உப்பாற்று ஓடையில் மீன் கழிவுநீரை கலக்கிய மீன்பதப்படுத்தும் தொழிற்சாலைகள் - மூட உத்தரவு
மீன் பதப்படுத்தும் ஆலைகள் கழிவுநீரை சுத்திகரிக்காமல் அப்படியே உப்பாற்று ஓடையில் கலந்தது தெரியவந்தது. 3 ஆலைகளுக்கும் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடியில் உப்பாற்று ஓடையில் கழிவுநீரை கலந்தது தொடர்பாக 3 தொழிற்சாலைகளை மூட மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடி கோமஸ்புரம் பகுதியில் உள்ள உப்பாற்று ஓடை அருகே 6-க்கும் மேற்பட்ட மீன் பதப்படுத்தும் தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன. இதில், சில ஆலைகள் மீன்களை பதப்படுத்துவதற்கும், சுத்தம் செய்வதற்கும் பயன்படுத்தும் ரசாயனம் கலந்த கழிவுநீரை சுத்திகரிப்பு செய்யாமல் அப்படியே உப்பாற்று ஓடையில் நேரடியாக கலப்பதாக புகார் எழுந்தது.
இதன் காரணமாக, கடந்த சில தினங்களுக்கு முன்பு உப்பாற்று ஓடை தண்ணீர் முழுவதும் இளஞ்சிவப்பு நிறமாக மாறி காட்சியளித்தது. இதனால் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுவதுடன், பொதுமக்கள் மற்றும் கால்நடைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும், நிலத்தடி நீரும் மாசடையும் அபாயம் இருப்பதாக பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தனர்.
இதைத் தொடர்ந்து, தூத்துக்குடி மக்களவை தொகுதி உறுப்பினர் கனிமொழி, அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ் ஆகியோர் உப்பாற்று ஓடை பகுதிக்கு நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டனர். இது குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். அதன்பேரில், மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் மாவட்ட சுற்றுச்சூழல் நல பொறியாளர் சத்தியராஜ் தலைமையிலான அதிகாரிகள் உப்பாற்று ஓடையில் ஆய்வு நடத்தினர். மேலும் உப்பாற்று ஓடை தண்ணீரை பரிசோதனை செய்தனர்.
இதில் அந்த பகுதியில் உள்ள 3 மீன் பதப்படுத்தும் ஆலைகள் கழிவுநீரை சுத்திகரிக்காமல் அப்படியே உப்பாற்று ஓடையில் கலந்தது தெரியவந்தது. இதையடுத்து, அந்த 3 ஆலைகளுக்கான மின் இணைப்பை உடனடியாக துண்டிக்க மின்சார வாரியத்துக்கு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அறிவுறுத்தியது. அதன்பேரில் 3 ஆலைகளுக்கும் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த மூன்று மீன் பதப்படுத்தும் ஆலைகளையும் மூடுவதற்கு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் உத்தரவிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மூன்று மீன் பதப்படுத்தும் ஆலைகளை மூட மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டுள்ளது தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.