வெளிமாநில தேர்தல்: தொழிலாளர்களுக்கு விடுப்பு இல்லையெனில் கடும் நடவடிக்கை - தொழிலாளர் நலத்துறை எச்சரிக்கை
அனைத்து வெளி மாநில தொழிலாளர்களுக்கும் அவர்கள் சொந்த மாநிலத்துக்குச் சென்று வாக்களிக்க ஏதுவாக தேர்தல் நாட்களில் ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்க வேண்டும்.
தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடந்து முடிந்தது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடக்கவிருக்கிறது.
அதே போல அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா மாநிலங்களில் 2-ம் கட்டமாக மக்களவைத் தேர்தலும், ஆந்திர பிரதேசத்தில் மக்களவை மற்றும் சட்டப்பேரவை பொதுத்தேர்தல்கள் ஏப்ரல் 26,மே 7 மற்றும் 13-ம் தேதிகளில் நடைபெற உள்ளது.
குறிப்பாக ஆயிரக்கணக்கான வெளிமாநில தொழிலாளர்கள் திருநெல்வேலி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதியில் பணியாற்றி வருகிறார்கள். திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் உள்ள தொழில் நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து கடைகள், வர்த்தக நிறுவனங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள், பீடி மற்றும் சுருட்டு நிறுவனங்கள் மற்றும் அனைத்து பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் கர்நாடகா, கேரளா மற்றும் ஆந்திரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் வாக்குரிமை உள்ள தினக்கூலி, ஒப்பந்த தொழிலாளர்கள் மற்றும் தற்காலிகப் பணியாளர்கள் உள்ளிட்ட அனைத்து தொழிலாளர்களுக்கும் அவர்கள் சொந்த மாநிலத்துக்குச் சென்று வாக்களிக்க ஏதுவாக தேர்தல் நாட்களில் ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்க வேண்டும்.
விடுப்பு வழங்காத நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தொழிலாளர் நலத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் திருநெல்வேலி, தென்காசி மாவட்டத்தில் தொழிலாளர்களுக்கு வணிக நிறுவனங்கள் விடுப்பு அளிக்கவில்லை எனில் தொலைபேசி எண் 0462-2555014 மற்றும் தொழிலாளர் துணை ஆணையர் மா.மாயாவதி கைப்பேசி எண் 9489502754 என்ற எண்களில் புகார்களை தெரிவிக்கலாம் எனவும் திருநெல்வேலி தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) நா.முருகப்பிரசன்னா தெரிவித்துள்ளார்.