தூத்துக்குடி துறைமுகம்: பிரம்மாண்ட கப்பல் வருகை! தென் தமிழகத்தில் தொழில் புரட்சிக்கு வித்திடும் MSC Michaela!
தேசிய FMCG நிறுவனங்களை தமிழ்நாடு தொடர்ந்து ஈர்த்து வருவதாகவும், எந்தவொரு முக்கிய துறையும் பயன்படுத்தப்படாமல் விடப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.
தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகம் பிரம்மாண்ட கண்டெய்னர் சரக்குக்கப்பல்களை கையாளுதலில் ஒரு புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. M.V. MSC Michaela எனும் மிகப்பெரிய சரக்குக் கப்பல் தூத்துக்குடிக்கு நேற்று வந்து சென்றது. இந்த கப்பல் வருகை தூத்துக்குடி துறைமுக வரலாற்றில் மிகப்பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது.
டாக்ஷின் பாரத் கேட்வே டெர்மினலுக்கு வந்த இந்த கப்பல் 304 மீட்டர் நீளம் கொண்டது. 6,724 TEUS சரக்குக் கொள்ளளவு கொண்ட இது, துறைமுகம் இதுவரை கையாண்ட கப்பல்களில் மிகப்பெரியது. தூத்துக்குடி நோக்கி வந்த ராட்சச கப்பல் இது என்பது குறிப்பிடத்தக்கது. எம்.எஸ்.சி மைக்கேலாவின் வெற்றிகரமான வருகை, தூத்துக்குடி துறைமுகத்தின் மேம்பட்ட உள்கட்டமைப்பு மற்றும் செயல்பாட்டுத் தயார்நிலையை எடுத்துக்காட்டுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். முக்கிய சர்வதேச துறைமுகங்களில் கையாளப்படும் பெரிய கண்டெய்னர் கப்பல்களை துறைமுகம் தற்போது நிர்வகிக்கும் திறனைக் கொண்டுள்ளது என்பதை இது காட்டுகிறது.
ஆழமான நீர்வழித்தடங்கள், நவீன டெர்மினல்கள் மற்றும் மேம்பட்ட சரக்குக் கையாளுதல் வசதிகளில் பல வருட முதலீடுகளின் பலனே இந்த வளர்ச்சி என வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணையம் கூறியது. உலகளாவிய கப்பல் நிறுவனங்களை ஈர்த்து சரக்குப் போக்குவரத்தை அதிகரிப்பதே இதன் நோக்கம். இச்சாதனை, தென்னிந்திய வர்த்தகத்தின் முக்கிய நுழைவாயிலாக தூத்துக்குடியின் நிலையை வலுப்படுத்தும் என கடல்சார் நிபுணர்கள் கூறுகின்றனர். இது தூத்துக்குடி மாவட்டத்தில் தொழில்களை அதிகரித்து, லாஜிஸ்டிக்ஸ் செலவுகளைக் குறைத்து, துறைமுகம் சார்ந்த வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எம்.எஸ்.சி மைக்கேலாவின் வருகை, துறைமுகத்தின் எதிர்கால வளர்ச்சிக்கும், மாநிலத்தின் கடல்சார் வணிகத் துறைக்கும் ஒரு நல்ல அறிகுறி என்றும் பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
தென் தமிழகம், தற்பொழுது தென்னிந்தியாவின் புதிய தொழில்துறை மற்றும் ஏற்றுமதி மையமாக விரைவாக வளர்ந்து வருகிறது. வெளிநாட்டு முதலீடுகள் மற்றும் அரசின் திட்டமிடப்பட்ட கொள்கைகள் இதற்கு முக்கிய காரணம். வியட்நாமிய மின்சார வாகன தயாரிப்பு நிறுவனமான வின்ஃபாஸ்ட், தூத்துக்குடியில் தனது ஆலையைத் தொடங்கியதன் மூலம், இம்முதலீடுகளுக்கு வழி வகுத்துள்ளது. இதன் மூலம் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர், தென்காசி மற்றும் மதுரை போன்ற மாவட்டங்களில் தொழில் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. தென் தமிழ்நாடு இந்தியாவின் 'முக்கியமான பொருளாதாரப் பாதை' என கூறப்படுகிறது.
அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்த ஆலை 2,000 உள்ளூர் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்று கூறப்படுகிறது. முன்னணி தேசிய FMCG நிறுவனங்களை தமிழ்நாடு தொடர்ந்து ஈர்த்து வருவதாகவும், எந்தவொரு முக்கிய துறையும் பயன்படுத்தப்படாமல் விடப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. தமிழ்நாடு உணவு மற்றும் வேகமாக நகரும் நுகர்வோர் பொருட்களுக்கான உற்பத்தி மற்றும் தளவாட மையமாக தன்னை நிலைநிறுத்தி வருகிறது. குறிப்பாக வியட்நாமின் மின்சார வாகன தயாரிப்பு நிறுவனமான வின்ஃபாஸ்டின் வருகையுடன் தூத்துக்குடி ஒரு வளர்ந்து வரும் தொழில்துறை மையமாக மாறி வருகிறது.





















