தற்கொலை செய்து கொள்வதை தவிர வேறு வழியில்லை - திமுக கொடியுடன் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட குடும்பம்
எங்களுக்கு உரிய நியாயம் கிடைக்கவில்லை என்றால் இதே மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குடும்பத்துடன் தீக்குளித்து தற்கொலை செய்து கொள்வதைத் தவிர வேறு வழியில்லை
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி நகரத்திற்குட்பட்ட ருக்மணி பாளையம் சாலையில் வசிக்கும் விஜயகுமார் என்பவரின் மனைவி லதா என்பவர் தனது குடும்பத்தினருடன் தெரசாம்பாள் என்பவருக்கு சொந்தமான வீட்டில் கடந்த 30 வருடங்களாக வாடகைக்கு குடியிருந்து வருகிறார். வீட்டின் உரிமையாளர் தெரசாம்பாள் திருமணம் செய்துகொள்ளாமல் வசித்து வந்ததாகாகவும், அவருக்கு வாரிசுகள் இல்லை என்றும், தற்போது அவர் எங்கிருக்கிறார் என்றும் தெரியவில்லை எனக் கூறப்படுகிறது. இந்த நிலையில் பக்கத்து வீட்டில் குடியிருந்து வரும் நபர்கள் தங்கள் வீட்டை ஆக்கிரமிப்பு செய்ய முயற்சிப்பதாகவும், இதற்கு மன்னார்குடி வருவாய் கோட்டாட்சியர் மற்றும் துணை காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் துணை போவதாகவும், மேலும் தங்கள் வீட்டிற்கு முன் சுற்றுச் கவர் எழுப்பி உள்ளதாகவும் கூறி திமுக கட்சி கொடி மற்றும் துண்டுடன் கண்ணீர் மல்க வந்து ஆட்சியர் அலுவலத்தில் மனு கொடுக்க வந்தனர். ஆட்சியர் அரசு அலுவல் காரணமாக வெளியில் சென்றிருந்ததால் மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரத்திடம் மனு கொடுத்தனர்.
மனு கொடுக்க வந்த லதா இது குறித்து கூறுகையில், எங்களது குடும்பம் 45 வருடங்களாக திமுகவில் இருந்து வருகிறோம். நாங்கள் குடியிருக்கும் வீட்டின் பக்கத்து வீட்டை இடிப்பதற்கு ஆட்களை வைத்து இடிக்காமல், பொக்லைன் இயந்திரம் மூலம் அதிகாரிகள் துணையுடன் இடித்ததால் எங்கள் வீடு பாதிப்பு அடைத்துள்ளது. மேலும் வீட்டின் எதிரே சுற்று சுவரையும் கட்டி எங்களை வீட்டை விட்டு காலி செய்ய வற்புறுத்துகின்றனர் என கண்ணீர் மல்க தெரிவித்தார். எனவே ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மனு அளித்துள்ளதாகவும் தெரிவித்தார். எங்களுக்கு உரிய நியாயம் கிடைக்கவில்லை என்றால் இதே மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குடும்பத்துடன் தீக்குளித்து தற்கொலை செய்து கொள்வதைத் தவிர வேறு வழியில்லை என்று மனுவில் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட லதா தரப்பு வழக்கறிஞரான சுப்ரமணியன் இது குறித்து கூறுகையில், நாங்கள் இது குறித்து ஏற்கனவே நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளோம். 12 வருடங்கள் ஒரு வீட்டில் தொடர்ந்து குடியிருந்தால் அந்த வீடு அவர்களுக்கு சொந்தம் என்று சட்டம் சொல்கிறது. அப்படி இருக்கும்போது முப்பது வருடங்கள் இந்த வீட்டில் வசித்தவர்களை சாதிய ரீதியாக பின்தங்கியவர்கள் என்பதால் அதிகார பணபலம் படைத்தவர்கள் அவர்களை அடக்கி ஒடுக்க பார்க்கிறார்கள். இதை ஒருபோதும் நாங்கள் அனுமதிக்க மாட்டோம். முதல்வரின் சொந்த மாவட்டத்திலேயே ஒரு திமுக குடும்பத்திற்கு இது போன்ற அநியாயம் நடப்பது என்பது மிகவும் வருந்தத்தக்க ஒன்று. இதில் கண்டிப்பாக நியாயம் வெல்லும் என்று தெரிவித்தார்.