குமரி கடற்கரையில் படகுகள் அணிவகுப்பு - குமரி மாவட்ட ஆட்சியர் துவங்கி வைத்தார்
முறையான மீன்பிடிப்பு, வளமான எதிர்காலம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மீன்பிடித்துறைமுகத்தில் இருந்து விவேகானந்தர் பாறை வரை படகுகள் அணிவகுப்பு நடந்தது.
கன்னியாகுமரி கடற்கரை இந்தியாவின் தென்கோடியில் அமைந்துள்ள ஒரு எழில் மிகுந்த கடற்கரையாகும். இந்தியாவின் சிறப்பு பெற்ற சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக உள்ள இக்கடற்கரை கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோயிலிலிருந்து 16 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இக்கடற்கரை பகுதியில் மகாத்மா காந்தி மண்டபம், விவேகானந்தர் பாறை, காமராசர் மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலை போன்றவை சுற்றுலா பயணிகளைக் கவரும் இடங்களாகும். இங்கு நிகழும் சூரிய உதயம் மற்றும் சூரிய மறைவு நிகழ்வினைக் காண ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கானோர் இக்கடற்கரையில் கூடுகின்றனர். இந்தக் கடற்கரையிலுள்ள மண் பல நிறங்களைக் கொண்டதாக இருக்கிறது.இங்கு வங்காள விரிகுடா, அரபிக்கடல், மற்றும் இந்தியப் பெருங்கடல் ஆகியவை இணைகின்றன இத்தனை அழகு வாய்ந்த இந்த கடற்கரையை கண்டு களிக்க நாள்தோறும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து குடும்பம் குடும்பமாக இங்கு மக்கள் படையெடுப்பதை காண முடியும்
கன்னியாகுமரி அருகே உள்ள சின்னமுட்டம் மீன்பிடித்துறைமுகத்தில் 75ஆவது சுதந்திரதின ஆண்டையொட்டி அமிர்தத் திருவிழா வணிக வார நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதையொட்டி முறையான மீன்பிடிப்பு, வளமான எதிர்காலம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மீன்பிடித்துறைமுகத்தில் இருந்து விவேகானந்தர் பாறை வரை படகுகள் அணிவகுப்பு நடந்தது. நிகழ்ச்சியில் கலெக்டர் அரவிந்த் கலந்துகொண்டு படகுகள் அணிவகுப்பை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
குமரி மாவட்டமானது மீனவர்களின் உழைப்புக்கும், அவர்களது வாழ்வாதாரத்திற்கும், செயல்பாடுகளுக்கும் மிகவும் பெயர்போன மாவட்டம் ஆகும். மீனவர்களின் பல்வேறு பிரச்சினைகள் குறித்து அதிக அளவில் ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது. கடலோர பகுதிகள் மற்றும் துறைமுகம் பகுதிகளில் வசிக்கும் மீனவ மக்களின் பாதுகாப்பினை உறுதி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.