வஉசி துறைமுகத்தில் நடப்பு நிதியாண்டின் முடிவில் 50 மில்லியன் டன் சரக்குகளை கையாள முடியும் - துறைமுக ஆணைய தலைவர் நம்பிக்கை
வஉசி துறைமுகத்தில் சரக்கு கையாளும் திறனை அதிகரிப்பதற்கும், சரக்கு கையாளும் செயல்பாடுகளை வேகப்படுத்துவதற்கும், துறைமுகத்துக்கு கப்பல் வந்து செல்லும் நேரத்தை குறைப்பதற்கும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம்.
தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகள் மூலம் நடப்பு நிதியாண்டின் முடிவில் 50 மில்லியன் டன் சரக்குகளை கையாள முடியும் என துறைமுக ஆணையத் தலைவர் சுசாந்த குமார் புரோஹித் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தூத்துக்குடி வஉசி துறைமுகம் ஆண்டுக்கு 81.05 மில்லியன் டன் சரக்குகளை கையாளும் திறனுடன் தென் தமிழகத்தில் பொது சரக்குகளைக் கையாளுவதிலும், சரக்குப் பெட்டகங்களைக் கையாளுவதிலும் முன்னணி துறைமுகமாக திகழ்கிறது. 2024-2025 நிதியாண்டில், ஜூலை மாதம் 25-ம் தேதி வரை வஉசி துறைமுகம் 13.17 மில்லியன் டன்களை கையாண்டு 5.29 சதவிகித வளர்ச்சியும், 2.47 லட்சம் சரக்கு பெட்டகங்களை கையாண்டு 4.73 சதவிகித வளர்ச்சியும் அடைந்துள்ளது.
வஉசி துறைமுகத்தில் சரக்கு கையாளும் திறனை அதிகரிப்பதற்கும், சரக்கு கையாளும் செயல்பாடுகளை வேகப்படுத்துவதற்கும், துறைமுகத்துக்கு கப்பல் வந்து செல்லும் நேரத்தை குறைப்பதற்கும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். 306 மீட்டர் நீளமும், 14.20 மீட்டர் மிதவை ஆழமும் கொண்ட பெரிய கப்பல்களை கையாளுவதற்கு வசதியாக வடக்கு சரக்கு தளம் 3 ஆழப்படுத்தும் பணி அக்டோபர் மாதம் தொடங்கப்படவுள்ளது. துறைமுகத்துக்கு கப்பல் வந்து செல்லும் நுழைவு வாயில் மற்றும் கப்பல் திரும்பும் சுற்றுபாதையை ஆழப்படுத்தும் பணியும் விரைவில் நடைபெறவுள்ளது.ஆண்டுக்கு 7 மில்லியன் டன் சரக்குகளை கையாளுவதற்கு வசதியாக வடக்கு சரக்கு தளம் 3-ஐ இயந்திரமயமாக்கும் திட்டத்தை 18 மாதத்துக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் 100- 120 டன் திறன் கொண்டு நகரும் பளுதூக்கி இயந்திரங்களை பயன்படுத்தி 2 மில்லியன் டன் சரக்குகளை கையாள முடியும்.
சரக்குபெட்டக வர்த்தகத்தை அதிகரிப்பதற்கு துறைமுகத்தின் 3 வது சரக்கு பெட்டக முனையமாக ஜே.எம். பக்ஸி நிறுவனத்துக்கு சொந்தமான சரக்கு பெட்டக முனையம் வரும் செப்டம்பர் மாதம் செயல்பாட்டுக்கு வரவுள்ளது. இந்த சரக்கு பெட்டக முனையமானது 14.20 மீட்டர் ஆழம், 370 மீட்டர் நீளமும் கொண்டதாக அமைவதால் ஆண்டுக்கு 6 லட்சம் சரக்குப் பெட்டகங்களை கையாள முடியும். கூடுதலாக 2 மில்லியன் டன் பொது சரக்குகளை கையாளுவதற்கு வசதியாக கப்பல்கள் நங்கூரமிடப்படும் பகுதியில் நக்கூரமிட்டு நிறுத்தப்படும் சரக்கு கப்பல்களில் இருந்து சரக்குகளை கையாளுவதற்கு மிதவை இயந்திரங்கள் மற்றும் 3 சுமைபடகுகள் இயக்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
உரம் மற்றும் உர மூலப்பொருட்கள் சார்ந்த கப்பல்களை கையாளுவதற்கு வசதியாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தால் துறைமுகத்திடம் ஒப்படைக்கப்படுள்ள நிலக்கரித்தளம் 2ல் உள்ள கன்வேயர் அமைப்பை நீக்குதல் மற்றும் 3 ஹாப்பர் அமைப்பினை அமைத்தல் போன்ற பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும், 13 மீட்டர் மிதவை ஆழம் கொண்ட கப்பல்களை கையாளுவதற்கு வசதியாக நிலக்கரி தளம் 1ல் கன்வேயர் இணைப்பு நிறுவப்பட உள்ளது. இந்த பணியானது அக்டோபர் மாதம் முடிக்கப்படும்.வடக்கு சரக்கு தளம் -2-ல் கூடுதலாக ஒரு நாளைக்கு 25 ஆயிரம் டன் சரக்குகளை கையாளக் கூடிய 100 டன் திறன் கொண்ட நகரும் பளுதூக்கி இயந்திரங்கள் நிறுவப்பட உள்ளது. வடக்கு சரக்கு தளம்- 2 மற்றும் வடக்கு சரக்கு தளம் - 3-ல் கூடுதலான சரக்கு தளப்பகுதி 5000 சதுர மீட்டர் நிலப்பரப்பு உருவாக்கப்படும். இப்பணியானது வரும் நவம்பர் மாதம் முடிக்கப்படும்.சரக்குத்தளம் 5 மற்றும் 6-ல் காற்றாலை இறகுகளை தடையில்லாமல் கையாளுவதற்கு வசதியாக 2 கிராலர் இயந்திரங்கள் வரும் செப்டம்பர் மாதம் நிறுவப்படவுள்ளது.
இந்த வளர்ச்சி திட்டப்பணிகள் மூலம் இந்த நிதியாண்டு முடிவில் துறைமுகம் 50 மில்லியன் டன்னுக்கு மேல் சரக்குகளை கையாள முடியும், மேலும், சர்வதேச சரக்கு போக்குவரத்து வர்த்தகத்துக்கு தடையற்ற சரக்கு கையாளுதல் மற்றும் சரக்குக் கையாளும் செயல்பாடுகளுக்கு தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை வழங்க துறைமுகம் அனைத்து வகையான முயற்சிகளையும் எடுத்து வருகிறது. எங்களது வர்த்தக பங்குதாரர்களின் தேவைகளையும், எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்வது மட்டுமல்லாமல், வஉசி துறைமுகத்தை ஒரு உலகத் தரம் வாய்ந்த துறைமுகமாக உருவாக்குவதே எங்கள் குறிக்கோள் என அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.