ஸ்மார்ட் சிட்டி பணிகளால் புழுதி பறக்கும் நெல்லை மாநகர சாலைகள் - உடலில் திருநீறு பூசி நூதன போராட்டம்
"நெல்லை மாநகரில் பழுதடைந்த சாலைகளை சீரமைக்கக் கோரி ஏற்கெனவே சகதியில் குளிக்கும் போராட்டம் நடந்த நிலையில் தற்போது திருநீறு பூசி நூதன போராட்டம் நடைபெற்றுள்ளது’’
நெல்லை மாநகரம் முழுவதும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பல்வேறு திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. தாமிரபரணி புதிய கூட்டு குடிநீர் திட்ட பணிகளுக்காக தோண்டப்பட்ட குழி மற்றும் பாதாள சாக்கடை அமைக்கும் பணிக்காக தோண்டப்பட்ட குழி ஆகியவை சீர் அமைக்கப்படாமல் இருந்த நிலையில் பெய்த வடகிழக்கு பருவ மழையால் சாலைகள் மிகவும் மோசமான நிலைக்கு மாறியது. தற்காலிகமாக அந்த சாலைகளை சீரமைக்கும் பணி நடைபெற்ற போதிலும் முறையாக சாலையை சீரமைக்காத காரணத்தால் நெல்லை மாநகரின் பிரதான சாலைகளான நெல்லைப்பர் ஹைவே ரோடு, குற்றால ரோடு, மவுண்ட் ரோடு உள்ளிட்ட பல்வேறு சாலைகள் குண்டும் குழியுமாக காட்சி அளிப்பதோடு புழுதி மண்டலமாக மாறியது, இதனால் பொது மக்கள் பயணிக்க முடியாத நிலைக்கு மாறியுள்ளது.
இதன் காரணமாக அந்த சாலையில் கடைகளை நடத்தி வரும் வர்த்தகர்கள், வாகன ஓட்டிகள், பாதசாரிகள் என அனைவரும் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். சாலைகளில் ஏற்பட்டுள்ள புழுதி மண்டலம் காரணமாக சுவாசக் கோளாறு, ஆஸ்துமா உள்ளிட்ட நோய்கள் ஏற்படுவதுடன் முதியவர்கள் இயல்பாக சுவாசிக்க முடியாமல் கடும் சிரமத்தை சந்தித்து வருவதாக தொடர்ச்சியாக புகார் கூறி வருகின்றனர். நெல்லை மாநகர பகுதிகளில் நிலவி வரும் இந்த பாதிப்புகளை சரி செய்ய வலியுறுத்தியும், நெடுஞ்சாலைகளில் ஏற்படும் புழுதி மண்டலம் காரணமாக மக்களின் அன்றாட நிலை பாதிக்கப்படுவதாக கூறி அதனை சித்தரிக்கும் வகையில் உடல் முழுவதும் திருநீறு பூசிக்கொண்டு இந்து தேசிய கட்சி நிறுவன தலைவர் மணி தலைமையிலான கட்சியினர் நெல்லை மாவட்ட ஆட்சியரிடம் நூதன முறையில் மனு அளிக்க முயற்சி செய்தனர்.
உடல் முழுவதும் விபூதியை பூசிக் கொண்டு வந்த நபர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அனுமதிக்க மறுத்ததால் இரு தரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. மாவட்ட ஆட்சியரை இதே நிலையோடு நேரில் சந்தித்தால் தான் மக்கள் பிரச்சினை புரியும் என்பதால் தங்களை விட வேண்டும் என தொடர்ந்து காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து காவல்துறையினர் பேச்சுவார்த்தைக்கு பின்னர் இருவர் மட்டும் சென்று மனு அளித்து சென்றனர். இதனால் ஆட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
கடந்த சில வாரங்களுக்கு முன் நெல்லை மாநகரில் சேதமடைந்த சாலைகளை சீரமைக்க கோரி மாவீரர் சுந்தரலிங்கனார் மக்கள் இயக்கத்தினர் இன்று அதன் நிறுவனத் தலைவர் மாரியப்பன் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சகதி குளிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது, சாலையை சீரமைக்காத அதிகாரிகளை கண்டித்து அவர்கள் வாட்டர் பாட்டிலில் சகதியை அடைத்து கொண்டு ஆட்சியர் அலுவலகம் நோக்கி வந்து தாங்கள் கொண்டு வந்த சகதியை அனைவரும் உடம்பில் ஊற்றிக் கொண்டு நூதன முறையில் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தியது குறிப்பிடத்தக்கது,