நெல்லை மேயரை மாற்றக்கோரி ஒட்டுமொத்த கவுன்சிலர்கள் அமைச்சர் உதயநிதிக்கு கடிதம் - காரணம் என்ன..?
அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக வீணாக என்மீது பழி சுமத்தப்படுகிறது. இந்த புகாரில் உண்மை ஏதுமில்லை.
55 வார்டுகளை கொண்ட நெல்லை மாநகராட்சியின் மேயராக சரவணன் உள்ளார். குறிப்பாக மொத்தம் உள்ள 55 வார்டுகளில் 51 வார்டு உறுப்பினர்கள் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்தவர்களாகவே இருக்கின்றனர். இந்த நிலையில் ஆரம்பம் முதலே திமுக மேயராக உள்ள சரவணனை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கைகள் மாமன்ற உறுப்பினர்களிடையே வலுத்து வருகிறது. இதற்காக அமைச்சர் கே.என் நேருவை சந்தித்தும் கோரிக்கை வைத்தனர். குறிப்பாக பாளையங்கோட்டை எம்.எல்.ஏ அப்துல் வஹாப்பிற்கும், மேயருக்கும் கடந்த சில மாதங்களாக டெண்டர் விடுவது உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் பிரச்சனை ஏற்பட்டு வந்தது. இதனை இருவரும் பொது வெளியில் கூறாமல் மறுத்து வந்தனர். ஆனால் அப்துல் வஹாப்பின் ஆதரவாளர்களான மாமன்ற உறுப்பினர்கள் சரவணனுக்கு எதிராக போர்க்கொடி தூக்கினர். இந்த சூழலில் தற்போது நெல்லை மேயர் சரவணனை மாற்றக்கோரி மாநகராட்சி திமுக கவுன்சிலர்கள் 40க்கும் மேற்பட்டோர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு பரபரப்பு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர்.
அதில், திராவிட மாடல் ஆட்சியில் உருவான நெல்லை மாநகராட்சி கவுன்சிலர்கள் மனமுடைந்து எழுதும் கடிதம் இது. மேயர் சரவணன் மீது டெண்டர் கமிஷன் வரைமுறையற்ற ஊழல் பிரச்சினைகள் மற்றும் செயலற்ற நிர்வாக திறன் குறித்து பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் எதிர்க்கட்சிகளின் போராட்டம் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. எனவே இயக்கத்தின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் காரியங்களிலும், ஊழல் நடவடிக்கைகளிலும் ஈடுபட வேண்டாம் என நாங்களும் பலமுறை மேயரிடம் தெரிவித்துவிட்டோம். ஆனாலும் தொடர்ச்சியாக மேயர் சரவணன் தன்னிச்சையாக ஒப்பந்ததாரர்களிடமும் மாநகராட்சி நிர்வாகத்திலும் தனி ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்பட்டு வருகிறார். மேயரின் நடவடிக்கையால் பொதுமக்கள் மத்தியில் ஒட்டுமொத்த கவுன்சிலர்களும் தலைகுனிந்து நிற்கிறோம். மாநகராட்சியை கலைத்து விடும்படி பத்திரிகைகளில் செய்திகள் வெளியானது மேயருக்கெ எதிராக அனைத்து கவுன்சிலர்களும் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரும் மனநிலையில் இருக்கின்றனர். ஆனால் அவ்வாறு தீர்மானம் கொண்டு வந்தால் அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுவதோடு முதல்வரின் மனம் புண்படும் என்பதால் எங்கள் கோரிக்கையை ஏற்று மேயரை சரவணன் மீது நடவடிக்கை எடுத்து மேயரை மாற்ற வேண்டும், அனைத்து மாமன்ற உறுப்பினர்களும் மக்கள் நலன் சார்ந்த திட்ட பணிகளை செய்ய முடியாத வகையில் தொடர்ந்து இடையூறாக இருக்கும் மேயரை மாற்றம் செய்து நெல்லை மாநகராட்சி பிரச்சினைகளுக்கு ஒரு நிரந்தர தீர்வு அளிக்க வேண்டும் என்றும் அந்த கடிதத்தில் கவுன்சிலர்கள் கூறியுள்ளனர்.
அதாவது கட்சியின் அடிமட்டத் தொண்டனாக இருந்த சரவணனை நெல்லை மத்திய மாவட்டச் செயலாளராக இருந்த அப்துல்வஹாப் தனது கட்டுப்பாட்டுக்குள் இருப்பார் என கருதி சரவணனை மேயராகக் கொண்டு வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் பொறுப்பு கைக்கு வந்ததும் மேயர் சரவணனின் நடவடிக்கைகளில் மாற்றம் ஏற்பட்டதால் இருதரப்பாக மறைமுக பனிப்போர் நிலவி வந்தது. அப்துல் வகாப்பின் எதிரணியான மாலைராஜா அணியில் மேயர் சரவணன் கைகோர்த்ததால் ஆத்திரமடைந்த அப்துல்வகாப்பின் ஆதரவு கவுன்சிலர்கள் மாநகராட்சி மன்ற கூட்டங்களில் தொடர்ச்சியாக மேயருக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். குறிப்பாக அரசு ஒப்பந்ததாரர்களை மேயர் சரவணன் தனது அறைக்குள் அழைத்து கமிஷன் கேட்பதாக ஆளுங்கட்சி கவுன்சிலர்களே பகிரங்கமாக குற்றம் சாட்டினர். அப்துல் வகாப் தூண்டுதலின் பெயரில் தான் கவுன்சிலர்கள் மேயருக்கு எதிராக நடந்து கொள்வதாக கூறப்பட்டது. அதன் பின் தொடர்ச்சியாக நெல்லை மாநகராட்சி மன்ற கூட்டத்தில் திமுக கவுன்சிலர்களிடையே மோதல்போக்கு வெடித்து வந்தது. குறிப்பாக மாவட்ட செயலாளர் ஆதரவு கவுன்சிலர்கள் மற்றும் மேயர் ஆதரவு கவுன்சிலர்கள் ஒருவருக்கொருவர் சரமாரியாக வார்த்தைகளால் மோதிக்கொண்டனர். லேசான கைகலப்பும் ஏற்பட்டது. இதனால் திமுக உள்கட்சி பூசல் வெட்ட வெளிச்சமானதை தொடர்ந்து அப்துல் வகாப்பை மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து திமுக தலைமை அதிரடியாக நீக்கியது.. அவருக்கு பதில் முன்னாள் அமைச்சரும், மாலை ராஜா அணியைச் சேர்ந்தவருமான டிபிஎம் மைதீன்கானை மாவட்ட பொறுப்பாளராக திமுக தலைமை நியமித்துள்ளது.
அதன் பின்னரும் அப்துல் வகாப்பை ஆதரிக்கும் துணை மேயர் ராஜூ உள்பட திமுக கவுன்சிலர்கள் மேயருக்கு எதிரான நடவடிக்கைகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வந்தனர். மன்ற கூட்டங்களில் மேயர் வரும் போது அவரை அவமதிப்பது, மன்ற கூட்டத்தை புறக்கணித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபடுவது போன்ற செயல்களில் ஆளுங்கட்சி கவுன்சிலர்கள் ஈடுபட்டு வந்தனர். உச்சபட்சமாக சமீபத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் மேயர் சரவணின் உரையை புறக்கணித்து திமுக கவுன்சிலர்கள் மேடையில் இருந்து கூண்டோடு வெளியேறினர். இது போன்ற சூழ்நிலையில் தான் தற்போது மேயர் சரவணனை மாற்ற கோரி அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு திமுக கவுன்சிலர்கள் தற்போது கடிதம் அனுப்பியுள்ளனர். நெல்லை மாநகரில் திமுகவினரிடையே உள்கட்சி பூசல் பூதாகரமாக வெடித்திருக்கும் நிலையில் மேயர் தொடர்ச்சியாக குறி வைக்கப்பட்டு தற்போது அவரை மாற்றக்கோரி 40க்கும் மேற்பட்ட கவுன்சிலர்கள் கையொப்பமிட்டு கடிதம் அனுப்பியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இது குறித்து மேயர் தெரிவிக்கும் பொழுது, அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக வீணாக என்மீது பழி சுமத்தப்படுகிறது. இந்த புகாரில் உண்மை ஏதுமில்லை என்று தெரிவித்தார்.