லங்களில் பாதுகாப்பு தொடர்பாக ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறோம். இங்கு சிறு பாதுகாப்பு குறைபாடு காரணமாகவே இந்த சம்பவம் நடைபெற்றதாக தெரிகிறது. எதிர்வரும் காலங்களில் இது போன்று நடைபெறாத வண்ணம் ஆலோசனைகள் அளித்துள்ளோம். காவல்துறையும் சிறப்பான ஏற்பாடுகளை செய்துள்ளது. தப்பிச்சென்ற 12 பேரில் 11 பேர் பிடிபட்டு சிலர் பிணையில் சென்றுள்ளனர். இன்னும் ஒருவர் தான் கைது செய்யப்பட வேண்டும்" என்று தெரிவித்தார்.
"அம்பாசமுத்திரம் பகுதியில் பற்களை பிடுங்கி சித்திரவதை செய்த சம்பவத்தில் மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை நடத்தி வருகிறது. அமுதா ஐ ஏ எஸ் தலைமையிலான விசாரணை முடிந்து தற்போது சிபிசிஐடி விசாரணையில் மாற்றப்பட்டு உள்ளது. இருப்பினும் யாரெல்லாம் பாதிக்கப்பட்டு உள்ளனரோ அவர்கள் மாநில மனித உரிமை ஆணையத்திற்கு வந்து அவர்களது கருத்துக்களை பதிவு செய்தால் தொடர் நடவடிக்கை எடுக்கப்படும். மனித உரிமை மீறலை இந்த ஆணையம் நிச்சயமாக ஏற்றுக் கொள்ளாது. பாதிக்கப்பட்டவர்கள் எந்த வித தயக்கமும் இன்றி எங்களை அணுகலாம். புகாராக கொடுத்தாலோ வாக்குமூலமாக கொடுத்தாலோ மேற்கொண்டு நடவடிக்கைக்கு தயாராக இருக்கிறோம் என்றார். இதுவரை ஆறு ஏழு பேர் புகார் கொடுத்து உள்ளனர். அவர்கள் குறிப்பிட்டு சொல்லியிருப்பது அந்த ஐபிஎஸ் அதிகாரியை பற்றி தான். இந்த விவகாரத்தில் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுப்போம். பல்வேறு அமைப்புகள் விசாரணை நடத்திக் கொண்டிருக்கிறது. தமிழக முதல்வர் மிகவும் தெளிவாக உள்ளார். யார் தவறு செய்தாலும் தப்பிக்க விடக்கூடாது என தமிழக அரசு எவ்வாறு உறுதியாக உள்ளதோ அதுபோல ஆணையமும் உள்ளது" என்று அவர் தெரிவித்தார்.
எந்த காவல்துறையிலும் மனிதனை மனிதனாக நடத்துவது தான் மனித தன்மை. மனித தன்மைக்கு மாறாக அவர்களை துன்புறுத்தினாலோ அவமரியாதை செய்தாலோ அது மனித உரிமை மீறலாக தான் இருக்கும் என்றார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்