Lok Sabha Election 2024: கொடுப்பவர் வேண்டுமா? எடுப்பவர் வேண்டுமா? ராகுல்காந்தி கொடுப்பவர்! - செல்வபெருந்தகை
பாசிச ஆட்சியை அகற்றி வீழ்த்த வேண்டும். மோடியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என மக்கள் தயாராக உள்ளனர். மோடி ஆட்சிக்கு மக்கள் டாட்டா பை பை காட்டிவிட்டனர்.
நெல்லை மக்களவைத்தொகுதி காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் பாளையங்கோட்டை ஜோதிபுரம் திடலில் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழ்நாடு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை, முன்னாள் காங்கிரஸ் கமிட்டி தலைவர் தங்கபாலு, முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவருமான தமிமுன் அன்சாரி உள்ளிட்டவர் கலந்து கொண்டு வேட்பாளருக்கு ஆதரவாக பரப்புரை மேற்கொண்டனர். அப்போது கூட்டத்தில் பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, "சர்வாதிகாரத்தை வீழ்த்த வேண்டும் என்றால் ஜனநாயகம் மலர வேண்டும். ஜனநாயகம் மலர்ந்தால் தான் இந்த தலைமுறையை காப்பாற்ற முடியும். இந்த தலைமுறையை காப்பாற்றினால் தான் அடுத்த தலைமுறைக்கு வழிவகை செய்ய முடியும். எனவே யார் ஆள வேண்டும், யார் ஆள கூடாது என இந்தியா முழுவதும் மக்கள் தீர்மானித்து இருக்கிறார்கள்.
நெல்லை மாவட்டம் இரண்டாவது சுதந்திர போரில் நம்மை அர்பணித்து கொள்ளும் காலமாக கருதுகிறோம். பாசிசத்தை வீழ்த்த வேண்டும் ஜனநாயகம் மலர வேண்டும் என்றால் பாஜகவும், அதிமுகவும் டெபாசிட் இழக்க வேண்டும். இது தான் திருநெல்வேலியின் பிரகடனமாக இருக்க வேண்டும். மோடி பத்தாண்டு ஆட்சியில் சொன்ன வாக்குறுதி எதையும் நிறைவேற்றவில்லை வாக்குறுதிகள் நிறைவேற்ற முடியாத ஆட்சி தான் தற்போது நடந்து வருகிறது. வேலைவாய்ப்பின்மை, பசி பட்டினி, விவசாயிகள் தற்கொலை, பெண்கள், குழந்தைகள் என யாருக்கும் பாதுகாப்பில்லை. பெரும் தொழிலதிபர்களுக்கு மட்டும்தான் இந்த ஆட்சியில் பாதுகாப்பு உள்ளது. பாசிச ஆட்சியை அகற்றி வீழ்த்த வேண்டும். மோடியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என மக்கள் தயாராக உள்ளனர். மோடி ஆட்சிக்கு மக்கள் டாட்டா பை பை காட்டிவிட்டனர். தமிழகத்தை தலைகீழாக புரட்டிபோட்ட மோடியும், எடப்பாடியும் எவ்வளவு பெரிய துரோகத்தை இளைத்துள்ளனர். அதற்கெல்லாம் இந்த தேர்தலில் அவர்கள் பதில் சொல்ல வேண்டும். தமிழக முதலமைச்சர் சொன்ன வாக்குறுதி அனைத்தையும் நிறைவேற்றியுள்ளார்.
நெல்லை, தூத்துக்குடி, காஞ்சிபுரம், சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட போது மோடி வரவில்லை, மத்திய அமைச்சர்கள் யாரும் வரவில்லை, பாதிக்கப்பட்ட இடங்களை பார்க்கவும் இல்லை. பேரிட நிவாரண நிதியாக முதலமைச்சர் கேட்ட 1 ரூபாய் கூட நிதியும் இதுவரை கொடுக்கவில்லை. ஆனால் வாக்கு சேகரிக்க வருகின்றனர். ஒருவர் இரட்டை இலைக்கு வாக்கு சேகரிக்கிறார், ஒருவர் தாமரைக்கு வாக்கு சேகரிக்கிறார். இரட்டை இலையும், தாமரையும் மக்கள் பாதிப்பிற்குள்ளான போது எங்கு இருந்தார்கள்? எதற்காக தமிழ்நாட்டிற்கு கிடைக்க வேண்டிய நிதியை தரவில்லை. ஆனால் இரண்டு ஆண்டுகளில் தமிழக முதலமைச்சர் 80% சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றி முடித்துள்ளார். சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்றால் கேட்கும் மாநிலத்தின் மீது போர் தொடுத்து வருகிறது. மத்திய அரசு தமிழகத்தின் மீதும் அதே போல் போர் தொடுத்து வருகிறது. தமிழுக்காக ஒதுக்கப்படும் நிதி ஆளவை குறைத்துவிட்டது. நீட் போன்ற தேர்வுகளால் மக்களை துன்புறுத்தி வருகிறது. நடக்கும் 18வது மக்களவைத் தேர்தல் அடுத்த தலைமுறையை காக்கும் தேர்தலாக அமைய வேண்டும். இந்த தேர்தல் கொடுப்பவருக்கும், எடுப்பவருக்கும் இடையே நடைபெறும் தேர்தல். மோடி வங்கிகளில் போடும் மக்களின் பணத்தை எடுப்பவர். ராகுல் காந்தி மக்களுக்கு கொடுப்பவர். கொடுப்பவர் வேண்டுமா? எடுப்பவர் வேண்டுமா? என மக்கள் முடிவு செய்ய வேண்டும். இந்த மண்ணை பாதுகாக்க வேண்டும், அடுத்த தலைமுறையை காக்க வேண்டும் ஏமாற்றுப் பேர் வழிகளுக்கு பாடம் புகட்ட வேண்டும் என்றால் பாஜகவும் அதிமுகவும் டெபாசிட் இழக்க வேண்டும். நெல்லை மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் ப்ரூஸ் போதனை செய்து மக்களுக்காக பிரார்த்தனை செய்பவர்" என அவர் தெரிவித்தார்.