எந்த மதம், சாதியை சார்ந்தவர்களாக இருந்தாலும் ஒற்றுமையாக தமிழர்களாக வாழ வேண்டும் - எம்பி கனிமொழி
தமிழ்நாட்டில் உள்ள மக்கள் எந்த மதத்தை, எந்த சாதியை சார்ந்தவர்களாக இருந்தாலும் ஒற்றுமையாக தமிழர்களாக வாழ வேண்டும் என்றும், எல்லோருக்கும் சம வாய்ப்பு கிடைக்க வேண்டும்.
தூத்துக்குடி மாவட்டம் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வர்த்தகரெட்டிபட்டி, திம்மராஜபுரம், அல்லிக்குளம், கூட்டுடன்காடு மற்றும் குமாரகிரி ஆகிய ஊராட்சிகளில் நடைபெற்ற மக்கள் களம், மக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெறும் நிகழ்ச்சிகளில் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி, மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி, முன்னிலையில் பல்வேறு துறைகள் மூலமாக பட்டா மாறுதல் உத்தரவு, மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கான தனிநபர் கடன், வேளாண்மை இடுபொருட்கள் என மொத்தம் 54 பயனாளிகளுக்கு ரூ.35,62,592/- மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசும்போது, மக்கள் களம் நிகழ்ச்சி என்பது பாராளுமன்ற உறுப்பினர், அமைச்சர் பெருமக்கள், சட்டமன்ற உறுப்பினர் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் மற்றும் மாவட்ட ஆட்சியர், அரசு அலுவலர்கள் என அத்தனை பேரும் உங்கள் ஊருக்கு வந்து உங்களை நேரில் சந்தித்து கோரிக்கை மனுக்களை பெற்று விரைவில் தீர்வு காண்பதற்கான முயற்சியாகும். தமிழ்நாடு முதலமைச்சர் வர்த்தகரெட்டிபட்டி பகுதியில் ரூ.2.38 கோடி மதிப்பில் சாலை வசதி உள்ளிட்ட 69 திட்டங்களை இந்த பகுதியில் செய்து தந்திருக்கிறார்கள். இதுவரை மக்கள் களம் நிகழ்ச்சியில் 536 பேருக்கு பட்டா, 147 பேருக்கு ரூ.2.67 கோடி சுய உதவிக்குழு கடன் உதவிகள், 200 பேருக்கு மேல் தையல் இயந்திரங்கள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சர் ஆட்சியில் பெண்களுக்கான பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. நகர்ப்புற பேருந்துகளில் பெண்களுக்கு கட்டணமில்லா விடியல் பயண திட்டம், அரசு பள்ளிகளில் 6 முதல் 12ம் வகுப்பு வரை படித்த மாணவிகளுக்கு உயர்கல்வி பயில மாதம் ரூ.1000 வழங்கும் புதுமைப்பெண் திட்டம், கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம் போன்ற திட்டங்களை செயல்படுத்தியுள்ளார்கள். தமிழ்நாடு முழுவதும் கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தில் 1 கோடியே 13 லட்சம் மகளிர் மாதம் ரூ.1000 பெற்று வருகிறார்கள். இத்திட்டத்தில் சிலருக்கு விடுபட்டு இருக்கக்கூடிய சூழலும் இருக்கிறது. மீண்டும் மேல் முறையீடு செய்தால் நியாயமாக கிடைக்கக்கூடிய வகையில் உள்ள மகளிர்களுக்கு கலைஞர் உரிமைத்தொகை ரூ.1000 வழங்க தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்கள். எனவே நியாயமாக மகளிர் உரிமைத்தொகை யாருக்கு கிடைக்க வேண்டுமோ அவர்களுக்கு நிச்சயம் வழங்கப்படும். மேலும் அரசு பள்ளிகளில் 1 முதல் 5ம் வகுப்பு வரை படிக்கக்கூடிய மாணவர்களுக்கு முதலமைச்சரின் காலை உணவு திட்டம், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பெறுவதற்காக திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்குவதற்காக நான் முதல்வன் திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியுள்ளார்கள்.
தமிழ்நாடு முதலமைச்சர் திம்மராஜபுரம் பகுதியில் ஊராட்சி மன்ற அலுவலகக் கட்டிடம், அங்கன்வாடி மைய கட்டிடம், தொழிற்கூட கட்டிடம் ஆகிய 3 திட்டங்களை தந்துள்ளார்கள். இப்பகுதியில் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் விதமாக சாலைவசதி, வாறுகால் வசதி, தெருவிளக்கு வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மற்றும் மண்புழு உரக்கிடங்கினை புணரமைத்தல் உள்ளிட்ட 122 பணிகளுக்கு ரூ.4.80 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பல்வேறு பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் சில பணிகள் நடைபெற்று வருகிறது. அந்த பணிகளும் விரைவில் முடிக்கப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். அல்லிக்குளம் ஊராட்சி பகுதியில் 91வது மக்கள் களம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் இப்பகுதியில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றுவதற்காக 74 பணிகளுக்கு ரூ.1.68 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தந்துள்ளார்கள். இதில் சில பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. சில பணிகள் நடைபெற்று வருகிறது. கூட்டுடன்காடு பகுதியில் 170 பணிகளுக்கு ரூ.6.82 கோடி நிதி ஒதுக்கீடு செய்து பேவர் பிளாக் சாலைகள், குடிநீர் வசதி உள்ளிட்ட பல்வேறு பணிகள் செய்யப்பட்டுள்ளது.
சில இடங்களில் பணிகள் நடைபெற்று வருகிறது. குமாரகிரி ஊராட்சி பகுதியில் ரூ.9.58 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பேவர் பிளாக் சாலைகள், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி, ஊராட்சி மன்ற அலுவலகக் கட்டிடம், தார் சாலை அமைத்தல், குடிநீர் வசதி உள்ளிட்ட பல்வேறு திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் தூத்துக்குடி மாவட்டத்தின் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களை தந்திருக்கிறார்கள். தமிழ்நாட்டில் உள்ள மக்கள் எந்த மதத்தை, எந்த சாதியை சார்ந்தவர்களாக இருந்தாலும் ஒற்றுமையாக தமிழர்களாக வாழ வேண்டும் என்றும், எல்லோருக்கும் சம வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்றும் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் ஆட்சியின் நீட்சியாக தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான ஆட்சி திகழ்ந்து வருகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் தமிழ்நாட்டு மக்களின் உரிமைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்கள் என்றார்.