Nellai Rain: களக்காடு தலையணை & நம்பிகோவிலுக்கு செல்ல தடை.. தொடர் மழையால் வனத்துறை அறிக்கை..
கண்ணடியன் கால்வாய் மற்றும் களக்காடு பகுதிகளில் 33 மில்லி மீட்டர் மழையும், பாபநாசம் பகுதியில் 31 மில்லி மீட்டர் மழையும் அம்பாசமுத்திரம் பகுதியில் 30 மில்லி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.
அரபிக் கடல் பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தென் தமிழகத்தில் அதிக கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி நெல்லை மாவட்டத்தில் நேற்று இரவு முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மாநகர் பகுதியிலும் நெல்லை சந்திப்பு, பாளையங்கோட்டை, வண்ணார்பேட்டை, டவுண், கேடிசி நகர் , உள்ளிட்ட பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது நெல்லை மாவட்டத்தில் 24 மணி நேரத்தில் 323.80 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக ராதாபுரம் பகுதியில் 36 மில்லி மீட்டர் மழையும் கண்ணடியன் கால்வாய் மற்றும் களக்காடு பகுதிகளில் 33 மில்லி மீட்டர் மழையும், பாபநாசம் பகுதியில் 31 மில்லி மீட்டர் மழையும் அம்பாசமுத்திரம் பகுதியில் 30 மில்லி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.
மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியிலும் கன மழை பெய்வதன் காரணமாக களக்காடு தலையணையில் நீர்வரத்து அதிகரித்து உள்ளதால் தலையணையில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். இதுபோன்று களக்காடு அருகே உள்ள திருக்குறுங்குடி நம்பியாற்றிலும் நீர்வரத்து அதிகரித்து உள்ளதால் வனப்பகுதியில் உள்ள நம்பி கோவிலுக்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். மேலும் நீர் நிலைகளில் பொதுமக்கள் இறங்க வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தொடர்ந்து மாவட்டம் முழுவதும் மழை கண்காணிப்பு பணிகளை மேற்கொள்வதற்கு தாலுகா வாரியாக அதிகாரிகள் நியமிக்கப்பட்டு கண்காணிப்பு பணிகளும் தீவிர படுத்தப்பட்டுள்ளது. 24 மணி நேரம் செயல்படக்கூடிய மாவட்ட கட்டுப்பாட்டு அறையும், பொதுமக்கள் புகார்கள் மற்றும் தகவல்களை தெரிவிப்பதற்கு ஏதுவாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. நெல்லை மாவட்டத்தில் நேற்று இரவு முதல் பெய்த தொடர் மழையின் காரணமாக பல்வேறு இடங்களில் சாலைகளில் மழை நீர் தேங்கியுள்ளது. அதோடு பல்வேறு கிராமங்களில் வீடுகளை வெள்ள நீர் சூழ்ந்து உள்ளது.
மேலும் பொதுமக்கள் அத்தியாவசிய தேவையான குடிநீர், ஓரிரு நாட்களுக்கு தேவையான அத்தியாவசிய உணவுப் பொருட்கள் கையிருப்பில் வைத்துக் கொள்ளுமாறு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. மெழுகுவர்த்தி, டார்ச் லைட், மொபைல் பவர் பேங்க், கொசுவர்த்தி உள்ளிட்டவை கையிருப்பு இருக்க வேண்டும். ஒரு சில இடங்களில் மின் சப்ளை பாதிப்பு இருக்க வாய்ப்புள்ளது என்பதால் குடிநீர் சப்ளை மற்றும் போர் மோட்டார் இயக்கத்தில் தடை ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே எங்கெங்கு வாய்ப்புள்ளதோ அந்த ஊர்களில் எல்லாம் குடிநீர் டேங்க், சின்டெக்ஸ் டேங்க் உள்ளிட்டவற்றை இன்றே நிரப்பி வைத்திட கேட்டுக் கொள்ளப்படுகிறது என மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.