மக்கும் குப்பை உரமானது - விவசாயிகளுக்கு இலவச உரம் வழங்கும் தூத்துக்குடி மாநகராட்சி
தூத்துக்குடி மாநகராட்சியில் தற்போது மாதந்தோறும் 50 டன் உரம் தயாரிக்கப்படுகிறது. எதிர்காலத்தில் 100 டன் உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளோம்.
குப்பையில்லா மாநகராட்சியை உருவாக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக தூத்துக்குடி மாநகராட்சியால் தயாரிக்கப்பட்ட இயற்கை உரம் விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டு வந்தது. தற்போது முத்துரம் என்ற பெயரில் சலிக்கப்பட்ட இயற்கை உரமானது வீட்டுத்தோட்ட, மாடித்தோட்ட பயன்பாட்டிற்கு மாநகராட்சிப் பகுதியிலுள்ள பொது மக்களுக்கு இலவச விநியோகத்தினை தொடங்கியுள்ளது.
தூத்துக்குடி மாநகராட்சியின் மொத்தம் 60 வார்டுகள் உள்ளன. வடக்கு, தெற்கு, கிழக்கு மேற்கு என 4 மண்டலங்கள் உள்ளன. ஒவ்வொரு மண்டலமும் 15 வார்டுகளை உள்ளடக்கியுள்ளது. கடந்த 2018-ம் ஆண்டு முதல் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இருந்து மக்கும் குப்பை, மக்காத குப்பை என தனித்தனியாகப் பிரிக்கப்பட்டு பெறப்பட்டு வருகிறது. தினமும் 120 முதல் 150 டன் வரை குப்பைகள் சேகரிக்கப்படுகிறது. இதில், 80 முதல் 100 டன் வரை மக்கும் குப்பைகள் கிடைக்கின்றன.
மக்கும் குப்பைகள் நுண் உர செயலாக்க மையங்களுக்கும், மக்காத குப்பைகள் மற்றும் கழிவுகள் மறு சுத்திகரிப்பிற்கும், சிமெண்ட் தயாரிக்கும் தொழிற்சாலைகளுக்கும் அனுப்பப்படுகின்றன. தினமும் சராசரியாக 180 டன் குப்பைகள் சேகரிக்கப்படுகிறது. இதில், 75 டன் வரை மக்கும் குப்பை கிடைக்கிறது. 500-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் உரத் தயாரிப்பில் ஈடுபடுகிறார்கள்.
தற்போது 4 மண்டலங்களில் 11 இடங்களில் உள்ள 16 நுண் உர செயலாக்க மையம் இயங்கி வருகிறது. ஒவ்வொரு மையத்திலும் தலா 25 தொட்டிகள் என 400 தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. சேகரிக்கப்படும் மக்கும் குப்பைகள், காய்கறிக்கழிவுகள் மிஷின் மூலம் அரைக்கப்பட்டு தொட்டிகளில் நிரப்பப்படுகின்றன. 10 அடி நீளம், 4 அடி அகலம், 5 அடி ஆழம் கொண்ட ஒரு தொட்டியில் 40 டன் மக்கும் குப்பைகள் நிரப்பப்பட்டு 200 லிட்டர் தண்ணீர் விட்டு நன்கு கிளறி விடுகிறோம். 5 நாட்களுக்கு ஒருமுறை இப்படி கிளறி விட வேண்டும்.
நுண் உர மையங்களில் கோழிகளும் வளர்க்கப்படுவதால் அவைகளும் கிளறி விடுதல் பணியைச் செய்கிறது. உரத் தயாரிப்புத் தொட்டிகளில் மக்கும் குப்பை நிரப்பிடும் ஆரம்ப நாள், நிரப்பப்பட்ட முடிவு நாள், உரமாகும் நாள் ஆகியவை குறிக்கப்பட்டுள்ளது 5வது, 10வது, 20வது நாட்களில் 20 லிட்டர் தண்ணீரில் 1 லிட்டர் இ.எம் கரைசல் அதனுடன் 1 கிலோ தூளாக்கப்பட்ட நாட்டுச் சர்க்கரையைக் கலந்து தெளிக்கிறோம். குப்பையை மக்கச் செய்யும் உயிரி உரமான இக் கரைசலால் 45 நாளில் மக்கி உரமாக மாறுகிறது. மொத்தக் கழிவுகளில் 10 சதவீம் உரமாக கிடைக்கிறது.
இதுகுறித்து தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகனிடம் கேட்டபோது, தூத்துக்குடி மாநகராட்சியில் தற்போது மாதந்தோறும் 50 டன் உரம் தயாரிக்கப்படுகிறது. எதிர்காலத்தில் 100 டன் உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளோம். கிள்ளிகுளம் வேளாண்மைக் கல்லூரி தங்களின் கல்லூரி ஒரு கிலோ உரத்தை ரூ.1-க்கு கேட்டுள்ளார்கள். மாநகராட்சிப் பூங்காக்களில் உள்ள செடிகளுக்கும், மியாவாக்கி காடுகளுக்கும் இந்த உரம் பயன்படுத்தப்படுகிறது. கடந்த 2018-ல் இருந்து விவசாயப் பயன்பாட்டிற்காக 2,000 டன் இயற்கை உரம் வழங்கப்பட்டுள்ளது. தற்போது சலிக்கப்பட்ட இயற்கை உரம் பொதுமக்களுக்கு இலவசமாக வழங்குவதை தொங்கியுள்ளோம். இதற்கென முத்துரம் இயற்கை உரம் என்ற வாக்கியத்துடன் முத்து வடிவிலான லோகோ உருவாக்கப்பட்டுள்ளது. மண்புழு உரத் தயாரிப்பும் தற்போது தொடங்கப்பட்டுள்ளது. அடிப்படை வசதிகள், சுகாதாரம், நிர்வாகம் என அனைத்திலும் முதன்மையான மாநகராட்சியாக மாற்றுவதே இலக்காக கொண்டு செயல்படுவதாக கூறுகிறார்.
தூத்துக்குடி மாநகராட்சியில் தயாரிக்கப்படும் உரத்தினைப் பெற விரும்பும் விவசாயிகள், அனைத்து வேலை நாட்களிலும் மாநகராட்சிப் பகுதியில் உள்ள 16 நுண் உர செயலாக்க மையங்களில் நேரடியாகச் சென்று பெற்றுக் கொள்ளலாம். மாநகராட்சி ஆணையாளருக்கு விண்ணப்பக் கடிதத்தை சொந்தக் கையெழுத்தில் எழுதி அதில் விவசாயியின் பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தை ஒட்டி அதனுடன், ஆதார் கார்டு நகல் இணைத்து அளிக்க வேண்டும். உரத்தின் இருப்பைப் பொறுத்தும், பதிவு முன்னுரிமையின் அடிப்படையிலும் உரம் வழங்கப்படுவதாகவும், விவசாயிகள், தங்களது டிராக்டர் அல்லது மினிவேன் எடுத்துச் சென்று உரத்தைப் பெற்றுச் செல்லலாம். அதிகபட்சமாக ஒரு விவசாயிக்கு 5 டன் உரம் வழங்கப்படும். தூத்துக்குடி மாவட்டத்தைச் சேந்த விவசாயிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். வீட்டுத்தோட்டம், மாடித்தோட்டத்திற்கு உரம் தேவைப்படுவோரும் இந்த மையங்களில் சென்று பெற்றுக் கொள்ளலாம். தேவையைப் பொறுத்து 1 கிலோ, 2 கிலோ, 5 கிலோ மற்றும் 10 கிலோ பைகளில் சலிக்கப்பட்ட இயற்கை உரம் வழங்கப்படும். மாநகராட்சிப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது