வெள்ள பாதிப்பு உதவி குறித்து தேவையில்லாமல் அரசியல் பேச வேண்டாம் - ஆளுநர் தமிழிசைக்கு உதயநிதி பதிலடி
இதுவரை கணக்கெடுப்பின்படி மொத்த நிவாரண தொகையான ரூ.2,87,07,700 இல் இன்று முதற்கட்டமாக அமைச்சர் உதய நிதி ஸ்டாலின் 21 நபர்களுக்கு 58,14,000 நிவாரணத் தொகையை வழங்கினார்.
நெல்லை மாவட்டத்தில் சமீபத்தில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் உயிரிழந்த நபர்களின் குடும்பத்தினர், ஆடு மாடு போன்ற கால்நடைகள் மற்றும் வீடுகளை இழந்தோருக்கு நிவாரண நிதி வழங்கும் நிகழ்வு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பாதிக்கப்பட்ட நபர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார். அதைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ”நெல்லை மாவட்டத்தில் வெள்ளத்தால் உயிரிழந்தவர்களில் முதல் கட்டமாக 11 பேருக்கு ஐந்து லட்சம் ரூபாய் நிவாரணம் கொடுத்துள்ளோம். இதுதவிர கால்நடை வீடுகளை இழந்தோருக்கு சர்வே எடுத்து முதல்கட்ட நிவாரண தொகை அளிக்கப்பட்டுள்ளது. விரைவில் அனைத்து நிவாரணமும் வழங்கப்படும்” என்றார்.
தொடர்ந்து, தென் தமிழகத்துக்கு தேவையான உதவியை செய்யவில்லை என தெலுங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் முன்வைத்துள்ள குற்றச்சாட்டு குறித்து கேள்வி எழுப்பியபோது, அதை தானே செய்து கொண்டிருக்கிறோம். அதை தான் ஒன்றிய அரசிடமும் கேட்டுள்ளோம். முதல்வரும் நிவாரணம் அறிவித்து கடந்த 10 நாட்களாக அமைச்சர்கள், மக்கள் பிரதிநிதிகள் அரசு அதிகாரிகள் என அத்துனை பேரும் செய்து கொண்டு வருகிறோம். தேவையில்லாமல் அரசியல் பேச வேண்டாம் என தெரிவித்தார். குளம் தூர்வாரப்படவில்லை என்று குற்றச்சாட்டு எழுவது குறித்து கேட்டதற்கு, அரசியல் காரணமாக பேசிக் கொண்டிருக்கிறார்கள். அனைத்து விதமான பணிகளும் தொடர்ந்து செய்து கொண்டு தான் இருக்கிறோம். இது கிட்டத்தட்ட வரலாறு காணாத மழை. இதை மக்கள் புரிந்து கொள்வார்கள் என தெரிவித்தார். மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாளை வருவது குறித்து கேட்டதற்கு, முதலில் இது பேரிடர் இல்லை என்றார்கள், இப்போது பேரிடரை பார்ப்பதற்கு வருகிறார்கள், கண்டிப்பாக வந்து பார்த்துவிட்டு தகுந்த நிதி கொடுப்பார்கள். அதே போல பிரதமரும் முதல்வரை தொலைபேசியில் அழைத்து பேசியுள்ளார். முதல்வரும் தகுந்த நிதி கொடுக்க வேண்டும் என வேண்டுகோள் வைத்துள்ளார். எனவே ஒன்றிய அமைச்சர் வந்து பார்த்துவிட்டு தகுந்த நிதியை கொடுப்பார் என தெரிவித்தார்.
நெல்லையில் மழை வெள்ளத்தால் உயிரிழந்த 16 பேரின் குடும்பங்களுக்கு ரூ.5 லட்சம் வீதம் 80,00,000 ரூபாயும், 67 மாடுகள் இழப்பிற்கு 37500 வீதம் 25,12,500 ரூபாயும், வீடுகளை இழந்த 1064 குடும்பங்களுக்கு 10,000 வீதம் 10,640,000 ரூபாயும், ஆடுகள் இழப்பு 504 குடும்பங்களுக்கு 4000 வீதம் 20,16,000 ரூபாயும், கன்று இழப்பு 135 வீதம் நபர் ஒன்றுக்கு 20,000 என மொத்தம் 27,00,000 ரூபாயும், கோழி இழப்பு 28392 வீதம் நபர் ஒன்றுக்கு 100 ரூ என 2839200 ரூபாயும் வழங்கப்பட உள்ளது. மேலும் இதுவரை கணக்கெடுப்பின்படி மொத்த நிவாரண தொகையான ரூ 2,87,07,700 இல் இன்று முதற்கட்டமாக அமைச்சர் உதய நிதி ஸ்டாலின் 21 நபர்களுக்கு 58,14,000 நிவாரணத் தொகையை வழங்கினார்.