(Source: ECI/ABP News/ABP Majha)
பனங்கிழங்கை பொங்கல் தொகுப்போடு அரசு வழங்க ஆண்டுதோறும் கோரிக்கை விடுக்கும் பனை தொழிலாளர்கள்- கண்டு கொள்ளாத அரசு
நல்ல விளைச்சல் காரணமாக ஒரு கிழங்கு மூன்று ரூபாய்க்கு பனைத்தொழிலாளர்களிடம் வியாபாரிகள் கொள்முதல் செய்து ஐந்து ரூபாய்க்கு விற்பனை செய்கின்றனர்.
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை கொண்டாடும் விதமாக விவசாயிகள் தங்களது நிலங்களில் விளைவித்த பயிர்களை அறுவடை செய்ய அவற்றுக்கு பூஜை செய்து, பணிகளை தொடங்குவார்கள். பூஜையில், நெல் மணிகள், காய்கறிகள், மஞ்சள் குலை ஆகியவற்றுடன் பனங்கிழங்கும் பிரதானமாக இடம்பெற்றிருக்கும்.
தூத்துக்குடி மாவட்டத்தில் திருச்செந்தூர், உடன்குடி பகுதிகளுக்கு அடுத்தபடியாக எட்டயபுரம் அருகே தாப்பாத்தி, அயன்வடமலாபுரம் மற்றும் வைப்பாற்று கரையோர பகுதியில் சுமார் 2 லட்சம் பனை மரங்கள் உள்ளன. இங்கு ஆண்டுதோறும் தை மாதம் கடைசி முதல் ஆனி வரை பதநீர் சீசன் இருக்கும். அதன் பின்னர் நுங்கு சீசன் 2 மாதங்களுக்கு காணப்படும். தொடர்ந்து முதிர்ந்த நுங்கு பனம்பழமாக மாறிவிடும். பழுத்து உதிர்ந்த பனம்பழத்தை சேகரிக்கு பனைத் தொழிலாளர்கள், அதனை குறுமணலில் 2 அடி வரை ஆழம் தோண்டி புதைப்பது வழக்கம். 90 நாட்களில் வடகிழக்கு பருவமழையில் ஏற்படும் ஈரப்பதத்தில், பனை விதை கிழங்காக விளைந்து தைப்பொங்கல் பண்டமாக மாறிவிடும்.
பொங்கல் பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், எட்டயபுரம், அயன்வடமலாபுரம் மற்றும் வைப்பாற்று கரையோர பகுதி நிலங்களில் இருந்து பனங்கிழங்குகளை தோண்டி எடுக்கும் பணியில் பனை தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். கடைகளில் 25 எண்ணம் கொண்ட ஒரு பனங்கிழங்கு கட்டு ரூ.100-க்கு விற்பனையாகி வருகிறது. இதனால், தொழிலாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கடந்த ஆவணி மாதம் வைப்பாற்றங்கரையோரம் சுமார் ஒரு லட்சம் பனை விதைகள் விதைத்துள்ளோம். பனங்கிழங்கை பொறுத்தவரை ஈரப்பதமும் தேவை, அதே வேளையில் வெயிலும் தேவைப்படும். ஆனால், இந்தாண்டு பெய்த மழையின் காரணமாக பனங்கிழங்கு வரத்து அதிகரித்து உள்ளது.
இதுகுறித்து கரிசல்பூமி விவசாயிகள் சங்கத்தலைவர் வரதராஜன் கூறும்போது, ”கரிசல் மண்ணில் விளைவிக்கப்படும் பனங்கிழங்கு என்பதால் தமிழகம் முழுவதில் இருந்து வியாபாரிகள் ஆர்வம் காட்டுவார்கள். இதனால் கடந்த ஒரு மாதத்துக்கு முன்னதாகவே வந்து, தங்களுக்கு தேவையான பனங்கிழக்குகள் முன்வைப்பு தொகையாக அளித்துவிட்டு சென்றுவிட்டனர். பனை மரத்தை பொறுத்தவரை வேரில் இருந்து அதன் ஓலைகள் வரை அனைத்துமே பயன்பாடுள்ளது தான். அதிலும் மருத்துவ குணம் அதிகம் உள்ளது. எனவே, பொங்கல் பரிசு தொகுப்பில் பனங்கிழங்கை வழங்க வேண்டும் என ஆண்டுதோறும் கோரிக்கை விடுத்து வருகிறோம். ஆனால், எங்களது கோரிக்கை முறையாக சென்றடையவில்லை. வரும் காலங்களில் ரேஷன் கடைகளில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் பொங்கல் தொகுப்பில் பனங்கிழங்கை சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.
இந்தாண்டு அதிக மழை காரணமாக வரத்து அதிகம், கடந்தாண்டு பனைத்தொழிலாளர்களிடம் கிழங்கு ஐந்து ரூபாய்க்கு கொள்முதல் செய்து சந்தையில் ஏழு ரூபாய்க்கு வியாபாரிகள் விற்பனை செய்தனர். நல்ல விளைச்சல் காரணமாக ஒரு கிழங்கு மூன்று ரூபாய்க்கு பனைத்தொழிலாளர்களிடம் வியாபாரிகள் கொள்முதல் செய்து ஐந்து ரூபாய்க்கு விற்பனை செய்கின்றனர் என்கிறார்.