ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கக்கோரி 21 கிராம மக்கள் ஊர்வலமாக வந்து ஆட்சியர் அலுவலகத்தில் மனு
ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் ஆலையில் இருந்து ஜிப்சம் கழிவுகளை வெளியேற்றவும், ஆலையில் உள்ள பசுமை வளாகத்தை பராமரிக்கவும், வேறு கழிவுகள் இருந்தால் அவைகளை அகற்றவும் அனுமதி அளிக்க வேண்டும்
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கக் கோரி 21 கிராம மக்கள் ஊர்வலமாக வந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
தூத்துக்குடி அருகேயுள்ள குமாரரெட்டியாபுரம், தெற்கு வீரபாண்டியபுரம், காயலூரணி, சாமிநத்தம், சில்லாநத்தம், ராஜாவின்கோவில், மீளவிட்டான், மடத்தூர், வடக்கு சிலுக்கன்பட்டி, தெற்கு சிலுக்கன்பட்டி உள்ளிட்ட 21 கிராமங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மக்கள் கோரம்பள்ளத்தில் இருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி ஊர்வலமாக வந்தனர். தூத்துக்குடி- திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அணுகு சாலை வழியாக ஊர்வலமாக வந்த அவர்களை போலீஸார் நடுவழியில் தடுத்து நிறுத்தினர். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு ஊர்வலமாக செல்ல அனுமதி இல்லை. எனவே, முக்கிய நிர்வாகிகள் 5 பேர் மட்டும் ஆட்சியர் அலுவலகம் சென்று மனு அளியுங்கள் என போலீஸார் கேட்டுக் கொண்டனர். இதையடுத்து கிராம மக்களின் பிரதிநிதிகள் மட்டும் ஆட்சியர் அலுவலகத்துக்கு சென்று மனு அளித்தனர். மற்றவர்கள் கலைந்து சென்றனர்.
ஆட்சியர் அலுவலகத்தில் அவர்கள் அளித்த மனுவில்,ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் ஆலையில் இருந்து ஜிப்சம் கழிவுகளை வெளியேற்றவும், ஆலையில் உள்ள பசுமை வளாகத்தை பராமரிக்கவும், வேறு கழிவுகள் இருந்தால் அவைகளை அகற்றவும் அனுமதி அளிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. எனவே, உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்களை பின்பற்றி இந்த பணிகளை மேற்கொள்ள உடனடியாக மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்க வேண்டும். மேலும், சுற்றியுள்ள கிராம மக்கள் அனைவரும் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் விரைவாக திறக்க வேண்டும் என விரும்புகிறோம். எனவே, அதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் என, அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்டெர்லைட் ஆதரவாளர்கள் ஊர்வலமாக வந்ததால் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டு, பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
ஸ்டெர்லைட் ஆதரவு கூட்டமைப்பைச் சார்ந்தவரும் துளசி சோசியல் டிரஸ்ட் என்ற தன்னார்வ அமைப்பு இயக்குனர் தனலட்சுமி செய்தியாளருக்கு பேட்டி அளிக்கும்போது கூறுகையில், உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின் படி மாவட்ட நிர்வாகம் உடனடியாக இந்த ஆலையை திறக்க அனுமதியை வழங்க வேண்டும். இந்த அனுமதியை வழங்கினால் முதற்கட்டமாக நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் பயனடைவார்கள்.எனவே தூத்துக்குடி மற்றும் சுற்றியுள்ள 21 கிராம மக்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்கு உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி வழங்க வேண்டும் என்று தெரிவித்தார். இதனையடுத்து ஒவ்வொரு கிராமத்திலிருந்தும் ஒரு சில பிரதிநிதிகள் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்திற்கு உள்ளே சென்று மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வலியுறுத்தி மனுவை அளித்தனர்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்