PTR Speech: நாங்கள் ஆட்சிக்கு வரும்போது இருந்த நிதி நெருக்கடி தற்போதும் இருக்கிறது - அமைச்சர் பி.டி.ஆர். பேச்சு
அரசே அனைத்து மாவட்டங்களிலும், தொழில்நுட்ப பூங்காக்கள் அமைப்பதற்கு நிதி ஆதாரம் இன்றைய நிலையில் போதாது என்று அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் பேசியுள்ளார்.

நெல்லை பாளையங்கோட்டை சதக்கத்துல்லா அப்பா கல்லூரி பொன்விழா ஆண்டு நிறைவு நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக தமிழக தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணை வேந்தர் சந்திரசேகர், பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் வஹாப், முன்னாள் அமைச்சர் டிபிஎம் மைதீன் கான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
விழாவில் கல்லூரி பொன்விழா ஆண்டை ஒட்டி நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கல்லூரி பொன்விழா மலரை மனோன்மணிய சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தர் வெளியிட அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் பெற்றுக் கொண்டார். தொடர்ந்து சிறப்புரை நிகழ்த்திய அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் பேசும் பொழுது,
நிதி நெருக்கடி:
"நெல்லை பாளையங்கோட்டையில் உள்ள சதக்கத்துல்லா அப்பா கல்லூரி 50 ஆண்டுகளில் பல்வேறு சாதனைகளை மேற்கொண்டுள்ளது. கல்வி ஒரு மனிதனின் தரத்தை உயர்த்தும் வாழ்க்கை முறையை சிறப்பிப்பதற்கு வாய்ப்பு அளிக்கும். ஒரு சிறந்த கல்லூரி சமுதாயத்தில் மாற்றத்தை உருவாக்குவதற்கு பணி செய்யும். இந்த கல்லூரி மென்மேலும் வளர்ந்து நிகர் நிலை பல்கலைக்கழகமாக மாறுவதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தில் தென் மாவட்டங்களில் தான் கல்வி சதவீதம் கல்லூரிகளுக்கு இணையாக உள்ளது. ஆனால் தென் தமிழகத்தில் வேலை வாய்ப்புகள் அதிகமாக இல்லை.
இதனை கருத்தில் கொண்டு தமிழக முதலமைச்சர் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி என்ற நோக்கில் அனைத்து மாவட்டங்களிலும் வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும் என்ற நோக்கில் அனைத்து திட்டங்களையும் வழங்கிக் கொண்டிருக்கிறார். அதன் அடிப்படையில் நெல்லை உள்ளிட்ட பல மாவட்டங்களில் தொழில்நுட்ப பூங்காக்கள் மற்றும் அதேபோல் பல முயற்சிகள் சட்டமன்றத்தில் அரசால் அறிவிக்கப்பட்டு செயல்பாட்டிற்கு வரும் சூழ்நிலையில் இருக்கிறது. நாங்கள் ஆட்சிக்கு வரும்பொழுது இருந்த கடினமான நிதி நெருக்கடி தற்போதும் நீடித்து வருகிறது. அரசே அனைத்து மாவட்டங்களிலும், தொழில்நுட்ப பூங்காக்கள் அமைப்பதற்கு நிதி ஆதாரம் இன்றைய நிலையில் போதாது.
மாதந்தோறும் 10 ஆயிரம் வேலை வாய்ப்புகள்:
ஆனால் உலக அளவில் இருக்கும் பொருளாதாரச் சூழலில் ஐடி வேலைவாய்ப்புகள் இந்தியாவிலும் குறிப்பாக தமிழகத்திலும் மிகுந்த வேகத்தில் உருவாகி வருகிறது. தமிழகத்தில் மாதத்திற்கு பத்தாயிரம் வேலை வாய்ப்புகள் ஐடி துறையில் உருவாகி வருகிறது. அரசு முயற்சி எடுத்து இதனை இரண்டு அல்லது மூன்று மடங்கு உயர்த்துவதற்கு திட்டமிட்டுள்ளது.
அதற்கு தொழில்நுட்ப பூங்காக்கள் எவ்வளவு முக்கியமோ அதேபோல் சரியான நிறுவனங்களை உலக அளவில் கண்டறிந்து அவர்களுக்கு உதவி செய்து ஊக்கமளித்து அவர்களுடைய பிரச்சனைகளையும், தடைகளையும் நீக்கி வெளிநாட்டு நிறுவனங்கள் தமிழகத்தில் வந்து கூடுதல் வேலை வாய்ப்பை உருவாக்குவதற்கு அரசின் கடமையாக கருதி பணி செய்து வருகிறது. அரசு அந்த நடவடிக்கை மீது கூடுதல் கவனம் செலுத்தி அதனை சிறப்பிக்க வழி செய்து வருகிறது என தெரிவித்தார்.





















