நெல்லை: ஸ்டாப்பில் நிற்காமல் பேருந்தை வேகமெடுத்த ஓட்டுநர் - கீழே விழுந்த மாணவர்கள்..! சிசிடிவி காட்சியால் பரபரப்பு..!
சுற்றறிக்கை அனுப்பிய நிலையிலும் மாணவர்களை ஒரு பொருட்டாக மதிக்காமல் அதிவேகமாக வாகனத்தை இயக்கிய ஓட்டுனரின் மனிதாபிமானம் இல்லாத செயல் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
நெல்லை ஸ்ரீபுரம் பகுதியில் அரசு உதவி பெறும் மேல்நிலை பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். நெல்லை நகர் மற்றும் புறநகர் பகுதியைச் சேர்ந்த மாணவர்கள் பள்ளிக்கு வருவதற்கு பெரும்பாலும் அரசு பேருந்தை தான் பயன்படுத்தி வருகின்றனர். இங்கு படிக்கும் பெரும்பாலான மாணவர்கள் ஏழை, எளிய, நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பதால் அரசின் பேருந்தில் இலவச பேருந்து பயண அட்டை மூலம் தங்களது பயணத்தையும் மேற்கொண்டு வருகின்றனர். வழக்கமாக பள்ளி முடிந்து நெல்லை நகர் மற்றும் அதன் ஒட்டி உள்ள பகுதிகளுக்கு செல்லும் டவுண் பேருந்துகளில் ஏறுவதற்காக பள்ளி முன்பு கூட்டமாக மாணவர்கள் நிற்பது வழக்கம். மாணவர்களை ஒழுங்குபடுத்தி பேருந்தில் ஏற்றி விடுவதற்காக பள்ளி சார்பில் இரண்டு ஆசிரியர்களும், காவல்துறையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருவார்கள்.
இந்த நிலையில் நேற்று நெல்லை சந்திப்பு பகுதியில் இருந்து முக்கூடல் நோக்கி சென்ற TN 72 N 1823 எண் கொண்ட டவுண் பேருந்து சந்திப்பு பேருந்து நிலையத்திலிருந்து புறப்பட்டு ஸ்ரீபுரம் டவுண் வழியாக முக்கூடலுக்கு செல்ல தொடங்கியது. அந்த பேருந்தை முருகன் என்பவர் ஒட்டி சென்றார். முத்துப்பாண்டி என்பவர் நடத்துனராக இருந்தார். ஸ்ரீபுரம் டவுன் சாலையில் அமைந்துள்ள சம்பந்தப்பட்ட அரசு உதவி பெறும் பள்ளி முன்பு அதிகமான மாணவர்கள் நின்று கொண்டிருந்ததை கவனித்த பேருந்தின் ஓட்டுநர் முருகன் மாணவர்கள் ஓடி வருவதை கண்டும் பேருந்தை நிறுத்தாமல் வேகமாக இயக்கினார். முக்கூடல் பேருந்தில் சென்றால் காட்சி மண்டபம், பேட்டை, சுத்தமல்லி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு மாணவர்கள் சென்று சேர முடியும் என்ற எண்ணத்தில் பேருந்தை நோக்கி முண்டியடித்துக் கொண்டு கூட்டமாக மாணவர்கள் ஓடிய நிலையில் ஓட்டுநரின் அலட்சியத்தால் பலர் கால் இடறி கீழே விழுந்து காயம் ஏற்பட்டது.
மேலும் வாகனங்கள் அதிகம் வரக்கூடிய மிக முக்கிய சாலையில் பேருந்தில் இடம் பிடிக்க மாணவர்கள் வேகமாக ஓடிய நிலையில் ஒன்றன்பின் ஒன்றாக வாகனங்களும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டு போக்குவரத்து நெருக்கடியும் ஏற்பட்டது. ஏற்கனவே பள்ளிக்கல்வித்துறை, போக்குவரத்து துறை அதிகாரிகள் ஓட்டுனர்களுக்கும், நடத்துனர்களுக்கும் பள்ளி மாணவர்களை அலைக்கழிக்காமல் பேருந்தில் ஏற்றி செல்ல வேண்டும் என சுற்றறிக்கை அனுப்பிய நிலையிலும் மாணவர்களை ஒரு பொருட்டாக மதிக்காமல் அதிவேகமாக வாகனத்தை இயக்கிய ஓட்டுனரின் மனிதாபிமானம் இல்லாத செயல் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. மேலும் பேருந்து நிற்காமல் செல்வது போன்றும் மணவர்கள் ஓடி சென்று ஏற முயல்வது போன்ற சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையில் இச்சம்பவம் குறித்து நெல்லை மண்டல போக்குவரத்துக் கழக அதிகாரிகள் துறை ரீதியான விசாரணை மேற்கொண்டு ஓட்டுனர் முருகன் மற்றும் நடத்துனர் முத்துப்பாண்டி இருவரையும் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளனர்.