தூத்துக்குடியில் மின்சார வாகன புரட்சி! VinFast-ன் அதிரடி விரிவாக்கம்: தமிழகத்தின் எதிர்காலம் மாறும்!
சிப்காட் தொழிற்பூங்காவில் வின்ஃபாஸ்டின் தற்போதைய ஆலைக்கு அருகில் சுமார் 200 ஹெக்டேர் (சுமார் 500 ஏக்கர்) நிலத்தை ஒதுக்கீடு செய்ய தமிழ்நாடு அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
வியட்நாமைச் சேர்ந்த முன்னணி மின்வாகன உற்பத்தியாளரான வின்ஃபாஸ்ட் (VinFast), தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் உள்ள அதன் உற்பத்தி ஆலையை விரிவாக்கம் செய்ய தமிழ்நாடு அரசுடன் ஒரு புதிய புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இதன் மூலம், மாநிலத்தில் மின்சார வாகன உற்பத்தித் துறையில் ஒரு பெரிய உந்துதல் ஏற்பட்டுள்ளது.
தூத்துக்குடி சிப்காட் தொழிற்பூங்காவில் வின்ஃபாஸ்டின் தற்போதைய ஆலைக்கு அருகில் சுமார் 200 ஹெக்டேர் (சுமார் 500 ஏக்கர்) நிலத்தை ஒதுக்கீடு செய்ய தமிழ்நாடு அரசு ஒப்புதல் அளித்துள்ளது. ஏற்கனவே அறிவிக்கப்பட்ட 2 பில்லியன் டாலர் (சுமார் ரூ.16,600 கோடி) முதலீட்டின் இரண்டாம் கட்டமாக, வின்ஃபாஸ்ட் நிறுவனம் இந்த விரிவாக்கத்திற்காக மேலும் 500 மில்லியன் டாலர் (சுமார் ரூ.4,150 கோடி) முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது. இந்த புதிய முதலீடு, மின்சாரப் பேருந்துகள் மற்றும் மின்சார ஸ்கூட்டர்களுக்கான பிரத்யேகப் பணிமனைகள் மற்றும் உற்பத்தித் தடங்களை அமைப்பதற்காகப் பயன்படுத்தப்படும். இதில் உற்பத்தி, அசெம்புள், சோதனை மற்றும் அதனுடன் தொடர்புடைய பிற செயல்பாடுகள் அடங்கும்.
இந்த விரிவாக்கத்தின் மூலம், வின்ஃபாஸ்ட் நிறுவனம் அதன் தயாரிப்பு வரிசையை விரிவுபடுத்த உள்ளது. தற்போதுள்ள மின்சாரக் கார்களுடன் கூடுதலாக, நிறுவனம் மின்சாரப் பேருந்துகள், இ-ஸ்கூட்டர்கள் மற்றும் சார்ஜிங் உள்கட்டமைப்பை உற்பத்தி செய்யவுள்ளது. புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி, தமிழ்நாடு அரசு தேவையான அனுமதிகளைப் பெறுவது, மின்சாரம், தண்ணீர், உள்சாலை இணைப்பு, வடிகால் மற்றும் கழிவு மேலாண்மை போன்ற அத்தியாவசிய உள்கட்டமைப்புகளை நிறுவ உதவுதல் ஆகிய ஆதரவுகளை வழங்கவும் உறுதியளித்துள்ளது.
மேலும் வின்ஃபாஸ்டின் 500 மில்லியன் டாலர் முதலீட்டிற்கு, மாநிலத்தின் நடைமுறையில் உள்ள விதிமுறைகள் மற்றும் கொள்கைகளின்படி பொருந்தக்கூடிய அனைத்து ஊக்கத்தொகைகள், நிதி ஆதரவு நடவடிக்கைகள் மற்றும் சட்டரீதியான விலக்குகள் வழங்கப்படும் ஆதரவுகளை வழங்க உறுதியளித்துள்ளது.
தற்போதுள்ள வின்ஃபாஸ்ட் ஆலை 160 ஹெக்டேர் (400 ஏக்கர்) பரப்பளவில் அமைந்துள்ளது. அதன் ஆரம்ப ஆண்டு உற்பத்தித் திறன் 50,000 மின்சார வாகனங்களாக உள்ளது. இந்த திறன் தற்போது 1,50,000 அலகுகளாக உயர்த்தப்பட்டு வருகிறது. தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, தமிழ்நாட்டில் வின்ஃபாஸ்ட் மின்சார கார்களின் அடுத்த கட்ட வளர்ச்சித் திட்டத்தை நாங்கள் வரவேற்கிறோம். மின்சாரப் பேருந்துகள் மற்றும் இ-ஸ்கூட்டர்களை அறிமுகப்படுத்துவது, தமிழ்நாட்டிற்கும் இந்தியாவிற்கும் பசுமைப் போக்குவரத்து உத்திக்கு மேலும் உத்வேகம் அளிக்கும் என்று கூறினார்.
விங்க்ரூப் ஆசிய தலைமை நிர்வாக அதிகாரியும் (CEO) வின்ஃபாஸ்ட் ஆசிய தலைமை நிர்வாக அதிகாரியுமான ஃபாம் சன் சாவ் அவர்கள் பேசுகையில், தமிழ்நாடு ஆலையின் திட்டமிடப்பட்ட விரிவாக்கம், மின்சார கார்களிலிருந்து மின்சாரப் பேருந்துகள் மற்றும் இ-ஸ்கூட்டர்கள் வரை எங்களது தயாரிப்பு வரிசையை இந்தியாவில் விரிவுபடுத்த உதவும். இதனால் பரந்த அளவிலான வாடிக்கையாளர் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியும். இந்த முயற்சி வேலை வாய்ப்புகளை உருவாக்குவதோடு, உள்ளூர்மயமாக்கலை மேம்படுத்தி, உள்ளூர் பணியாளர்களின் திறன்களை வலுப்படுத்தும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம், என்று தெரிவித்தார்.





















