தூத்துக்குடியில் இருந்து திருச்செந்தூருக்கு... அப்டேட் தந்த அமைச்சர் எ.வ.வேலு
தூத்துக்குடி-திருச்செந்தூர் சாலையை 4 வழிச்சாலையாக மாற்ற விரிவான திட்ட அறிக்கை தயாரித்து வருகிறோம். நிலம் கையகப்படுத்தும் பணி குறைவாக இருந்தால், உடனடியாக பணிகள் தொடங்கப்படும்.
தூத்துக்குடி-பாளையங்கோட்டை ரோட்டில் கோரம்பள்ளம் அருகே பாலம் பணிகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்-அமைச்சர் எ.வ.வேலு
பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலை மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு தூத்துக்குடிக்கு வந்தார். அவர் தூத்துக்குடி வி.வி.டி. சிக்னல் அருகே மேம்பாலம் அமைய உள்ள இடம், 3-ம் கேட் ரெயில்வே மேம்பாலம் அருகே அணுகு சாலை அமைக்கப்பட உள்ள பகுதி, மாப்பிள்ளையூரணி பாலம் மற்றும் சாலை பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின் போது, சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், மாவட்ட ஆட்சியர் இளம்பகவத், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, ஆணையாளர் மதுபாலன், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் எ.வ.வேலு, "கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழை பெய்து, வெள்ளம் ஏற்பட்டது. இதனால் மக்கள் அன்றாட வாழ்க்கைக்கே தத்தளிக்கும் நிலை ஏற்பட்டது. அப்போது சேதம் அடைந்த 163 நெடுஞ்சாலைகளை தற்காலிகமாக சீரமைக்க முதல்-அமைச்சர் ரூ.140 கோடி நிதி ஒதுக்கினார். அந்த பணிகள் முழுமையாக முடிக்கப்பட்டு உள்ளது. நிரந்தரமாக 83 பணிகள் தேர்வு செய்யப்பட்டு ரூ.110 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
ஏரல் பாலம்
இதில் 37 பணிகள் முடிவடைந்து உள்ளன. 46 பணிகள் நடந்து வருகின்றன. டிசம்பர் மாதத்துக்குள் அந்த பணிகள் முடிக்கப்படும். ஏரல் பாலம் சீரமைக்கும் பணிக்கு டென்டர் விடப்பட்டு உள்ளது. விரைவில் பணிகள் தொடங்கப்பட்டு அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதத்துக்குள் முடிக்கப்படும்.
தூத்துக்குடி வி.வி.டி. சிக்னல் பகுதியில் மேம்பாலம் அமைக்கும் பணி, ரெயில்வே மேம்பாலம் சர்வீஸ் ரோடு அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த 2 பணிகளும் மேற்கொள்ளப்பட முடியாத நிலை இருந்து வருகிறது. அரசு சார்பில் மின்கம்பம் அகற்றுதல், குடிநீர் குழாய்களை மாற்றுதல், நிலம் கையகப்படுத்துதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படும். இந்த பணிகள் அனைத்தும் முடிக்கப்பட்டு நிதி ஒதுக்கப்பட்ட நிலையில், கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்து உள்ளனர். இதனால் தொடர்ந்து வழக்கு நடத்தி வருகிறோம். வழக்கு இறுதிகட்டத்துக்கு வந்து உள்ளது. வருகிற 17-ந் தேதி வழக்கு விசாரணைக்கு வருகிறது. அரசை பொறுத்தவரை நியாயமான வாதத்தை எடுத்து வைத்து உள்ளோம். நல்ல தீர்ப்பு வரும் என்று நம்புகிறோம். நல்ல தீர்ப்பு வந்த உடன் இந்த 2 பணிகளும் முன்னுரிமை கொடுத்து நிறைவேற்றப்படும்.
தூத்துக்குடி-பாளையங்கோட்டை ரோட்டில் கோரம்பள்ளம் அருகே பாலம் பணிகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். 4 வழிச்சாலைகளில் மத்திய அரசு சுங்கச்சாவடி அமைத்து வசூல் செய்கிறது. அதனால் முதல்-அமைச்சர் சாலை மேம்பாட்டு திட்டம் என்ற புதிய திட்டம் மூலம் தமிழக அரசே 4 வழிச்சாலைகளை அமைத்து வருகிறது. போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதிகளில் 4 வழிச்சாலை அமைக்கப்பட்டு வருகிறது. அதன்படி தூத்துக்குடி-திருச்செந்தூர் சாலையை 4 வழிச்சாலையாக மாற்ற விரிவான திட்ட அறிக்கை தயாரித்து வருகிறோம். நிலம் கையகப்படுத்தும் பணி குறைவாக இருந்தால், உடனடியாக பணிகள் தொடங்கப்படும். தூத்துக்குடி-மணியாச்சி சாலைக்கு நிலம் கையகப்படுத்தும் பணிகள் நடந்து வருகிறது. கடந்த ஆட்சியில் நிலம் கையகப்படுத்தப்படாமல் பணிகள் பல ஆண்டுகளாக நடைபெறாமல் உள்ளது. தற்போது, ஒரு சாலை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்றால், நிலம் கையகப்படுத்தும் பணி 90 சதவீதம் முடிந்து இருக்க வேண்டும், அதன்பிறகு திட்டமதிப்பீடு தயாரித்து டெண்டர் விடப்படுகிறது. மணியாச்சி சாலை நிலம் கையகப்படுத்தும் பணி முழுமையடைந்த உடன் முன்னுரிமை அளித்து சாலை அமைக்கப்படும்" என்றார்.