கிராம நிர்வாக அலுவலக சுவர்களில் பேரிடர் மேலாண்மை விழிப்புணர்வு ஓவியங்கள் - தூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்தின் புதிய முயற்சி
பேரிடர் காலத்தில் செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவை குறித்து கிராம நிர்வாக அலுவலர் அலுவலக சுவர்களில் ஓவியங்களாக வரையப்பட்டுள்ளன.
தூத்துக்குடி மாவட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர் அலுவலக சுவர்களில் வரையப்பட்டுள்ள பேரிடர் மேலாண்மை குறித்த விழிப்புணர்வு ஓவியங்கள் மக்களை வெகுவாக கவர்ந்துள்ளன.
புயல், மழை, மின்னல், வெள்ளம், சுனாமி, பூகம்பம், தீவிபத்து, கட்டிட விபத்து போன்ற பேரிடர்கள் நடைபெறும் போது மக்கள் செய்யக்கூடியவை மற்றும் செய்யக்கூடாதவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த மாநில பேரிடர் மேலாண்மை நிதியில் இருந்து ஒவ்வொரு மாவட்டத்துக்கும் குறிப்பிட்ட தொகை ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
தூத்துக்குடி மாவட்டத்துக்கு இந்த ஆண்டு ரூ.39.50 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. வழக்கமாக பேரிடர் மேலாண்மை தொடர்பாக துண்டு பிரசுரங்கள், விளம்பர பதாகைகள் மற்றும் ஒலி பெருக்கி மூலம் மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். அதுபோல பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு விழிப்புணர்வு போட்டிகளும் நடத்தப்படும். ஆனால், தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் இந்த நிதியை கொண்டு வித்தியாசமான முறையில் பேரிடர் மேலாண்மை விழிப்புணர்வை மேற்கொண்டுள்ளது. பேரிடர் காலத்தில் செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவை குறித்து கிராம நிர்வாக அலுவலர் அலுவலக சுவர்களில் ஓவியங்களாக வரையப்பட்டுள்ளன. மேலும், பேரிடர் காலத்தில் மக்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்த விபரங்கள் தகவல்களாக எழுதப்பட்டுள்ளன. மாவட்டத்தில் பேரிடர்களால் அதிகம் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ள 19 கிராமங்களில் உள்ள கிராம நிர்வாக அலுவலர் அலுவலக சுவர்களில் இந்த வண்ண ஓவியங்கள் பளிச்சிடுகின்றன. அவசர காலத்தில் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்களும் இதில் இடம் பெற்றுள்ளன.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ் கூறும்போது, “பேரிடர் மேலாண்மை விழிப்புணர்வு தொடர்பாக துண்டு பிரசுரங்கள் விநியோகித்தாலோ அல்லது ஒலி பெருக்கி மூலம் அறிவித்தாலோ மக்கள் அதனை விரைவாக மறந்துவிடுகின்றனர். புயல், மழை, மின்னல், வெள்ளம், சுனாமி போன்ற பேரிடர் ஏற்படும் போது செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை குறித்த விபரங்கள் மக்கள் மனதை விட்டு நீண்ட நாட்களுக்கு நீங்காமல் இருக்க வேண்டும் என நாங்கள் விரும்பினோம். அதனை கருத்தில் கொண்டு தான் கிராம நிர்வாக அலுவலர் அலுவலக சுவர்களில் ஓவியங்களை வரையவும், தகவல்களை எழுதி வைக்கவும் முடிவு செய்தோம்.
பேரிடரால் அதிகம் பாதிக்கப்படக் கூடியதாக அடையாளம் காணப்பட்டுள்ள மீளவிட்டான் 1 மற்றும் 2, கோரம்பள்ளம் 2, முள்ளக்காடு 1, கொங்கராயக்குறிச்சி, காயல்பட்டினம், ஆத்தூர், புன்னக்காயல், ஆழ்வார்திருநகரி, முக்காணி, திருக்களூர், அங்கமங்கலம், பழையகாயல், காந்தி நகர், இலுப்பையூரணி, சன்னது புதுக்குடி, வைப்பார், பெரியசாமிபுரம், வாலசமுத்திரம் மற்றும் கீழ அரசடி ஆகிய 19 கிராமங்களில் உள்ள கிராம நிர்வாக அலுவலர் அலுவலகங்களில் இத்தகைய சுவர் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.
இந்த ஓவியங்கள் மற்றும் தகவல்கள் நீண்ட காலத்துக்கு நிலைத்திருக்கும் வகையில் முறையாக பராமரிக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த முயற்சி கிராம மக்கள் மத்தியில் பேரிடர் மேலாண்மை தொடர்பாக நிச்சயம் நல்ல விழிப்புணர்வை ஏற்படுத்தும் என நம்புகிறேன். அரசு சுவர்களில் தேவையற்ற போஸ்டர்கள் ஒட்டப்படுவதால், அவைகள் நாசமடைவதுடன் தேவையில்லாத பிரச்சினைகளும் ஏற்படுகின்றன. அதற்கு இந்த முயற்சி நிச்சயம் முடிவு கட்டும். இதேபோல் அரசின் உதவிகளை மக்கள் யாருடைய உதவியும் இல்லாமல் பெறுவது எப்படி என்பது குறித்த விழிப்புணர்வு ஓவியங்கள், தகவல்களையும் அரசு சுவர்களில் வரைய திட்டமிட்டுள்ளோம்” என்றார்.