பல லட்சம் செலவு .. ஸ்ரீவைகுண்டம் அணை ஷட்டரில் ஓட்டை- வீணாக கடலுக்கு செல்லும் ஜீவ நீர்
தாமிரபரணி ஆற்றின் கடைசி தடுப்பணையான ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டு தண்ணீர் சேமிக்கும் ஷட்டரில் ஓட்டை. உடனடியாக போர்க்கால அடிப்படையில் சீரமைக்க கோரிக்கை.
திருநெல்வேலி மாவட்டம் தாமிரபரணி ஆறு மேற்குத் தொடர்ச்சி மலையின் கிழக்கு சரிவுகளில் உள்ள பொதிகை மலையின் உச்சியில் இருந்து கொட்டுகின்ற அருவியாக திகழ்கின்றது. கடல் மட்டத்திலிருந்து 1725 மீட்டர் உயரத்தில் தாமிரபரணி நதி அமைந்திருக்கிறது. திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களுக்கு இடையேயான எல்லையில் தாமிரபரணி நதி இருக்கிறது. இந்த நதியானது தமிழ்நாட்டில் தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்கள் வழியாக பாய்வதால் விவசாயத்திற்கு பயன்படக்கூடிய நீர்வளம் மிக்க ஒரு இடமாக அமைந்திருக்கிறது. தமிழ்நாட்டின் முக்கிய நதிகளில் ஒன்றாகவும் புகழ் பெற்று விளங்குகிறது. மேலும் தமிழ் மக்களின் கலாச்சாரம், பொருளாதாரம் மற்றும் பாரம்பரியங்களில் ஒரு அங்கமாகவும் தெய்வீக வரலாற்று காவியங்களில் பதிப்பாகவும் அமைந்திருப்பது தாமிரபரணி நதிக்கரையில் ஒரு தனி சிறப்பாகும்.தாமிரபரணி ஆறு சுமார் 128 கிலோமீட்டர் அதாவது 80 மைல் நீளம் கொண்டதாகும். மேலும் தமிழ்நாட்டின் ஒரே வற்றாத நதியாகவும் விளங்குகிறது. இந்த நதியானது முதலில் வடக்கு நோக்கி பாய்ந்து பின்னர் கிழக்கு திசையில் மாறுகிறது.
தாமிரபரணி நதியில் உள்ள கடைசி அணைக்கட்டான திருவைகுண்டம், ஆங்கிலேயர்கள் காலத்தில் கட்டப்பட்ட அணைக்கட்டு ஆகும். இந்த அணையில் இரண்டு கால்வாய்கள் உள்ளன. அதில் ஒன்றான திருவைகுண்டம் வட கால்வாய்மூலம் 9511 ஏக்கர் குளத்து பாசனம் உட்பட 12800 ஏக்கர் பயன்பெறுகிறது. அதில் இரண்டாவதான திருவைகுண்டம் தென் கால்வாய்மூலம் 10067 ஏக்கர் குளத்து பாசனம் உட்பட 12760 ஏக்கர் வரையிலான நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.
தாமிரபரணி நதி வற்றாத ஜீவநதி. தமிழகத்தில் உருவாகி தமிழகத்திலேயே கடலில் கலக்கும் ஒரே நதி தாமிரபரணி தான். இந்த தாமிரபரணி நதி மூலம் திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர், தென்காசி என 4 மாவட்டங்களுக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கி வருகிறது. அதுமட்டுமில்லாமல் தூத்துக்குடி மாவட்டத்தில் பல ஆயிரம் ஏக்கர் பாசன விவசாயத்திற்கும் உபயோகமாக உள்ளது. மேலும், தூத்துக்குடியில் உள்ள தொழிற்சாலைகளுக்கு நீர் வழங்கி வருகிறது. இந்த தாமிரபரணி ஆற்றில் 9 தடுப்பணைகள் உள்ளது. இதன் 80 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசதி வசதி பெற்று வருகிறது.
தாமிரபரணி ஆற்றின் கடைசி தடுப்பணையாக விளங்குகிறது ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டு. இந்த அணைக்கட்டு ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட அணைக்கட்டு. சுமார் 150 ஆண்டுகளை கடந்து கம்பீரமாக உள்ளது. மேலும் இந்த அணைக்கட்டு மூலம் வடகால் மற்றும் தென்கால் மூலம் விவசாயத்திற்கு பாசன வசதி வழங்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்பு ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டில் ஷட்டர்கள் அனைத்தும் பல லட்சம் செலவில் பழுது நீக்கம் செய்யப்பட்டது.
இந்த நிலையில் ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டில் உள்ள ஷட்டரில் பழுது ஏற்பட்டுள்ளது. இரண்டு ஷட்டர்களில் 7 இடங்களில் ஓட்டை விழுந்துள்ளது. இதனால் வினாடிக்கு பல ஆயிரம் கன அடி நீர் வீணாக கடலுக்கு செல்கிறது. இந்த அணைக்கட்டில் ஏற்பட்டுள்ள ஓட்டையை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்களும் விவசாயிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.