தூத்துக்குடி சிறு குறு தொழிற்சாலைகளுக்குள் வெள்ள நீர் உட்புகுந்ததால் ரூ.4 ஆயிரம் கோடி இழப்பு
பாதிக்கப்பட்ட தொழில் நிறுவனங்கள் மீண்டும் செயல்படுவதற்கு 21 நாட்களுக்கு மேல் ஆகும். தொழிற்சாலைகளுக்கு சுமார் ரூ.4 ஆயிரம் கோடி வரை இழப்பு ஏற்பட்டு உள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 17, 18-ந் தேதி பெய்த அதிகனமழையால் வரலாறு காணாத வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. தாமிரபரணி ஆற்றில் கரைபுரண்டு ஓடிய வெள்ளம் தூத்துக்குடி மாவட்டத்தை உருக்குலைத்து சின்னா பின்னமாக்கி சென்று உள்ளது. இந்த வெள்ளத்தில் மாவட்டத்தில் பல இடங்களில் சாலைகள் அரிக்கப்பட்டு காணாமல் போய் உள்ளது. ஏராளமான மின்கம்பங்கள், டிரான்ஸ்பார்மர்கள் சரிந்து விழுந்து உள்ளன. அதே போன்று வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகளையும் வெள்ளம் சூறையாடி உள்ளது. வணிக நிறுவனங்களுக்குள் வெள்ளம் புகுந்ததால் கோடிக்கணக்கான பொருட்கள் சேதம் அடைந்து உள்ளன. இதனை சரி செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த மழை வெள்ளத்தால் பல ஆயிரம் கோடி வரை இழப்பு ஏற்பட்டு இருக்கும் என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து வணிகர் சங்க பேரவை மாநில செயல்தலைவர் விநாயகமூர்த்தி கூறும் போது, "தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த கனமழையால் தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம், ஏரல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள கடைகளுக்குள் மழை வெள்ளம் புகுந்து உள்ளது. இதனால் வணிகர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். தூத்துக்குடி மாநகரில் சுமார் 25 ஆயிரம் கடைகளும், மாவட்டம் முழுவதும் மொத்தம் சுமார் ஒரு லட்சம் கடைகளும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு இருக்கிறது. இதனால் சுமார் ரூ.10 ஆயிரம் கோடி வரை பொருட்சேதம் ஏற்பட்டு உள்ளது. இது வணிகர்களுக்கு பெரும் இழப்பாகும். இதில் இருந்து மீண்டு வருவது மிகுந்த சிரமமானது. அரசு வணிகர்களுக்கும் உரிய நிவாரண உதவிகளை வழங்க வேண்டும்" என்று தெரிவித்தார்.
தூத்துக்குடி அகில இந்திய வர்த்தக தொழிற்சங்க தலைவர் தமிழரசு கூறும் போது, "தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு சிறு, குறு நிறுவனங்கள் பாதிக்கப்பட்டு உள்ளன. இந்த நிறுவனங்களில் சுமார் 3 அடி உயரத்துக்கு தண்ணீர் தேங்கி உள்ளது. இதனால் எந்திரங்கள் பழுதடைந்து உள்ளன. பொருட்கள் தயாரிப்பதற்கான மூலப்பொருட்கள், உற்பத்தி செய்து தயார் நிலையில் வைக்கப்பட்டு இருந்த பொருட்கள் அனைத்தும் சேதம் அடைந்து உள்ளன. பல்வேறு குடோன்களில் வைத்து இருந்த பொருட்கள் சேதம் அடைந்து இருக்கின்றன. பாதிக்கப்பட்ட தொழில் நிறுவனங்கள் மீண்டும் செயல்படுவதற்கு 21 நாட்களுக்கு மேல் ஆகும். தொழிற்சாலைகளுக்கு சுமார் ரூ.4 ஆயிரம் கோடி வரை இழப்பு ஏற்பட்டு உள்ளது" என்றார்.
தொழில் நகரமான தூத்துக்குடியில் சிப்காட் வளாகம் கோரம்பள்ளம் தொழிற்பேட்டையில் மழை நீர் இன்னும் வடியவில்லை. தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்த பொருட்கள் மூலப் பொருட்கள் இயந்திரங்கள் என பல்லாயிரம் கோடி அளவுக்கு சேதம் இப்படி இருப்பதாக தொழில்துறை என தெரிவிக்கின்றனர். தூத்துக்குடி மாவட்டத்தில் வேம்பார் முதல் ஆறுமுகனேரி வரையில் சுமார் 30 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் உப்பு உற்பத்தி நடைபெறுகிறது. தற்போது பெய்த அதி கனமழையால் ஏறத்தாழ 20 ஆயிரம் ஏக்கரில் உப்பளங்கள் முழுமையாக தண்ணீரில் மூழ்கியுள்ள உப்பளங்களில் சேமித்து வைக்கப்பட்டிருந்த உப்பு சுமார் பத்து லட்சம் டன் மழை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளது. மேலும் இரு மாவட்டங்களிலும் பிசான பருவ நெல் சாகுபடி தொடங்கி இருந்த நிலையில் ஒட்டுமொத்தமாக நிற்பீர்கள் நேரில் மூழ்கி விட்டது. நெல் வயல்கள், வாழைத்தோட்டங்கள் மண்மேடாக காட்சியளிக்கின்றது. பொதுமக்கள் வீடுகளையும் சொத்துக்களையும் இழந்துள்ளனர் ஒட்டுமொத்தமாக தூத்துக்குடி மாவட்டத்தில் பல்லாயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர் விவசாயிகளும் தொழில்துறையினரும்.