Nellai: அதிகாரிகளின் சான்றிதழ் பெற்றே கிரைய ஒப்பந்தம்; நீதிமன்றத்தை நாடுவேன் - நயினார் பாலாஜி
நிலத்தை பத்திர பதிவு செய்ததாக பொய்யாக அரசியல் காழ்ப்புணர்ச்சியில் என் மீது குற்றச்சாட்டுகளை முன் வைக்கின்றனர்.
தமிழக பாஜக சட்டமன்ற குழு தலைவரும், திருநெல்வேலி தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினருமான நயினார் நாகேந்திரனின் மகன் நயினார் பாலாஜி பாஜக கட்சியில் மாநில இளைஞரணி துணைத் தலைவராக உள்ளார். இந்த நிலையில் பாஜக நிர்வாகி நயினார் பாலாஜி சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள 100 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை மதுரையைச் சேர்ந்த இளையராஜா என்பவருடன் சேர்ந்து மோசடியாக பத்திரப்பதிவு செய்திருப்பதாக அறப்போர் இயக்கம் நயினார் பாலாஜி மீது குற்றம் சாட்டி இருந்தது. மேலும் இளையராஜா சட்டத்துக்கு புறம்பாக நெல்லை மாவட்டம் ராதாபுரத்தில் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் இடத்தையும் அதனுடன் சேர்ந்து விருகம்பாக்கம் இடத்தையும் நயினார் பாலாஜிக்கு கிரயம் செய்து கொடுத்ததாக கூறப்பட்டது. மோசடி தொடர்பான ஆதாரங்களை அறப்போர் இயக்கம் புகாராக தலைமைச் செயலர், சென்னை காவல்துறை மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர், செயலர் மற்றும் வருவாத செயலருக்கு அனுப்பி வைத்தது.
இந்த நிலையில் அது குறித்து விசாரணை மேற்கொண்டதன் அடிப்படையில் நயினார் பாலாஜி பெயரில் பத்திர பதிவு செய்யப்பட்ட உத்தரவை இன்று ராதாபுரம் பத்திர பதிவுத்துறை துணை தலைவர் அதிரடியாக ரத்து செய்திருப்பதாக தகவல்கள் வெளியானது. பாஜகவின் முக்கிய பொறுப்பில் இருக்கும் நயினார் பாலாஜி 100 கோடி அளவில் மோசடி செய்திருப்பதாக வெளியான இந்த குற்றச்சாட்டு தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் தன் மீதான குற்றச்சாட்டு குறித்து பாஜக மாநில இளைஞரணி துணை தலைவர் நயினார் பாலாஜி நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் கூறும் பொழுது, “பலர் 77 A பிரிவை தவறாக பயன்படுத்துகின்றனர். அதனால் 77 A இன் படி எந்த பத்திரத்தையும் ரத்து செய்யக்கூடாது அதில் உள்ள நல்லது கெட்டதை முடிவு செய்யும் அதிகாரம் நீதிமன்றத்திற்கு தான் உள்ளது. பத்திரப்பதிவு துறைக்கு இல்லை என உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. அந்த உத்தரவிற்கு பின் ஒரு மாதம் கழித்து என்னுடைய பத்திரத்தை அதே 77A க்கு உட்பட்டு ரத்து செய்துள்ளனர்.
ஒரே அதிகாரி இரு வேறு நேரங்களில் இரு வேறு முடிவுகளை அறிவித்துள்ளார். அங்கீகரிக்கப்பட்ட வழக்கறிஞர் மூலம் ஆவணங்களை அரசிடமிருந்து தான் பெற்றுள்ளோம். எனவே இதை நீக்கியது செல்லாது. இனி நீதிமன்றம் மூலம் எதிர்கொள்ள உள்ளோம். ரூ.46 கோடி மதிப்புள்ள நிலத்தை 100 கோடி என்றும் நிலம் வாங்குவதற்கான ஒப்பந்தம் மட்டுமே போடப்பட்ட நிலையில் நிலத்தை பத்திர பதிவு செய்ததாக பொய்யாக அரசியல் காழ்ப்புணர்ச்சியில் என் மீது குற்றச்சாட்டுகளை முன் வைக்கின்றனர். இந்த நிலம் வாங்குவதில் சட்டபூர்வமாக எந்த பிரச்சனையும் இல்லை எனக் கூறியது தமிழக அரசு வழக்கறிஞர். இதனை தொடர்ந்து வட்டாட்சியர் இது சம்பந்தமான ஆவணங்களை அளித்ததன் அடிப்படையில் தான் நிலம் வாங்க கிரைய ஒப்பந்தம் போடப்பட்டது. நிலத்தை அதற்குள் பத்திர பதிவு செய்து மோசடி செய்ததாக பொய்யாக குற்றஞ்சாட்டுவது அரசியல் ரீதியான காழ்ப்புணர்ச்சியே என்று நினைக்கத் தோன்றுகிறது” என்றார்
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்