![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Thoothukudi : ”கனிமொழி எம்.பி. வழங்கிய பட்டா என்ன ஆனது?” நடுத்தெருவில் நரிக்குறவர்கள், நடவடிக்கை எடுக்குமா நிர்வாகம்..?
”ஆம்னி பேருந்து நிறுத்தம் கொஞ்சம் கொஞ்சமாக நரிக்குறவர்கள் வசித்து வந்த இடத்தையும் ஆக்கிரமித்து கொண்டது”
![Thoothukudi : ”கனிமொழி எம்.பி. வழங்கிய பட்டா என்ன ஆனது?” நடுத்தெருவில் நரிக்குறவர்கள், நடவடிக்கை எடுக்குமா நிர்வாகம்..? people of Narikkurur community in Thoothukudi have demanded green houses from the government Thoothukudi : ”கனிமொழி எம்.பி. வழங்கிய பட்டா என்ன ஆனது?” நடுத்தெருவில் நரிக்குறவர்கள், நடவடிக்கை எடுக்குமா நிர்வாகம்..?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/06/09/7c3042998e8bdea2c38365ac2316233b1717906872708571_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
நரிக்குறவர்களுக்கு ஆதார் இருக்கு- ரேசன் கார்ட் இருக்கு- வீட்டுமனை பட்டா இருக்கு- பசுமை வீடுகள் வரும்னு சொன்னாக- எப்போ கொடுப்பீக ஆபீசர் ? என்ற கேள்வி தூத்துக்குடியில் எழுந்துள்ளது
தூத்துக்குடி மாநகராட்சி புதியபேருந்து நிலையம் அருகே நரிக்குறவர்கள் சமுதாயத்தினர் 52 குடும்பங்களை சேர்ந்த 200 பேர் கடந்த 20 ஆண்டு காலமாக தற்காலிக கூடாரம் அமைத்து வாழ்ந்து வருகின்றனர். முதலில் தூத்துக்குடி நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து அவ்வப்போது மாற்றப்பட்ட இச்சமுதாயத்தினர் தற்போது புதியபேருந்து நிலையம் பகுதியில் வசித்து வருகின்றனர். தூத்துக்குடி பகுதியில் பல ஆண்டுகளாக வசித்து வரும் தங்களுக்கு மாவட்ட நிர்வாகம் வீடு அமைத்துத்தர வேண்டுமென கோரிக்கைகளை தொடர்ந்து வைத்து வந்துள்ளனர்.
இதனை தொடர்ந்து கடந்த 2017 ஆம் ஆண்டு அப்போதைய ஆட்சியர் ரவிகுமார் நரிக்குறவர்களுக்கு வசவப்புரம் கிராமத்திற்கு உட்பட்ட அனவரதநல்லூர் அருகே பரம்புவில் நரிக்குறவர் சமுதாயத்தை சேர்ந்த 18 குடும்பத்தினருக்கு முதற்கட்டமான வீட்டுமனை பட்டாக்களை வழங்கினார். இதனையடுத்து நரிக்குறவர்களுக்கு விரைவில் பசுமை வீடுகள் அல்லது இந்திராகாந்தி நினைவு திட்டத்தின்கீழ் குடியிருப்புகள் வழங்கப்படுமென தெரிவித்து இருந்தார். முதலில் நரிக்குறவர்கள் அப்பகுதியில் தற்காலிக கூடாரம் அமைத்து இருந்தால் மட்டுமே இருப்பிடச்சான்று உள்ளிட்டவைகள் வழங்கமுடியும் எனத்தெரிவித்து இருந்தார்.
இதனையடுத்து நரிக்குறவர்கள் அப்பகுதிக்கு சென்று தற்காலிக கூடாரம் அமைக்க முற்பட்டபோது முற்றிலும் பரம்பு பகுதியாக இருந்ததால் கூடாரம் அமைக்க இயலவில்லை தங்களுக்கு பரம்பு பகுதியை சீரமைத்துதரவும் குடியிருப்புகளை அமைத்துத்தர வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தனர். இந்நிலையில் பரம்பு பகுதியில் தங்களுக்கு வழங்கப்படும் வீட்டுமனையால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும் நிலையுள்ளதாகவும் தெரிவித்திருந்தனர். இதனை தொடர்ந்து எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையை அடுத்து மீண்டும் புதிய பேருந்து நிலையம் அருகே தங்களது கூடாரங்களை அமைத்து வாழ்வாதாரத்தை துவங்கினர். மழையோ பனியோ புயலோ தங்களது குழந்தை குட்டிகளுடன் புதிய பேருந்து நிலையத்தில் ஊசி, பாசி, மணிமாலை உள்ளிட்டவைகளை விற்று வாழ்வாதாரம் மேற்கொண்டனர்.
இதனை தொடர்ந்து அப்பகுதியில் வசித்து வரும் நரிக்குறவர்களை சந்தித்த தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் நேரில் கள ஆய்வு மேற்கொண்டார். இதனை தொடர்ந்து அவர்கள் அணிவித்த பாசிமாலையை அன்புடன் ஏற்றுகொண்ட அவர், அவர்களுக்கு ஆதார் அட்டை, ரேசன் கார்டு உள்ளிட்டவைகள் உடனே வழங்கவும், தூத்துக்குடி அருகில் விரைவில் நிலம் வழங்கி பசுமை வீடு திட்டத்தின் கீழ் வீடு கட்டி வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும், வாழ்வாதாரத்திற்கு தேவையான ஆடு, மாடு வழங்கப்படும் என உறுதி அளித்து இருந்தார். இதனை தொடர்ந்து அவருக்கு நரிக்குறவர்கள் நன்றிகளையும் தெரிவித்து இருந்தனர். இதனை தொடர்ந்து இவர்களுக்கு ஆதார் அடையாள அட்டை, ரேசன் கார்டுகள் உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டது. தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டம் பேரூரணி பகுதியில் நரிக்குறவர்கள் 52 பேருக்கு வீட்டுமனை ஒதுக்கப்பட்டு அதற்கான பட்டாவினை தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி வழங்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நரிக்குறவர்கள் வசித்து வந்த பகுதியில் ஆம்னி பேருந்துகளை நிறுத்துவதற்காக தூத்துக்குடி மாநகராட்சி நிர்வாகம் புதிதாக விரிவாக்கப் பணிகளை மேற்கொண்டது. ஆம்னி பேருந்து நிறுத்தம் கொஞ்சம் கொஞ்சமாக நரிக்குறவர்கள் வசித்து வந்த இடத்தையும் ஆக்கிரமித்து கொண்டது. இதனை தொடர்ந்து மாநகராட்சி நிர்வாகம் நரிக்குறவர்களின் குடியிருப்பை காலி செய்ய, இப்போது நடுத்தெருவில் நரிக்குறவர்கள் நிற்கிறார்கள்.
இது தொடர்பாக நரிக்குறவர் சமுதாயத்தை சேர்ந்த மாவீரன் நம்மிடம் கூறும்போது, விரிவாக்கம் முடிந்தவுடன் இதில் குடியேறலாம் என சொல்கின்றனர். ஆனால் அது நடக்காது சார், எங்களுக்கு பட்டா போட்டு கொடுத்த இடத்த கொஞ்சம் சரி செய்து பசுமை வீடும், வாழ்க்கைய நடத்த ஆடு மாடும் கொடுத்தால் நல்லாருக்கும் சார் என்கிறார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)