அங்கன்வாடி ஊழியர்களுடன் அமைச்சர் கீதாஜீவன் நடத்திய பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு
தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்க நிர்வாகிகளுடன் அமைச்சர் பெ.கீதாஜீவன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
தூத்துக்குடியில் தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்க நிர்வாகிகளுடன் அமைச்சர் பெ.கீதாஜீவன் நேற்று நடத்திய பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு ஏற்பட்டதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பு அங்கன்வாடி ஊழியர்கள் நடத்தி வந்த தொடர் காத்திருப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
பள்ளி, கல்லூரிகளுக்கு மே மாதம் கோடை விடுமுறை விடுவது போல அங்கன்வாடி மையங்களுக்கும் ஒரு மாதம் கோடை விடுமுறை விட வேண்டும். காலி பணியிடங்கள் அதிகமாக உள்ளதால் அங்கன்வாடி ஊழியர்களின் பணிச்சுமை அதிகரிக்கிறது. எனவே, காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் மாநிலம் முழுவதும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களுக்கு முன்பாக தொடர் காத்திருப்பு போராட்டத்தை நடத்தி வந்தனர். அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் இரவு முழுவதும் ஆட்சியர் அலுவலகங்களிலேயே தங்கி தங்கள் போராட்டத்தை தொடர்ந்தனர். இதையடுத்து அங்கன்வாடி ஊழியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்னைக்கு சுமூக தீர்வு காணுமாறு, தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் பெ.கீதாஜீவனுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார். அதன்பேரில் தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்க நிர்வாகிகளுடன் அமைச்சர் பெ.கீதாஜீவன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
தூத்துக்குடி சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகத்தில் வைத்து நடைபெற்ற பேச்சுவார்த்தையில் தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்க மாநில தலைவர் எஸ்.ரத்தின மாலா, பொதுச்செயலாளர் டி.டெய்சி, பொருளாளர் எஸ்.தேவமணி, சிஐடியு மாநில துணைத் தலைவர கண்ணன், மாநில செயலாளர் ரசல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு ஏற்பட்டது. இது குறித்து அமைச்சர் கீதாஜீவன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழக முதல்வரின் அறிவுரையின் படி தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்க நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினேன். ஒரு மாத கோடை விடுமுறை மற்றும் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்ற அவர்களது கோரிக்கைகள் அரசு ஏற்கனவே பரிசீலனை செய்து வரும் கோரிக்கைகள் தான். இது தொடர்பாக முதல்வரின் கவனத்துக்கு கொண்டு விரைவில் நல்ல செய்தியை தெரிவிப்போம் என அவர்களிடம் தெரிவித்துள்ளோம். இதனை ஏற்று போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், காத்திருப்பு போராட்டம் போன்ற தங்களை தாங்களே வருத்திக் கொள்ளும் போராட்டங்களை நடத்த வேண்டாம் என அவர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளோம். அதனையும் அவர்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர் என்றார்.
சங்கத்தின் பொதுச்செயலாளர் டெய்சி கூறும்போது, எங்களது கோரிக்கைகளை முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்று இந்த ஆண்டே நிறைவேற்றுவதாக அமைச்சர் உறுதியளித்துள்ளார். அமைச்சரின் உறுதிமொழியை ஏற்று 50 ஆயிரம் அங்கன்வாடி ஊழியர்கள் உதவியாளர்கள் நடத்தி வந்த காத்திருப்பு போராட்டத்தை வாபஸ் பெறுகிறோம் என்றார் அவர். இதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் நடத்தி வந்த காத்திருப்பு போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்..