(Source: ECI/ABP News/ABP Majha)
Thoothukudi District: தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரில் கோவில்பட்டி தலைமையிடமாக கொண்டு அறிவிப்பு வெளியிடப்படுமா?
தமிழ்நாட்டின் சிறுதானியங்கள் உற்பத்தியில் முன்னணியில் கோவில்பட்டி ரெவின்யு டிவிஷன் என இப்படி எல்லா வகையிலும் மாவட்ட அந்தஸ்து கொண்ட வருவாய்க் கோட்டமாக கோவில்பட்டி உள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் 2-வது பெரிய நகரமாக கோவில்பட்டி விளங்குகிறது. கோவில்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் வானம் பார்த்த பூமியான மானாவாரி நிலங்கள் உள்ளன. விவசாயத்துக்கு அடுத்தபடியாக ஆயிரக்கணக்கான தீப்பெட்டி தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. 2 பெரிய நூற்பாலைகள் செயல்படுகின்றன.
மேலும், விளாத்திகுளம், எட்டயபுரம், ஓட்டப்பிடாரம், கயத்தாறு, சாத்தூர், ஏழயிரம்பண்ணை, திருவேங்கடம், குருவிகுளம், சிப்பிப்பாறை, வெம்பக்கோட்டை ஆகிய பகுதிகளில் உள்ள மாணவ, மாணவிகளின் கல்விக்கு மையப்பகுதியாக கோவில்பட்டி விளங்குகிறது. கோவில்பட்டியில் கோட்டாட்சியர், வட்டார போக்குவரத்து அலுவலகங்கள், கோவில்பட்டி கல்வி மாவட்ட அலுவலகம், சுகாதார மாவட்டம், மாவட்ட தலைமை அரசு மருத்துவமனை, செயற்கை புல்வெளி ஹாக்கி மைதானம் என ஏற்கெனவே அமைக்கப்பட்டு இயங்கி வருகின்றன. அதே போல், கோவில்பட்டியில் இருந்து தான் சங்கரன்கோவில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பணிக்கு சென்று வருகின்றனர்.
மேலும், காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையிலான தங்க நாற்கர நான்குவழிச்சாலையில் கோவில்பட்டி நகரம் அமைந்துள்ளது. அதே போல், இங்கிருந்து வெளிமாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களுக்கு ரயில் போக்குவரத்து உள்ளது. மதுரை கோட்டத்தில் அதிக வருவாய் தரும் ரயில் நிலையங்களில் கோவில்பட்டி ரயில் நிலையம் 2-வது இடத்தில் உள்ளது. கோவில்பட்டி கோட்டத்தில் உள்ள கழுகுமலை, எட்டயபுரம், வைப்பாறு ஆகியவை சுற்றுலாத்தலங்களாக உள்ளன. கோவில்பட்டி நகரின் வளர்ச்சியை குறிக்கும் வகையில் அனைத்து அரசு மற்றும் தனியார் வங்கிகளின் கிளைகள் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன.
கோவில்பட்டி கோட்டத்தில் கோவில்பட்டி, கயத்தாறு, எட்டயபுரம், ஓட்டப்பிடாரம், விளாத்திகுளம் என 5 வட்டங்கள் உள்ளன. இதில், விளாத்திகுளத்தை தலைமையிடமாக கொண்டு கோட்டமும், புதூரை தலைமையிடமாக கொண்டு வட்டமும் அமைத்து, கோவில்பட்டியை தலைமையிடாக கொண்டு மாவட்டம் உருவாக்க வேண்டும் என நீண்ட நாட்களாக மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். சட்டப்பேரவை தேர்தலிலும் கோவில்பட்டி தொகுதியில் போட்டியிட்ட அதிமுக, அமமுக, மார்க்சிஸ்ட் கட்சிகளும், கோவில்பட்டி தலைமையிடமாக கொண்டு மாவட்டம் உருவாக்கப்படும் என தேர்தல் வாக்குறுதி அளித்திருந்தனர்.
தூத்துக்குடி மாவட்டத்தின் ஒட்டுமொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 14 லட்சத்து 60 ஆயிரத்து 162 ஆகும். இதில் கோவில்பட்டி வருவாய் கோட்டத்தில் மட்டுமே 7 லட்சத்து 11 ஆயிரத்து 867 பேர் வாக்காளர்களாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 10க்கும் மேற்பட்ட கலை அறிவியல் கல்லூரிகள், மற்றும் பாலிடெக்னிக்குகள், பொறியியல் கல்லூரிகள், வேளாண் கல்லூரி, வெங்கடேஸ்வரா யுனிவர்சிட்டி, 20க்கும் மேற்பட்ட சிபிஎஸ்இ பள்ளிகள், மாவட்ட அந்தஸ்தில் சுகாதாரத் துறை, கல்வி துறை அலுவலகங்கள், நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த வேளாண்மை ஆராய்ச்சி நிலையம், 30க்கும் மேற்பட்ட நூற்பாலைகள், 200க்கும் மேற்பட்ட தீப்பெட்டி தொழிற்சாலைகள், நாளொன்றுக்கு சராசரியாக இரு மார்க்கங்களிலும் 50-க்கும் மேற்பட்ட ரயில் போக்குவரத்து வசதிகள், கயத்தாறு விமானப்படை தளம், இது தவிர கோவில்பட்டியில் விரைவில் தொடங்கப்பட உள்ள விமான பயிற்சி பள்ளி, தமிழ்நாட்டின் சிறுதானியங்கள் உற்பத்தியில் முன்னணியில் கோவில்பட்டி ரெவின்யு டிவிஷன் என இப்படி எல்லா வகையிலும் மாவட்ட அந்தஸ்து கொண்ட வருவாய்க் கோட்டமாக கோவில்பட்டி உள்ளதால் மாவட்டமாக தரம் உயர்த்துவது பொருத்தமான செயல் என்கின்றனர்.
புதிய மாவட்டம் உருவாக்க என்னென்ன தகுதிகள், வரையறைகள் தேவை என்பது தொடர்பாக வருவாய்த்துறையின் அரசாணை எண்-279 ல் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து விதிகளையும் கோவில்பட்டி வருவாய் கோட்டம் நிறைவு செய்துள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து தூத்துக்குடி மாவட்டம் பிரிக்கப்படும்போது அப்போதைய மக்கள் தொகை 6 லட்சம் அளவிலேயே இருந்துள்ளது. தற்போது தூத்துக்குடி மாவட்டத்தின் மக்கள் தொகை 20 லட்சத்துக்கும் அதிகமாக உள்ளதால் மக்கள் தொகையின் எண்ணிக்கைக்கு ஏற்ப மாவட்டத்தை உருவாக்க வேண்டிய அவசிய தேவையும் எழுந்துள்ளது.
அரசு அதிகாரிகள் விளக்கம்:
தமிழ்நாட்டில் சில மாவட்டங்கள் பிரிக்கப்படுவதாக தகவல் வந்த நிலையில், தற்போது மாவட்டங்களை பிரிப்பது தொடர்பாக எந்தவொரு திட்டமும் இல்லை என்றும், இந்த தகவல் வதந்தி என்றும் அரசு அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.