Tanush Kotian: அஸ்வினுக்கு பதிலாக இந்திய அணியில் களமிறங்கும் ஆல்-ரவுண்டர்! - யார் இந்த தனுஷ் கோடியன்?
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4வது இந்திய டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அஸ்வினுக்கு பதிலாக தனுஷ் கோடியன் என்ற ஆல்ரவுண்டர் களமிறங்குகிறார் என தகவல் வெளியாகியுள்ளது.
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதுவரை மூன்று போட்டிகள் முடிவடைந்துள்ளன. அதில் இந்தியா ஒரு போட்டியில் வெற்றி பெற்றுள்ளது. ஒரு போட்டியில் தோல்வி அடைந்துள்ளது. மேலும் ஒரு போட்டி டிராவில் முடிந்துள்ளது. மேலும் இரண்டு போட்டிகளில் வென்றால் மட்டுமே இந்தியா இந்த தொடரை கைப்பற்றுவதுடன் 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேற முடியும்.
இதனிடையே சுழற்பந்துவீச்சாளர் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவஹாக அறிவித்தார். இதனால் இந்திய அணியில் வாஷிங்டன் சுந்தர், ஜடேஜா ஆகியோர் மட்டுமே சுழற்பந்து வீச்சாளராக உள்ள நிலையில் அஸ்வினுக்கு பதிலாக தனுஷ் கோடியன் என்ற புது ஆல்ரவுண்டரை சேர்த்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதைத்தொடர்ந்து மெல்போர்னில் நடக்க உள்ள நான்காவது டெஸ்ட் போட்டிக்கு இந்திய அணி தயாராகி வருகிறது. அதில் தனுஷ் கோடியன் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது தனுஷ் கோட்டியன் மும்பை அணிக்காக விஜய் ஹசாரே டிராபி தொடரில் விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
வலது கை ஆட்டக்காரரான தனுஷ் ஆஃப் ஸ்பின்னில் கலக்கி வருகிறார். இதுவரை முதல் தர கிரிக்கெட்டில் 33 போட்டிகளில் விளையாடி 25.70 சராசரியில் 101 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். பேட்டிங்கில் சராசரி 41.21 சதவீதமும் 2523 ரன்களும் குவித்துள்ளார். 2023 - 24ஆம் ஆண்டு நடைபெற்ற ராஞ்சி டிராபியில் சிறந்த ஆட்டக்காரருக்கான விருதை தனுஷ் கோடியன் பெற்றார். மும்பையின் 42வது ராஞ்சி டைட்டிலில் 29 விக்கெட்டுகள் வீழ்த்தி சராசரியை 16.96ஆக வைத்திருந்தார். அதில் 502 ரன்கள் அடித்து சராசரி 41.83 ஆக இருந்தது. அதில், 5 அரைசதங்களும், ஒரு சதமும் அடங்கும்.
முன்னாள் ஆஃப்-ஸ்பின்னர் ரமேஷ் பவாருக்குப் பிறகு இந்திய தேசிய அணிக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் மும்பை சுழற்பந்து வீச்சாளர் கோட்டியன் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐபிஎல்லை பொறுத்தவரை 2024 சீசனில் ஒரே ஒரு மேட்சில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி 24 ரன்கள் எடுத்திருந்தார். அவருக்கு ஐபிஎல்லில் பவுலிங் செய்ய வாய்ப்பு கிடைக்கவில்லை. 2025 சீசனுக்கு முந்தைய ஐபிஎல் மெகா ஏலத்தில் கோட்டியன் ஏலத்தில் எடுக்கப்படவில்லை.