Trump: பாலியல் சர்ச்சை, ரிலீசாகிறது எப்ஸ்டீன் ஃபைல்ஸ்..கலக்கத்தில் அமெரிக்கா, சிக்கும் ட்ரம்ப், மஸ்க், க்ளிண்டன்
Epstein File Trump: அமெரிக்காவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள பாலியல் வழக்கு தொடர்பான எப்ஸ்டீன் கோப்புகளை வெளியிட, அதிபர் ட்ரம்ப் அனுமதி அளித்துள்ளார்.

Epstein File Trump: எப்ஸ்டீன் கோப்புகளில் தற்போதைய அதிபர் ட்ரம்ப் மற்றும் முன்னாள் அதிபர் பில் க்ளிண்டன் என பலரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
அனுமதி அளித்த ட்ரம்ப்:
அமெரிக்க மக்களின் ஆர்வத்தையும், அரசியல் விவாதத்தையும் தூண்டிய வழக்கில் சிக்கிய, நீண்ட காலமாக சீல் வைக்கப்பட்டிருந்த ஜெஃப்ரி எப்ஸ்டீனுடன் தொடர்புடைய கோப்புகளை வெளியிடுவதற்கு அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அனுமதி அளித்துள்ளார். ஆவணங்களை பொதுமக்களுக்கு வெளியிடுமாறு பல மாதங்களாக நிலவும் அழுத்தம் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எப்ஸ்டீன் கோப்புகளைத் திறக்க வேண்டிய நேரம் இது என்று, நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து இந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
எப்ஸ்டீன் கோப்புகள் என்றால் என்ன?
கடத்தல் மற்றும் பாலியல் குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைக்காக சிறையில் அடைக்கப்பட்டு இருந்த ஜெஃப்ரி எப்ஸ்டீன், 2019 ஆம் ஆண்டு தனது சிறை அறையில் தற்கொலை செய்து கொண்டார். அவர் 2002 முதல் 2005 வரையிலான காலகட்டத்தில் 14 வயதுக்குட்பட்ட சிறார்களைத் தேடிச் சென்று, அதிகப்படியான பணத்தை கொடுத்து நியூயார்க் நகர டவுன்ஹவுஸ் அல்லது புளோரிடாவின் பாம் பீச்சில் உள்ள தனது எஸ்டேட்டில், பாலியல் செயல்களில் ஈடுபடுத்தியாக கூறப்படுகிறது. இந்த வழக்கு தொடர்பான விசாரணையின் போது எப்ஸ்டீன், கிஸ்லைன் மேக்ஸ்வெல் மற்றும் அவர்களது கூட்டாளிகளிடம் இருந்து சேகரிக்கப்பட்ட ஆவணங்களே, தற்போது எப்ஸ்டீன் கோப்புகள் என்று பொதுவாகக் குறிப்பிடப்படுகின்றன.
”எப்ஸ்டீன் ஃபைல்ஸ்” வாடிக்கையாளர் பட்டியல்
FBI இன் வழக்கு மேலாண்மை அமைப்பிற்குள் வைக்கப்பட்டுள்ள எப்ஸ்டீன் ஃபைல்ஸ் ஆவணங்கள், 300 ஜிகாபைட்களுக்கும் அதிகமான தரவைக் கொண்டுள்ளன. உள்ளடக்கங்களில் எப்ஸ்டீனின் "வாடிக்கையாளர் பட்டியல்" இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. அதாவது சிறார்களை பயன்படுத்தி எப்ஸ்டீன் பாலியல் தொழில் செய்தபோது, அவரின் வாடிக்கையாளர்களாக இருந்த நபர்களின் விவரங்கள் அடங்கியுள்ளதாக தெரிகிறது. இதில் ட்ரம்ப் மற்றும் முன்னாள் அதிபர் பில் கிளிண்டன் தொடங்கி பிரிட்டிஷ் அரச குடும்பத்தைச் சேர்ந்த ஆண்ட்ரூ வரை பல உயர்மட்ட நபர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளன.
கடும் அழுத்தம்:
எப்ஸ்டீன் ஃபைல்ஸ் விவரங்களை பொதுவெளியில் வெளியிட வேண்டும் என நீண்டகாலமாக வலியுறுத்தப்பட்டு வருகிறது. ஆனால், அதனை அரசாங்கம் மறுத்து வருகிறது. ட்ரம்பின் நிர்வாகமும் அதே நடைமுறையை பின்பற்ற, வாடிக்கையாளர்களின் பட்டியலில் அவரின் பெயரும் இருப்பதாலேயே அதனை வெளியிட ட்ரம்ப் மறுப்பதாக ஊடகங்கள் குற்றம்சாட்டின. மறைப்பதற்கு ஏதும் இல்லை என்றால் ஆவணங்களை வெளியிட வேண்டியது தானே என கேட்ட பெண் செய்தியாளரை, “வாயை மூடு, பன்றி” என ட்ரம்ப் திட்டியது பெரும் பரபரப்பை அதிருப்தியை ஏற்படுத்தியது. அதைதொடர்ந்து நாடாளுமன்றத்தின் தரப்பில் இருந்தும் அழுத்தம் எழ, எப்ஸ்டீன் ஃபைல்களை வெளியிட ட்ரம்ப் அனுமதி அளித்துள்ளார். இதனால் யார் யார் தலை உருளப்போகிறது என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.
எப்ஸ்டீன் பட்டியலில் உள்ள பெயர்கள்?
- டொனால்ட் ட்ரம்ப் - அமெரிக்க அதிபர்
- பில் க்ளிண்டன் - முன்னாள் அதிபர்
- லாரி சம்மர்ஸ் - முன்னாள் நிதி அமைச்சர்
- ராபர்ட் எஃப். கென்னடி ஜூனியர் - சுகாதார அமைச்சர்
- இளவரசர் ஆண்ட்ரூ, டியூக் ஆஃப் யார்க் - கிங் சார்லஸ் III இன் சகோதரர்
- சாரா பெர்குசன் - டச்சஸ் ஆஃப் யார்க்
- எலான் மஸ்க் - தொழிலதிபர்
- மைக்கேல் ஜாக்சன் - இசைத்துறை ஜாம்பவான்
- க்றிஸ் டக்கர் – நடிகர்
- மார்லா மேப்பிள்ஸ் – ட்ரம்பின் முன்னாள் மனைவி
- டிஃப்பனி ட்ரம்ப் – ட்ரம்பின் மகள்
என இந்த பட்டியலில் பல பிரபலங்களின் பெயர்கள் இருப்பதாக கூறப்படுகிறது.





















