கொரோனாவின்போது கடந்த ஆட்சியில் 3 மாதமாக வணிகர்களை உழைக்க விடவில்லை - அமைச்சர் கீதாஜீவன்
கடந்த ஆட்சியில் கொரோனா காலத்தில் மூன்று மாதமாக வணிகர்களை உழைக்க விடவில்லை என சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி மண்டல தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு கூட்டம் தூத்துக்குடியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. கூட்டத்துக்கு மண்டல தலைவர் வைகுண்டராஜா தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளர்களாக சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றினர். பேரமைப்பு மாநிலத்தலைவர் விக்கிரமராஜா மே-5 மாநாடு குறித்து பேசினார். கூட்டத்தில் தையல் எந்திரம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன.
கூட்டத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் பேசும் போது, வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரமராஜா பல்லாண்டு காலமாக வணிகர்களுடைய பிரதிநிதியாக இருந்து வருகிறார். வணிகர்களின் பிரச்சனையை தீர்க்கக் கூடியவராக, பிரச்சனைகளுக்கு தீர்வு காணக்கூடியவராக இருந்து செயல்பட்டு வருகிறார். கடந்த ஆட்சியில் கொரோனா காலத்தில் மூன்று மாதமாக வணிகர்களை உழைக்க விடவில்லை. அல்லும், பகலும் பாராமல் உழைக்கக் கூடியவர்கள் தான் வியாபாரிகள். ஆனால் தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு கொரோனாவுக்காக யாரையும் கடையை அடைக்க சொல்லவில்லை. ஆனால் அனைவரையும் தடுப்பூசி செலுத்த அறிவுறுத்தினார்கள். இதனால் நாம் பாதுகாப்பாக இருக்கிறோம். வியாபாரிகளுக்கு கலைஞர் எப்போதும் ஆதரவாக இருந்தார். அதே போன்று தற்போதும் அரசு ஆதரவாக இருக்கிறது விக்கிரமராஜா அளித்த கோரிக்கையின் பேரில் செஸ் வரி முழுமையாக ரத்து செய்யப்பட்டது. அதே போன்று இரவு நேரத்தில் கடை திறக்க தமிழக முதலமைச்சர் அனுமதி அளித்தார்.பாரம்பரியமான தொழிலை செய்வது நல்லது. நம் குழந்தைகளுக்கு அதனை சொல்லி கொடுத்து வியாபாரத்தில் ஈடுபடுத்தும் போது, பொருளாதார வளர்ச்சி ஏற்படும் என்று கூறினார்.
கூட்டத்தில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரமராஜா பேசும் போது, வணிகர்கள் பல்வேறு கோரிக்கைகளை தந்து இருக்கிறீர்கள். இந்த கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். வருகிற மே 5-ந் தேதி ஈரோட்டில் வணிகர் முழக்க மாநாடு நடக்கிறது. மத்திய அரசு உணவு பாதுகாப்பு சட்டத்தை கொண்டு வந்து உள்ளது. அந்த சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தினால், உணவு வணிகர்கள் தொழில் செய்ய முடியாது. ஜி.எஸ்.டி. வரி விதிப்பு தொடர்பாக வணிகவரித்துறை அதிகாரிகள் கடுமையாக வாகன சோதனைகளை நடத்தி வருகின்றனர் அவர்களுக்கு வணிகர்களின் பிரச்சினை தெரியாது. வணிகர்கள் வட்டிக்கு பணம் வாங்கி தொழில் செய்து வருகின்றனர்.
மத்திய, மாநில அரசுகள் வணிகர்களை ஏளனமாக எண்ணக்கூடாது. ஆகையால் வருகிற நாடாளுமன்ற தேர்தலில் நமது வாக்கு எந்த பக்கம் சாய்கிறதோ அவர்கள்தான் ஆட்சி அமைக்க முடியும். இதனை உணர்த்தக்கூடிய வகையில் ஈரோடு மாநாடு அமைய உள்ளது. மஞ்சள் நகரமான ஈரோட்டில் மாநாடு நடைபெறுவதால், பேரமைப்பின் இருவர்ண கொடியை மூவர்ண கொடியாக மாற்றி உள்ளோம் என்றார்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த விக்கிரமராஜா, ஸ்டெர்லைட் விவகாரத்தில் எங்கள் நிலைப்பாடு என்ன என்று சமூக வலைதளங்களில் பதிவுகள் வருகின்றன. நாங்கள் தனிநபருக்கு துணை போவதில்லை. எங்கள் அமைப்பு ஜனநாயக முறைப்படி செயல்படுகிறது. இந்த வழக்கு கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. கோர்ட்டு என்ன சொல்கிறதோ, அதன்பிறகு அரசு என்ன முடிவு எடுக்கிறதோ, அதனை ஆராய்ந்து வணிகர் சங்க பேரமைப்பு முடிவு எடுக்கும். எங்களை பொறுத்தவரையில் தமிழகத்தில் நிறுவனங்கள் திறக்கப்பட வேண்டும். எந்த நிறுவனமும் மூடப்பட கூடாது. பணம் பரிவர்த்தனையில் டிஜிட்டல் முறையை மத்திய அரசு அமல்படுத்தி உள்ளது. இதில் உள்ள கட்டணத்தை முறைப்படுத்த வேண்டும். வங்கிகள் சேவைக்காக தொடங்கப்பட்டன. தற்போது வியாபார நோக்கில் செயல்பட்டு வருகின்றன. வங்கிகளில் எவ்வளவு கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்பதே மக்களுக்கு தெரியாது அதனை முறைப்படுத்த வேண்டும். இரவு நேரங்களில் கடை திறப்பதற்கு எந்த போலீஸ் அதிகாரியாவது ஒத்துழைப்பு தரவில்லை என்றால் உடனடியாக டி.ஜி.பி.யின் கவனத்திற்கு கொண்டு சென்று அந்த அதிகாரியின் மீது உரிய நடவடிக்கை எடுக்க பேரமைப்பு தயங்காது என்றார்.