பாம்பன் புதிய பாலத்தில் எப்போது பயணிகள் ரயில் இயக்கப்படும்? - அதிகாரிகள் தகவல்
தெற்கு ஆசியாவில் கடலில் அமைக்கப்பட்ட இரயில் பாலத்தில் முதன் முறையாக முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருட்களை பயன்படுத்தி செங்குத்தான வடிவில் 700 டன் எடையுடன் கூடிய நவீனமான தூக்குபாலம் அமைக்கப்பட்டுள்ளது.
பாம்பன் புதிய ரயில் பாலத்தில் சுமார் 3 கி.மி தொலைவிற்கு 1100 டன் எடையுடன் கூடிய 11 சரக்கு பெட்டிகளுடன் தேசிக்கொடியுடன் முதன்முதலில் சோதனை ஓட்டம் 20 கிலோமீட்டர் வேகம் முதல் 80 கிலோ மீட்டர் வேகத்தில் வெற்றிகரமாக நடைபெற்றது.
பாம்பன் கடலில் கடந்த 1913 ஆம் ஆண்டு ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட பாம்பன் ரயில் பாலம் 113 ஆண்டுகள் கடந்த நிலையில் அதன் உறுதித் தன்மை இழந்துவிட்டது என இந்திய ரயில்வே துறை அறிவித்தது. இதனை அடுத்து கடந்த 2017 ஆம் ஆண்டு ரூ.550 கோடி மதிப்பீட்டில் புதிய நவீன தொழில்நுட்பத் துடன் கூடிய ரயில் பாலத்திற்கான பூமி பூஜை நடைபெற்றது. 2018 ஆம் ஆண்டு பணிகள் துரிதமாக துவங்கப்பட்டது கொரோனா தொற்றால் கடந்த 19 மாதங்களாக பணி நிறுத்தப்பட்டிருந்த நிலையில் மீண்டும் பணிகள் துரிதமாக நடைபெற்று இன்று 99 சதவீத பணிகள் முழுமையாக நிறைவு பெற்றதாக ரயில்வே துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து இன்று காலை 11 மணி அளவில் 1,100 டன் எடை கொண்ட 11 சரக்கு பெட்டிகளுடன் கூடிய ரயில் புதிய பாலத்தில் 20 கி.மீட்டர் வேகம் முதல் 60 கி. மீட்டர் வேகம் வரை 4 கட்டமாக சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. இதனை சென்னை கட்டுமான பொறியியல் ஆராய்ச்சி மைய அலுவலர்கள் எக்கோ சவுண்ட் கருவி மற்றும் நவின் கருவிகள் மூலம் ஆய்வு செய்தனர். இந்த புதிய தொழில்நுட்ப பாலத்தில் இரு வழி பாதைகளைக் கொண்டது. மின்சாரம் மூலம் ரயில்கள் இயக்கப்படும் வசதி கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது, எனவும் பழைய ரயில் பாலத்தில் அதிகபட்சம் 20 கி.மீட்டர் வேகத்தில் பாம்பன் பாலத்தை கடந்த நிலையில் புதிய ரயில் பாலத்தில் மணிக்கு சுமார் 80 கி. மீட்டர் வேகத்தில் சரக்கு ரயிலை இயக்கி ஆய்வு மேற்கொண்டனர் .
தெற்கு ஆசியாவில் கடலில் அமைக்கப்பட்ட இரயில் பாலத்தில் முதன் முறையாக முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருட்களை பயன்படுத்தி செங்குத்தான வடிவில் 700 டன் எடையுடன் கூடிய நவீனமான தூக்குபாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாலத்தின் வழியாக சரக்கு கப்பல்கள் பார்ஜர்கள் கடந்து செல்லும் வசதிகளை உள்ளடக்கியதாக கொண்டுள்ளது. இதன் பணிகள் முற்றிலும் நிறைவடைந்த பின் வரும் அக்டோபர் 1ம் தேதி திட்டமிட்ட படி ரயில் சேவை துவங்கப்படும் என ரயில்வே துறையினர் உறுதியளித்துள்ளனர்.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக தமிழகம் மற்றும் வட மாநில பக்தர்களும், பொதுமக்கள், மீனவர்கள் மற்றும் வர்த்தகர்கள் இரயில் சேவை இன்றி பெரும் சிரமம் அடைந்து வந்த நிலையில் இன்றைய ரயில் சோதனை ஓட்டம் மற்றும் அக்டோபர் மாதம் ஒன்றாம் தேதி ரயில் சேவை துவங்கப்படும் என அதிகாரிகளின் உறுதி உள்ளிட்டவைகளால் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.