Adichanallur Excavation: ஆதிச்சநல்லூர் அகழாய்வில் கிடைத்த தங்கம்; உற்சாகத்தில் ஆய்வாளர்கள்..!
முதுமக்கள் தாழியில் வெண்கலத்தால் ஆன அலங்கார ஜாடி, ஜாடியின் மேல் கொக்கு, வாத்து பறவைகள் நீர் அருந்துவது போல் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் அதன் அருகில் 2 வெண்கலத்தால் ஆன வடிக்கட்டியும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே தாமிரபரணி நதிக்கரை ஓரத்தில் ஆதிச்சநல்லூரில் மத்திய தொல்லியல் துறை சார்பில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியம் அமைக்கப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த 2020ம் ஆண்டு அறிவித்திருந்தார்.
அதன் முதல் கட்டமாக மத்திய தொல்லியல் துறை சார்பில் திருச்சி மத்திய தொல்லியல் மண்டல இயக்குனர் அருண் ராஜ் தலைமையில் அகழாய்வு பணிகள் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் முதல் தொடங்கப்பட்டது. இந்த அகழாய்வு பணியில் கிடைக்கும் பொருட்கள் அனைத்தும் இங்கேயே காட்சிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த அகழாய்வு பணிகள் ஆதிச்சநல்லூர் பரம்பு பகுதியில் மூன்று இடங்களில் நடந்து வருகிறது. இந்த அகழாய்வு பணியில் 80க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டது.
இதற்கிடையில் ஆதிச்சநல்லூரில் சி சைட் என அழைக்கப்படும் அலெக்சாண்டர் ரியா கடந்த 117 வருடங்களுக்கு முன்பு அகழாய்வு செய்த பகுதியில் 30 செண்டி மீட்டர் ஆழத்தில் ஒரு தங்கத்தால் செய்யப்பட்ட காதணி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆதிச்சநல்லூரில் 1902ஆம் ஆண்டு அலெக்சாண்டர் ரியா அகழாய்வு செய்தபோது தங்கத்தால் செய்யப்பட்ட நெற்றிப்பட்டயம் கண்டுபிடிக்கப்பட்டது. அதன்பின்னர் நடந்த 4 கட்ட அகழாய்வு பணியில் தங்கத்தால் செய்யப்பட்ட பொருள் எதுவும் கிடைக்கவில்லை.
இந்த நிலையில் இன்றைய தினம் சி சைட் என அழைக்கப்படும் பகுதியில் ஏற்கனவே தோண்டப்பட்ட குழியில் தங்கத்தால் ஆன 3.5 செண்டி மீட்டர் நீளம் கொண்ட நெற்றிப்பட்டயம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் அதே முதுமக்கள் தாழியில் வெண்கலத்தால் ஆன அலங்கார ஜாடி, ஜாடியின் மேல் கொக்கு, வாத்து பறவைகள் நீர் அருந்துவது போல் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் அதன் அருகில் 2 வெண்கலத்தால் ஆன வடிக்கட்டியும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் அதே குழியில் 20 இரும்பு பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதில் 9 அம்புகள், 1 வாள், 1 ஈட்டி, 1 சூலம், தொங்கவிட்டான் உள்பட 20 பொருட்கள் அடங்கும். இதனால் ஆய்வாளர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
இதுகுறித்து மத்திய தொல்லியல் துறை திருச்சி மண்டல இயக்குநர் அருண்ராஜ் கூறும்போது, ஆதிச்சநல்லூரில் மத்திய தொல்லியல் துறை சார்பில் கடந்த வருடம் அகழாய்வு பணிகள் தொடங்கியது. தொடங்கிய காலத்தில் இருந்தே ஏராளமான தொல்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று தங்கத்தால் ஆன நெற்றிப்பட்டயம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த குழியில் புதைக்கப்பட்டவர் அந்த காலத்தில் மிகப்பெரிய தலைவராக இருந்திருப்பார். எனவே தான் இந்த குழியில் மேலும் வெண்கல பொருட்கள், இரும்பு பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த தங்கம் வருகின்ற காலங்களில் ஆதிச்சநல்லூரில் அமைய உள்ள அருங்காட்சியகத்தை அலங்கரிக்கும் ஒரு பொருளாக இருக்கும் என அவர் தெரிவித்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்