அரோகரா அரோகரா.. பக்தர்களின் கோஷம் அதிர ஆவணி திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்..
ஆவணி, மாசித் திருவிழாக்களில் இந்த இரண்டு நாள் திருவிழாக்களில் மட்டும்தான் ஷண்முகர் உலா வருவார் என்பது மிக விசேஷமாகப் பார்க்கப்படுகிறது.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணித்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணித்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இத்திருவிழா அடுத்த மாதம் செப்டம்பர் 4-ஆம் தேதி வரை 12 நாட்கள் நடக்கிறது.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் ஆவணி திருவிழாவை முன்னிட்டு இன்று அதிகாலை 1 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனமும், 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும் நடந்தது.. பின்னர் காலை 5 மணிக்கு மேல் 5.30 மணிக்குள் திருவிழா கொடியேற்றப்பட்டது.மாலையில் அப்பர் சுவாமிகள் கோவிலில் இருந்து தங்க சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து உழவாரப்பணி செய்யும் நிகழ்ச்சியும், இரவில் ஸ்ரீபெலி நாயகர் அஸ்திரத்தேவருடன் பல்லக்கில் 9 சந்திகளில் திருவீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடக்கிறது.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான 5-ம் திருநாளான 28-ந் தேதி மேலக்கோவிலில் இரவு 7.30 மணிக்கு குடைவரைவாயில் தீபாராதனை நடக்கிறது. பின்னர் சுவாமியும், அம்பாளும் தனித்தனி தங்க மயில் வாகனத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுக்கின்றனர்.
7-ம் திருநாளன்று அதிகாலை 5 மணிக்கு சண்முகப்பெருமானின் உருகு சட்டசேவை நிகழ்ச்சி நடக்கிறது. பின்னர் 8.45 மணிக்கு கோவிலில் இருந்து சுவாமி சண்முகர் வெற்றி வேர் சப்பரத்தில் பிள்ளையன்கட்டளை மண்டபத்திற்கு எழுந்தருளுகிறார். அங்கு மாலையில் சுவாமிக்கும், அம்பாள்களுக்கும் அபிஷேகம், அலங்காரமாகி தீபாராதனை நடக்கிறது. பின்னர் மாலை 4.30 மணிக்கு சுவாமி சண்முகர், வள்ளி-தெய்வானையுடன் தங்க சப்பரத்தில் சிவப்பு சாத்தி கோலத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.
8-ம் திருநாளான 31-ந் தேதி அதிகாலை 5 மணிக்கு சுவாமி சண்முகர் பெரிய வெள்ளிச்சப்பரத்தில் வெள்ளைச் சாத்தி கோலத்தில் எழுந்தருளி வீதி உலா வருகிறார். பகல் 10.30 மணிக்கு மேல் சுவாமி சண்முகர் பச்சை நிற கடைசல் சப்பரத்தில் பச்சை சாத்தி கோலத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து கோவிலை சேர்கிறார்.
காக்கும் கடவுளான விஷ்ணுவின் திருவண்ணக் கோலத்தில் பச்சை சாத்தியில் எழுந்தருளிய திருக்காட்சியை தரிசனம் செய்தால், வேண்டும் வரமெல்லாம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. பச்சைசாத்தியில் கேட்டதை வாரி வழங்கும் வள்ளலாக, காக்கும் அரசனாக வலம் வருவதால் அந்தத் திருக்கோலத்தை தரிசனம் செய்வார்கள். பச்சை சாத்தித் திருவிழாவைக் காணத்தான் பக்தர்களின் கூட்டம் அலைமோதும்.
வருடத்திலேயே ஆவணி, மாசித் திருவிழாக்களில் இந்த இரண்டு நாள் திருவிழாக்களில் மட்டும்தான் ஷண்முகர் உலா வருவார் என்பது மிக விசேஷமாகப் பார்க்கப்படுகிறது. மரிக்கொழுந்து, பச்சையிலை, திருநீற்றுப்பச்சிலை எனப் பச்சைசாத்தியில் ஷண்முகருக்குச் சாற்றி மனமுருகினால் வேண்டிய வரம் கிடைக்கும். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான 10-ம் திருநாள் தேரோட்டம் வருகின்ற செப்டம்பர் 2-ஆம் தேதி காலை 6.30 மணிக்கு தொடங்கி நடக்கிறது.
திருவிழா நாள்களில் தினமும் மாலை சுவாமி குமரவிடங்கப் பெருமான் வெவ்வேறு வாகனங்களில் அம்பிகைகளுடன் எழுந்தருளி வீதியுலா வருதல் நடைபெறுகிறது.
முன்னதாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் ஆவணி திருவிழா கொடியேற்றத்தை முன்னிட்டு யானை மீது அமர்ந்து கொடிப்பட்டம் வீதி உலா நேற்றுமாலை நடந்தது.