(Source: ECI/ABP News/ABP Majha)
Amudha IAS : காவல்துறை அதிகாரி பல் பிடுங்கிய விவகாரம்: காவல் நிலையத்துக்கு நேரில் சென்று ஆய்வு செய்த அமுதா ஐஏஎஸ்
விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டவர்கள் பற்களை காவல் அதிகாரி பல்வீர் சிங் பிடுங்கியதாக எழுந்த புகாரில் ஐஏஎஸ் அதிகாரி அமுதா நடத்திய இரண்டாவது நாள் விசாரணை நிறைவடைந்தது.
விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டவர்கள் பற்களை காவல் அதிகாரி பல்வீர் சிங் பிடுங்கியதாக எழுந்த புகாரில் ஐஏஎஸ் அதிகாரி அமுதா நடத்திய இரண்டாவது நாள் விசாரணை நிறைவடைந்தது.
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காவல் நிலைய பகுதிகளில் விசாரணைக்கு அழைத்து செல்லப்படுபவர்களின் பற்களை பிடுங்கி ஏ.எஸ்.பி.யாக இருந்த பல்வீர் சிங் சித்திரவதை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த விவகாரம் தமிழ்நாடு முழுவதும் மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனைத் தொடர்ந்து பல்வீர் சிங் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். அவருக்கு எதிராக எழுந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக முறைப்படி விசாரணை நடத்த வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தனர். இதனைத் தொடர்ந்து விரிவான விசாரணை நடத்த ஊரக வளர்ச்சி முதன்மை செயலாளரும், மூத்த ஐஏஎஸ் அதிகாரியுமான அமுதாவை விசாரணை அதிகாரியாக தமிழ்நாடு அரசு நியமித்தது. அவர் ஒரு மாதத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டிருந்தது.
இவர் கடந்த ஏப்ரல் 10 ஆம் தேதி அம்பாசமுத்திரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் விசாரணையை தொடங்கினார். ஆனால் முதல் நாளில் யாரும் விசாரணைக்கு ஆஜராகவில்லை. அதேசமயம் மேலும் நேரில் ஆஜராக முடியாதவர்கள் தொலைபேசி வாயிலாகவோ, இமெயில் வாயிலாகவோ, வாட்ஸஅப் மெசேஜ் அல்லது வாட்ஸஅப் ஃபோன் மூலம் வாக்கு மூலத்தை பதிவு செய்யலாம் எனவும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதனையடுத்து இரண்டாவது கட்ட விசாரணையை அமுதா நேற்று (ஏப்ரல் 17) மீண்டும் தொடங்கினார். இந்த சம்பவத்தில் விசாரணைக்கு வருபவர்கள் போலீசாருக்கு எதிரான குற்றச்சாட்டுகளை தெரிவிக்க வருவதால் வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்த அனைத்து காவல்துறையினரையும் வெளியேற வருவாய்துறை அதிகாரிகள் உத்தரவிட்டனர்.
நேற்று 11 பேரிடம் விசாரணை நடந்த நிலையில் நள்ளிரவு 12 மணி வரை நீடித்தது. இன்றும் மீதமுள்ள 3 பேரிடம் விசாரணை தொடர்ந்த நிலையில் மாலையில் நெல்லை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயனுடன் விசாரணை அதிகாரி அமுதா சம்பந்தப்பட்ட அம்பாசமுத்திரம் காவல் நிலையத்திற்கு சென்று ஆய்வு செய்ததோடு அங்கிருந்த காவலர்களிடம் விசாரணை நடத்தினார். முன்னதாக காவல்துறை அதிகாரி பல்வீர் சிங் மீது நேற்று 3 பிரிவுகளின் கீழ் காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில் திருநெல்வேலி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் என். சிலம்பரசனிடம் இந்த விவகாரம் தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பல்வீர்சிங் மீது 4 பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இதுதொடர்பாக கருத்து தெரிவித்தால் விசாரணை பாதிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.