Crime: மிளகாய் பொடி தூவி தாலிச்செயின் பறித்த கொத்தனார் - போலீசில் சிக்கியது எப்படி?
நெல்லையில் பட்டப்பகலில் பெண்ணின் முகத்தில் மிளகாய்ப் பொடி தூவி தாலிச் செயின் பறிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே உள்ள தெற்கு கள்ளிகுளத்தை சேர்ந்தவர் சிரில். இவரது மனைவி ரோணிகா. இவர்களது குடும்பம் தெற்கு கள்ளிகுளம் செட்டியார் தெருவில் அமைந்துள்ளது. சிரில் தெற்கு சூடானில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி ரோணிகா வீட்டில் தனியாக இருப்பதை நோட்டமிட்ட மர்ம நபர் ஒருவர் கடந்த 15 ஆம் தேதி காலை பட்டப்பகலில் 11 மணியளவில் வீட்டின் காம்பவுண்ட சுவர் ஏறி குதித்து உள்ளார்.
மிளகாய் பொடி தூவி தாலிச் செயின் பறிப்பு:
பின்னர் வீட்டில் தனியாக இருந்த ரோணிகா செடிகளுக்கு தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்த நேரம் கத்தியை காட்டி மிரட்டி அவரது கண்ணில் மிளகாய்ப்பொடியை தூவி கழுத்தில் கிடந்த 9 சவரன் தாலிச் செயினை பறித்து சென்றார். இது குறித்து ரோணிகா வள்ளியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
அப்புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் கொள்ளையடித்து சென்ற மர்ம நபர் குறித்து விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அங்குள்ள சிசிடிவி கேமாராக்களை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து கண்காணிப்பு கேமரா பதிவுகளை கொண்டு காவல்துறையினர் மர்ம நபர் குறித்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
கொத்தனார் கைது:
விசாரணையில் கேமராவில் பதிவான மர்ம நபர் வள்ளியூர் அருகே நம்பியான்விளை நடுத்தெருவைச் சேர்ந்த திரவியம் என்பவரது மகன் சேர்மன்(32) என தெரிய வந்தது. இவர் கொத்தனார் வேலை பார்த்து வருவதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதனையடுத்து சேர்மனை கைது செய்த போலீசார் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். வேறு ஏதேனும் குற்றச் சம்பவங்கள் உள்ளதா? வேறு ஏதேனும் திருட்டு வழக்கில் இவருக்கு தொடர்புள்ளதா எனவும் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
நகை மீட்பு:
அதோடு பெண்ணிடம் மிளகாய் பொடி தூவி பறித்த நகை குறித்து விசாரணை மேற்கொண்டதில் அந்த திருட்டு நகையை அடகு வைத்திருப்பது விசாரணையில் தெரிய வரவே அதனை அடகு வைத்திருந்த இடத்தில் சென்று மீட்டனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை மேற்கொண்ட நிலையில் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் மிளகாய்ப்பொடி தூவி கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறியில் ஈடுபட்ட கொத்தனார் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..