தென்தமிழகத்தில் கூலிப்படை கலாச்சாரத்தை அரசு வேரறுக்க வேண்டும் - டாக்டர் கிருஷ்ணசாமி வலியுறுத்தல்
``20 லட்சத்திற்கு பேசி 18 லட்சம் முன் பணம் கொடுக்கப்பட்டதாக சொல்கிறார்கள்? படித்த இளைஞர்கள் பணத்திற்காக கொலை செய்கிறார்கள் என்றால் இதற்குத்தானா கல்வி கூடங்கள் இருக்கிறது?
தென்தமிழகத்தில் நிலவும் படுகொலை, கூலிப்படை கலாச்சாரம் குறித்து புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி வீடியோ வெளியிட்டு அரசுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார். அதில் அவர் கூறும் பொழுது,
மத்திய மாநில அரசுகளுக்கு வேண்டுகோள்:
ஒரு பகுதி முன்னேற வேண்டுமென்றால் அந்த பகுதியில் அமைதி நிலவ வேண்டும். அமைதி இல்லாத எந்த பகுதியிலும் எந்த விதமான வளர்ச்சியையும் மேற்கொள்ள முடியாது. தென் தமிழகத்தில் ஏறக்குறைய அரை நூற்றாண்டு காலம் பல்வேறு விதமான சாதிய மோதல்கள் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக தொழில் வளர்ச்சி, கல்வி வளர்ச்சி வணிகம் உள்ளிட்டவைகளால் மிகப்பெரிய பின்னடைவு ஏற்பட்டு வேலையில்லாமல் இளைஞர்கள் பிற பகுதிகளிலுக்கு இடம் பெயர வேண்டிய அவல நிலை பன்னெடுங்காலமாக இருந்து வருகிறது.
தென் மாவட்டங்களில் நடைபெறும் ஜாதிய கொலைகள் சட்டம் ஒழுங்கு என்பதைத் தாண்டி சமூக ஒழுக்கம், சமூகக் கட்டுப்பாடு, சமூக சீரழிவு என்ற நோக்கத்தோடு இந்த விஷயத்தை அணுக வேண்டும் என மத்திய மாநில அரசுகளுக்கு வேண்டுகோள் விடுத்து வருகிறோம்.
புதிய கலாச்சாரம்:
திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் கடந்த சில ஆண்டுகளில் 400க்கும் மேற்பட்ட படுகொலையில் நடந்திருக்கிறது என்றால் எந்தளவிற்கு அந்த பூமி அமையதிற்ற நிலைமையில் இருக்கிறது என்பதை புரிந்து கொள்ள முடியும். தென் தமிழகத்தில் சாதி ரீதியான மோதல் தடுத்து நிறுத்தப்பட்டால் இப்போது புதிய கலாச்சாரம் அதுவும் கூலிப்படை கலாச்சாரம் நிலை கொண்டு உள்ளது.
காங்கிரஸ் மாவட்ட தலைவர் ஜெயக்குமார் மரணம் தொடர்பாக இப்போது வரை கொலையா? தற்கொலையா? என கண்டுபிடிக்கப்படாத நிலையில் சிபிடிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. அது குறித்து செய்திகள் மறப்பதற்கு முன்னதாக இளைஞர் தீபக் ராஜா என்பவரை கொலை செய்துள்ளனர்.
20 லட்சம் பேரமா?
கேட்டால் இது ஜாதி ரீதியிலான கொலைகள் இல்லை என சொல்கிறார்.. இந்த கொலையில் கூலிப்படையை ஏவியவர்கள் யார்? கூலிப்படைக்கு லட்சத்தை வாரி வழங்கியது யார்? இதன் பின்னணியையெல்லாம் காவல்துறை கண்டுபிடிக்க வேண்டும். நெல்லையில் பட்டப்பகலில் ஒரு இளைஞரை வெட்டிக் கொலை செய்தால் பொதுமக்களிடையே எந்த நேரத்தில் எது நடக்குமோ என்ற அச்சம் தானே நிலவும்? இந்த கொலையை யார் எதற்காக செய்தார்கள்?
20 லட்சத்திற்கு பேசி 18 லட்சம் முன் பணம் கொடுக்கப்பட்டதாக சொல்கிறார்கள்? படித்த இளைஞர்கள் பணத்திற்காக கொலை செய்கிறார்கள் என்றால் இதற்குத்தானா கல்வி கூடங்கள் இருக்கிறது.
கூலிப்படைக்கு நிரந்தர முற்றுப்புள்ளி:
காவல்துறை இதை வெறும் சட்டம் ஒழுங்காக மட்டும் பார்த்துக்கொண்டு இதனை ஒரு வழக்காக பார்க்காமல் கடந்த ஒரு வருடத்திற்கு மேல் 400-க்கும் மேல் படுகொலை நடந்திருக்கிறது என்றால் ஏதோ காவல்துறை கண்டுபிடிக்க முடியாத அல்லது காவல்துறை கண்டு கொள்ளாத ஒரு பிரச்னை இருக்கிறது என்று தெரிகிறது. எனவே தமிழக அரசு ஒரு சிறப்புக்குழு நியமித்து தென் தமிழகத்தில் நிரந்தரமாக அமைதியை கொண்டு வருவதற்கும், கூலிப்படை கலாச்சாரத்திற்கு நிரந்தரமாக முற்றுப்புள்ளி வைக்கக்கூடிய வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கூலிப்படை சமுதாயம் தென் தமிழகத்தில் மிகப்பெரிய அளவில் புதிய ஒரு கலாச்சாரமாக மையம் கொள்ள சதி நடப்பதாக தெரிகிறது. இது தமிழ் சமுதாயத்திற்கு நல்லதல்ல. சட்டம் ஒழுங்கை இதன் மூலம் காப்பாற்ற இயலாது. எனவே கூலிப்படை கலாச்சாரத்திற்கு நிரந்தரமாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றால் தீபக் ராஜாவின் படுகொலையை உதாரணமாக வைத்து இதன் மூலத்தை கண்டறிந்து அதனை வேரோடு வேரறுக்க வேண்டும் என்றார்.