(Source: ECI/ABP News/ABP Majha)
கன்னியாகுமரியில் மின்சாரம் தாக்கி தாய், மகன், கர்ப்பிணி மகள் உயிரிழந்த சோகம் - என்ன நடந்தது..?
அப்பகுதியினர் மின்சாரத்தை துண்டித்ததுடன் மூவரையும் குழித்துறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள், மூவரும் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டம், திருவட்டார் அருகே உள்ள ஆற்றூர் தொப்பவிளையில் வசித்துவருபவர் சேம்ராஜ். இவருக்கு சித்ரா (45) என்ற மனைவியும், ஆதிரா (25) என்ற மகளும், அஸ்வின் (21) என்ற மகனும் இருந்தனர். அஸ்வின் இன்ஜினீயரிங் முதலாம் ஆண்டு படித்து வந்தார். ஆதிராவுக்கு திருமணமாகி 8 மாத கர்ப்பிணியாக தாய் வீட்டில் இருந்தார். சேம்ராஜின் வீட்டுக்குச் செல்லும் வழி குறுகலானது. அப்பகுதியில் புதர்மண்டிக் கிடப்பதால் பாம்பு தொல்லை இருந்ததாக தெரிகிறது.
இந்த நிலையில் அஸ்வின் தனது வீட்டுக்கு அருகே பாம்பு வந்ததால், அதை அடிப்பதற்காக இரும்புக்கம்பியுடன் வீட்டிலிருந்து வெளியே வந்துள்ளதாகக் கூறப்படுகிற்து. அதேசமயம், அவரது பக்கத்தில் குடியிருக்கும் முருகன் என்பவரது வீட்டின் இரும்புக்கூரையில் மின் மின்கசிவு ஏற்பட்டிருந்துள்ளது. இது தெரியாமல் அஸ்வின் கையில் இருந்த இரும்புக்கம்பி தவறுதலாக இரும்பு ஷீட்டின்மீது பட்டுள்ளது. இதனால் அஸ்வின்மீது மின்சாரம் தாக்கி உள்ளது.
அஸ்வின் அலறியபடி கீழே விழுந்துள்ளார். இதைப்பார்த்த அவரின் அம்மா சித்ராவும், 8 மாத கர்ப்பிணியான அக்கா ஆதிராவும் அஸ்வினை தூக்க முயன்றுள்ளனர். இதில் அவர்களையும் மின்சாரம் தாக்கி உள்ளது. மூவரும் கீழே சாய்ந்த நிலையில், அப்பகுதியினர் மின்சாரத்தை துண்டித்ததுடன் மூவரையும் குழித்துறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள், மூவரும் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து தகவலறித்து சம்பவ இடத்திற்கு வந்த திருவட்டார் காவல்துறையினர் மற்றும் மின்சாரதுறையினர் மின்சார தாக்கி 3 பேர் உயிரிழந்தது குறித்த விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மின்சாரம் தாக்கி கர்ப்பிணி பெண் உட்பட 3 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியினரை சோகத்தில் ஆழ்த்தியது.
இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ஷார்ட் சர்க்கியூட் ஏற்பட்டிருந்த இரும்புக்கூரையில் தெரியாமல் அஸ்வின் கையில் இருந்த கம்பி பட்டிருக்கிறது. இதில் அவரைக் காப்பாற்ற முதலில் அவரின் அக்கா முயன்றிருக்கிறார். பின்னர்தான் அவரது தாய் தூக்கியிருக்கிறார். அப்போது மழை பெய்துகொண்டிருந்ததால் அவர்கள் மூவரும் மின்சாரம் தாக்கி விழுந்ததை, சிறிது நேரத்துக்குப் பிறகே அப்பகுதியினர் பார்த்திருக்கிறார்கள். கர்ப்பிணியான ஆதிரா சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டது தெரியவந்துள்ளது. இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம். மழைகாலத்தில் மக்கள் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்" என்றனர்.
இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், கன்னியாகுமரி மாவட்டம், திருவட்டார் வட்டம் ஆற்றூர் கிராமம், தோப்புவிளையில் வசித்துவரும் டெம்போ டிரைவர் சோம்ராஜ் என்பவரது மனைவி சித்ரா (வயது 47), மகள் ஆதிரா (வயது 23) மற்றும் மகன் அஸ்வின் (வயது 19) ஆகிய மூவரும் நேற்று (3-10-2023) அவர்களது வீட்டில் எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன். தனது குடும்பத்தினரை இழந்து வாடும் டிரைவர் சோம்ராஜ் மற்றும் அவரது உறவினர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் ரூபாய் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிட உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.