2024ல் மக்களை சந்திக்கும் ஊழல்கூட்டணிக்கு அவர்கள் நல்லதீர்ப்பை வழங்கவேண்டும் - நயினார் நாகேந்திரன்
ரூ.6000 நிவாரணம் வழங்குவது போதாது. குறைந்தபட்சமாக 15 ஆயிரமாக கொடுக்க வேண்டும்.
நெல்லை பாஜக அலுவலகத்தில் தமிழக பாஜக சட்டமன்ற குழு தலைவரும், நெல்லை சட்டமன்ற உறுப்பினருமான நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "2016 ம் ஆண்டுக்கு முன்னர் காங்கிரஸ் கட்சி கிட்டத்தட்ட 60 ஆண்டு காலம் இந்தியவை ஆட்சி செய்தது. காங்கிரஸ் இந்தியாவை ஆண்ட போது தான் ஊழல் குற்றச்சாட்டுக்கு பெயர் போன கட்சி என பல்வேறு சமயங்களில் நிரூபிக்கப்பட்டது. 2014 க்கு பிறகு பிரதமர் மோடி தலைமையில் 10 வது ஆண்டை அடியெடுத்து வைத்து அடுத்து 15, அடுத்து 20 வது ஆண்டையும் நிறைவேற்றும் சூழல் இருக்கும் நிலையில் ஒரு ஊழல் குற்றச்சாட்டை கூட பாஜக மீதோ அதன் பிரதமர் மீதோ, சட்டமன்ற, நாடளுமன்ற உறுப்பினர்கள் மீதோ ஒரு குற்றச்சாட்டை கூட சொல்ல முடியாது, காங்கிரஸ் கட்சி திமுக கூட்டணியில் இருந்த போது கூட 1 கோடியே 69 லட்சம் ஊழல், 2 ஜி ஊழல் அதற்கு முன் காமன்வெல்த் கேம்ஸில் 75 கோடி ரூபாய் ஊழல் என சொல்லிக்கொண்டே போகலாம். இப்போது கூட காங்கிரஸ் 350 கோடி ரூபாய்க்கு மேல் ஊழல் என செய்தி வந்து கொண்டிருக்கிறது. பாஜக கட்சி ஊழல் இல்லாத கட்சி.
இந்தியா கூட்டணி ஊழல் நிறைந்த கூட்டணி. இந்திய மக்களின் நலன் கருதாத கூட்டணி காங்கிரஸ் கூட்டணி. இனியும் காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்கு வரவேண்டுமா என்பது தான் எங்களது கேள்வி? ஊழல் மிகுந்த காங்கிரஸ் உடன் திமுக கூட்டணியில் உள்ளது. செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை குற்றச்சாட்டை சுமத்தி சிறையில் உள்ளார். இப்படிபட்ட கூட்டணி 2024 இல் மக்களை சந்திக்க இருக்கின்றனர். மக்கள் நல்ல தீர்ப்பை வழங்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்" என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், "பாஜக தமிழக சட்டமன்ற குழு மிக்ஜாம் புயலுக்கான வெள்ள நிவாரணத்திற்கு ஒரு மாத ஊதியத்தை வழங்க உள்ளது. சென்னையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு வழங்கும் ரூ.6000 நிவாரணம் வழங்குவது போதாது. குறைந்தபட்சமாக 15 ஆயிரமாக கொடுக்க வேண்டும். கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் உயிரிழந்த குழந்தையின் உடல் முறையாக மரியாதையாக வழங்கியிருக்கவேண்டும். சுகாதாரத்துறை அமைச்சர் இந்த விவகாரத்தில் சொல்லிய பதில் ஏற்றுகொள்ள முடியாது. பொறுப்பான முறையான பதிலை தெரிவித்திருக்க வேண்டும். அதிமுகவுடன் பாஜக கூட்டணியா இல்லையா என்பதை பாஜக மேல் மட்டம் முடிவு செய்யும். பாஜக நாடாளுமன்ற தேர்தலில் 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும்" என தெரிவித்தார்.