மறக்கப்பட்ட சுதந்திர போராட்ட வீரர்; யார் இந்த தொன்கபிரியேல் தெக்குரூஸ்?
1801-ம் ஆண்டு காடல்குடியில் நடந்த புரட்சிப்படை ரகசிய கூட்டத்தில் பங்கேற்று, அந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, தனக்கு சொந்தமான கப்பலில் இலங்கையில் இருந்து ஆயுதங்களை கொண்டு வந்தார்.
மன்னர் தொன்கபிரியேல் தெக்குரூஸ் பிறந்தநாளை அரசு விழாவாக கொண்டாட வேண்டும் என்று பரதர் நல அமைப்புகள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பரதவ குல மன்னனாக பொறுப்பேற்றவர் தென் காப்ரியேல் தெக்குருஸ் பரத வர்ம பாண்டியாபதி தேர்மாறன். இவர் பாஞ்சாலங்குறிச்சியை ஆண்ட வீரபாண்டிய கட்டபொம்மனின் நெருங்கிய நண்பராக விளங்கியுள்ளார். தூத்துக்குடி வழியாக கப்பலில் மதராசபட்டினம் என்று அழைக்கப்படும் சென்னைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
வீரபாண்டிய கட்டபொம்மன் தூக்கிலிட்ட பிறகு அவரது சகோதரரான ஊமைத்துரையை தூத்துக்குடி அருகே உள்ள பாண்டியன் தீவில் பாதுகாத்தவர் தான் இந்த மன்னன். சுதந்திர போராட்டத்தின் போது, வீரபாண்டிய கட்டபொம்மன், ஊமைத்துரை, மருது சகோதரர்களுடன் இணைந்து போராடியவர் முத்துக்குளித்துறை மன்னர் தொன் கபிரியேல் தெக்குரூஸ். இவர் வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு கப்பல், பொருளாதார உதவியும், சிறையில் இருந்து தப்பிய ஊமைத்துரையை அன்றைய பாண்டியன் தீவில் பாதுகாப்பாக வைத்து பாஞ்சாலங்குறிச்சி கோட்டை அமைக்கவும் உதவி உள்ளார்.
1801-ம் ஆண்டு காடல்குடியில் நடந்த புரட்சிப்படை ரகசிய கூட்டத்தில் பங்கேற்று, அந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, தனக்கு சொந்தமான கப்பலில் இலங்கையில் இருந்து ஆயுதங்களை கொண்டு வந்தார். தொடர்ந்து நடந்த முதல்கட்ட போரில் ஆங்கிலேயர்களை தோல்வியுற செய்தனர். 2 ஆம் கட்டமாக நடைபெற்ற போரில் பெரும்படையுடன் வந்த ஆங்கிலேயர்களிடம் தோல்வியும் அடைந்தனர். இதனால் தொன்கபிரியேல் தெக்குரூஸ் தலைமறைவானார். அதன்பிறகு தூத்துக்குடி பனிமயமாதா ஆலயத்துக்கு தங்கத்தேர் செய்து கொடுத்தார். இவர் 1808-ம் ஆண்டு மணப்பாட்டில் காலமானார். அவரது உடல் தோனி மூலம் தூத்துக்குடிக்கு கொண்டு வரப்பட்டு, கல்லறைத் தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
இந்த பகுதியில் உள்ள புனித லசால் பள்ளி நிர்வாகம் மைதானம் அமைத்து உள்ளது. இந்த நிலையில் மன்னர் தொன்கபிரியேல் தெக்குரூஸ் கல்லறை முறையாக பராமரிக்கப்படாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் தூத்துக்குடி மாவட்ட பரதர் நலச்சங்கம், நெய்தல் எழுத்தாளர் வாசகர் இயக்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் மன்னர் தொன்கபிரியேல் தெக்குரூஸ் கல்லறை அமைந்து உள்ள பகுதிக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர்.
தொடர்ந்து கல்லறை மீது கிடந்த பொருட்களை அப்புறப்படுத்தினர். பின்னர் கல்லறையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மேலும் அந்த பகுதியில் பரதர் குல அமைப்புகள் சார்பில் மணிமண்டபம் கட்ட உள்ளோம். மன்னர் தொன் கபிரியேல் தெக்குரூஸ் பிறந்தநாளை அரசு விழாவாக கொண்டாட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர். இதனால் அங்கு பரபரப்பாக காணப்பட்டது.