GK Vasan: "மக்களுக்கு நம்பிக்கை வராது" இந்தியா கூட்டணி முரண்பாடான கூட்டணி - ஜி.கே.வாசன்
இந்தியா கூட்டணி முரண்பாடான கூட்டணி என்றும், அது மக்களுக்கு நம்பிக்கை அளிக்காது என்றும் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு உள்பட 21 மாநிலங்களில் 102 தொகுதிகளில் முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது.
முரண்பாடான கூட்டணி:
இந்த நிலையில், தூத்துக்குடி விமான நிலையத்தில் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்த த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், நடந்து முடிந்த முதற்கட்ட வாக்குப்பதிவில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பிரகாசமாக உள்ளது. இந்தியா கூட்டணி முரண்பாடான கூட்டணி இந்த கூட்டணி வாக்கு வங்கிக்காக அமைக்கப்பட்டது. இந்த கூட்டணி மக்களுக்கு நம்பிக்கை அளிக்காது என்ற அவர், பறவைக்காய்ச்சல் நோயை கட்டுப்படுத்த அரசு சுகாதாரத் துறை மூலமாக உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
மேகதாது அணை:
கர்நாடக அரசு மேகதாது அணை குறித்து சர்வ சாதாரணமாக அறிக்கை விடுவது வேதனை அளிக்கிறது. மேகதாதுவில் அணை கட்டினால் டெல்டா பகுதி பாலைவனமாக மாறிவிடும் இது விவசாயிகளை பயிர் பிரச்சனை அல்ல விவசாயிகளின் உயிர் பிரச்சனை தமிழக அரசு காங்கிரஸ் உடன் ஏற்பட்டுள்ள கூட்டணிக்காக இந்த விஷயத்தில் மௌனம் காப்பது வேதனை அளிக்கக் கூடியதாகும். எனவே மேகதாது அணை குறித்த கருத்துக்கு தமிழக அரசு பதிலடி கொடுக்கவில்லை என்பதை பார்க்கும்போது இந்த ஆட்சி விவசாயிகளுக்கு எதிராகவே இருப்பதாக தெரிகிறது என்றார்.
பாரதிய ஜனதா கட்சி வேற்றுமையில் ஒற்றுமையை காணக்கூடிய வகையில் அனைத்து திட்டங்களையும் செயல்படுத்துகிறது. நாட்டின் வளர்ச்சிக்காக நாட்டின் பாதுகாப்புக்காக திட்டங்களை பா.ஜ.க. அரசு செய்து வருகிறது எனக் கூறிய அவர்.. தமிழகத்தில் உள்ள பேருந்து படிக்கட்டுகளில் தானியங்கி கதவு முறை அமைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்ததற்கு வரவேற்பை தெரிவித்தார். தமிழ்நாட்டில் போதைப் பொருட்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கடலூரில் சத்திய ஞான பிரகாச சபையை பக்தர்களின் விருப்பத்திற்கு மாறாக சர்வதேச மையமாக மாற்ற முயற்சிப்பதை மத்திய அரசு கைவிட வேண்டும் என்ற அவர், நடந்து முடிந்த தேர்தலில் மத்திய அரசின் திட்டங்களால் பல இடங்களில் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என்றார்.