நெல்லையில் அதிர்ச்சி - மூவரை கொடூரமாக தாக்கிய மந்தி வகை குரங்குகள்
இரு வகையான குரங்கள் ஊருக்குள் அட்டகாசம் செய்து வரும் நிலையில் அனைத்தையும் பிடித்து வனத்தில் கொண்டு விடவும், ஊருக்குள் மீண்டும் வராத வண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர்.
நெல்லை மாவட்டம் பாபநாசம் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் வெள்ளை குரங்கு, கருப்பு நிற மந்தி உள்ளிட்ட பல்வேறு வகையான குரங்கு இனங்கள் உள்ளன. இவை மலைப்பகுதிகளிலும், நீர்பிடிப்பு பகுதிகளிலும் வசித்து வந்தது. குறிப்பாக கடந்த இரண்டு, மூன்று ஆண்டுகளாக கூட்டம் கூட்டமாக ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகிறது. அடிக்கடி மலையில் இருந்து இறங்கி அருகில் உள்ள சிவந்திபுரம், வி.கே.புரம், டாணா போன்ற மக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதியில் சர்வ சாதாரணமாக சுற்றி திரிகிறது. இந்த குரங்குகள் வீடுகளில் உள்ள பொருட்களை தூக்கிச் செல்வது, வீடுகளில் வளர்க்கப்படும் செடி, மரங்களை சேதப்படுத்துவது பொதுமக்களை அச்சுறுத்துவது என பொதுமக்களை பெரும் இன்னலுக்கு ஆளாக்கி வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு டாணா பகுதியில் கணேசன் என்பவரது வீட்டில் கூண்டு வைத்து 20க்கும் மேற்பட்ட மந்திகளை பிடித்து வனப்பகுதியில் கொண்டு விட்டனர். இருப்பினும் அங்குள்ள பழமையான பெரிய பெரிய மரங்களில் இரவு நேரம் தங்கியிருப்பதும், அதிகாலை மரத்திலிருந்து இறங்கி ஊருக்குள் பொதுமக்களுக்கு தொந்தரவு கொடுப்பதுமாக இருக்கிறது. இரு வகையான குரங்கள் ஊருக்குள் அட்டகாசம் செய்து வரும் நிலையில் அனைத்தையும் பிடித்து வனத்தில் கொண்டு விடவும், ஊருக்குள் மீண்டும் வராத வண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர்..
இந்த நிலையில் பாபநாசம் அருகே சிவந்திபுரம் பகுதியைச் சேர்ந்த தங்கம் என்ற மூதாட்டியையும் அதே ஊரில் கொத்தனார் வேலை பார்த்து வந்த சுதாகர் என்பவரையும் இரண்டு நாட்களுக்கு முன்பு மந்தி இன குரங்கு வெறித்தனமாக தாக்கியது. இருவரும் காயங்களுடன் அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் குறிப்பிட்ட சில குரங்குகள் ஊருக்குள் அட்டகாசம் செய்து வருவதோடு மிகவும் மூர்க்கமாக மக்களிடம் நடந்து கொள்வதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியதுடன் வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.. எனவே பொதுமக்களை தாக்கிய குரங்கை பிடிக்க வனத்துறை இணை இயக்குனர் இளையராஜா உத்தரவின் பேரில் சிவந்திபுரம் பகுதியில் கூண்டு வைக்கப்பட்டது.
ஆனாலும் கூண்டுக்குள் குரங்குகள் அகப்படாத நிலையில் நேற்றும் சிவந்திபுரம் பகுதியைச் சேர்ந்த கிளாட்சன் என்பவரையும் குரங்கு ஒன்று கடுமையாக வலது கையில் தாக்கியது. தொடர்ந்து காயமடைந்த அவரையும் அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு எட்டு தையல் போடப்பட்டுள்ளது, இது போன்று தொடர்ந்து அடுத்தடுத்து இரண்டு நாட்களில் மூன்று பேரை தாக்கிய குரங்கை பிடிக்க வனத்துறையினர் அங்கு தீவிர முகாமிட்டனர். இந்நிலையில் கூண்டுக்குள் குரங்கு அகப்படாத நிலையில் வன கால்நடை மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு மயக்க ஊசி செலுத்தி குரங்குகளை பிடிக்கும் பணி நடைபெற்றது. இணை இயக்குனர் இளையராஜா மற்றும் வனச்சரகர் சத்தியவேல் ஆகியோர் சம்பவ இடத்தில் நேரில் ஆய்வு செய்தனர். பின்னர் வன கால்நடை மருத்துவர் மனோகரன் தலைமையிலான குழுவினர் சிவந்திபுரம் பகுதியில் 3 பேரை தாக்கிய இரண்டு குரங்குகளை துப்பாக்கி மூலம் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். பிடிபட்ட இரண்டு குரங்குகளையும் வனத்துறையினர் பாதுகாப்பாக கொண்டு சென்று வனப்பகுதியில் விட்டனர்.