அமைச்சரின் உத்தரவை பின்பற்றாத போக்குவரத்துக்கழகம்; சீருடை அணிந்து வந்தாலும் டிக்கெட் எடுக்க சொல்றாங்க
அமைச்சரின் உத்தரவை பின்பற்றாத போக்குவரத்துக்கழகம், சீருடை அணிந்து வந்தாலும் டிக்கெட் எடுக்க வேண்டும். பள்ளி நேரத்திற்கு கட் செய்யப்பட்ட அரசு பேருந்து
தூத்துக்குடி மாவட்டத்தில் வடக்கு கடைகோடி பகுதியில் முத்துலாபுரம், மேலக்கரந்தை பகுதிகள் அமைந்துள்ளன. இப்பகுதியில் உள்ள அயன்வடமலாபுரம், அச்சங்குளம், வேடப்பட்டி முத்துலாபுரம், தாப்பாத்தி, முகாம், மேலக்கரந்தை, மாசார்பட்டி, கீழக்கரந்தை, வெம்பூர், மெட்டில்பட்டி, அழகாபுரி ஆகிய கிராமங்களில் துவக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளியில் பயிலும் மாணாக்கர்கள் உயர்கல்விக்காக விருதுநகர் மாவட்டம் பந்தல்குடி அரசு மேல்நிலைப்பள்ளியில் சுமார் 200 க்கும் மேற்பட்டோர் பயின்று வருகின்றனர். பந்தல்குடி அரசு மேல்நிலைப்பள்ளியில் தனியார் பள்ளிக்கு நிகராக கல்வித்தரம் இருப்பதால் பெரும்பாலான கிராமங்களில் இருந்து இப்பள்ளியில் பயின்று வருகின்றனர். தவிர மாணவ மாணவியர்க்கு அரசு பள்ளிகளில் பல்வேறு சலுகைகள் வழங்குவதால் பெற்றோர் நிதிச்சுமையின்றி பந்தல்குடி அரசு மேல்நிலைப்பள்ளிக்கு தங்களது பிள்ளைகளை அனுப்புகின்றனர். இந்நிலையில் கோவில்பட்டியில் இருந்து காலை 7.00மணிக்கு புறப்பட்டு முத்துலாபுரம், தாப்பாத்தி, மேலக்கரந்தைக்கு 8.00 பந்தல்குடி வழியாக அருப்புக் கோட்டைக்கு செல்லக்கூடிய அரசு போக்குவரத்து கழகம் கோவில்பட்டி பணிமனை அரசு பேருந்தில் பந்தல்குடி பள்ளிக்கு காலை சுமார் 8.30 மணிக்கு சென்று வந்தனர்.
தற்போதைய கல்வி ஆண்டு தொடக்கமான ஜுன் பத்தாம் தேதி முதல் அப்பேருந்து இயக்கப்படவில்லை. இதனால் கோவில்பட்டியில் இருந்து காலை 7.30 மணிக்கு அருப்புக்கோட்டைக்கு செல்லக்கூடிய பேருந்து மேலக்கரந்தைக்கு காலை 8.30 மணிக்கு வருகிறது. அப் பேருந்தில் செல்ல வேண்டி உள்ளது. இதனால் பள்ளி துவங்கும் நேரம் 9.00 மணிக்குள் செ ல்ல முடியவில்லை. தவிர காலை 8.30 மணி பேருந்து கூட்ட நெரிசலாக வருவதால் பொதுமக்கள் மற்றும் வேலைக்கு செல்வோர் என பேருந்து நிரம்பி வருகிறது. இந்நிலையில் முத்துலாபுரத்தில் இருந்து தாப்பாத்தி, மேலக்கரந்தை, வெம்பூர் வரை சுமார் 200 மாணவ மாணவியர் அப்பேருந்தில் நிற்பதற்கு கூட இடமில்லாமல் தொங்கிக் கொண்டும், சிலர்இடம் இல்லாமல் பள்ளி செல்ல முடியாமல் வீடு திரும்புகின்றனர். தவிர காலை 8.00 மணிக்கு மேலக்கரந்தை வழியாக வரக்கூடிய பேருந்துக்கு மட்டுமே இலவச பயணம் அனுமதிக்கின்றனர். காலை 8.30 மணி அரசு பேருந்தில் பள்ளி சீருடை அணிந்திருந்தாலும் நடத்துநர் பயணக் கட்டணம் கேட்கின்றனர். பள்ளிச் சீருடை அணிந்து பயணம் செய்யும் மாணவ, மாணவியரிடம் டிக்கெட் வசூலிக்க கூடாது என தமிழக அரசின் போக்குவரத்து துறை அமைச்சர் கூறியிருந்தார். அமைச்சரின் உத்தரவை போக்குவரத்து கழகம் பின்பற்றுவதில்லை. கடந்த பத்து ஆண்டுகளாக பள்ளி காலை நேரத்தில் 8 மணிக்கு இயக்கப்பட்ட அரசு பேருந்து எவ்வித அறிவிப்பும் இன்றி நிறுத்தம் செய்யப்பட்டது.
இது குறித்து கரிசல் பூமி விவசாயிகள் சங்க தலைவர் வரதராஜன் கூறும்போது, “இச்செயல் பள்ளி மாணவர்களை இடைநிற்றலுக்கு வழிவகுக்கும். எனவேமாணவர்களின் அடிப்படை கல்வி விசயத்தில் எவ்வித சமரசமின்றி தொடர்ந்து பள்ளி நேரத்தில் கோவில்பட்டியில் இருந்து காலை 7.00 மணிக்கு எட்டையபுரம், முத்துலாபுரம், மேலக்கரந்தை, வெம்பூர் வழியாகபந்தல்குடி - அருப்புக் கோட்டைக்கு அரசு பேருந்து இயக்க வேண்டும்” என்றார்.