டீ சர்ட் பேரம் பேசியபோது போலீசிடம் சிக்கிய பயங்கர கொள்ளையர்கள் - திருவாரூரில் நடந்தது என்ன?
சிவகங்கையில் இருந்து காரில் கிழக்கு கடற்கரை சாலை வழியாக வேளாங்கண்ணிக்கு வந்து அறை எடுத்து தங்கி இருந்தது தெரிய வந்தது.மேலும் வரும் வழியில் வழிப்பறியில் ஈடுபட்டு வந்ததும் விசாரணையில் தெரிய வந்தது
சுமோவில் தப்பிய கொள்ளையர்கள் திரைப்பட பாணியில் 35 கிலோமீட்டர் தூரம் விரட்டிச் சென்று பிடித்த போலீசார் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் பதுங்கி இருந்த கொள்ளையர்கள் டீ சர்ட் வாங்கும்போது பேரம் பேசிய பிரச்சனையால் சிக்கியது எப்படி...?
சுமோவில் தப்பிக்க முயற்சி:
நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் உள்ள துணிக்கடை ஒன்றில் ஐந்து நபர்கள் டீசர்ட் வாங்க சென்றுள்ளனர்.டீசர்ட் விலை 150 ரூபாய் என்று கடைக்காரர் கூறியவுடன் எங்கள் ஊரில் 50 ரூபாய்தான் அதிக விலைக்கு விற்கிறாயா? என கேட்டு அரிவாளை காட்டி ரகளையில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து கடைக்காரர் இது குறித்து நாகப்பட்டினம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து நிகழ்விடத்திற்கு சென்ற போலீசாரை பார்த்த ஐந்து பேரும் அவர்கள் வந்த டாடா சுமோவில் ஏறி தப்பிக்க முயன்றுள்ளனர். இதனையடுத்து போலீசார் நெடுஞ்சாலை ரோந்து வாகனம் உள்ளிட்ட வாகனங்களில் டாடா சுமோவை தொடர்ந்து விரட்டி வந்துள்ளனர். டாட்டா சுமோ எங்கும் நிற்காமல் அதிவேகத்தில் வந்துள்ளது. மேலும் இடையில் உள்ள சோதனை சாவடிகளுக்கு நாகை போலீசார் தகவல் கொடுத்தும் போலீசார் தடுப்புகளை வைத்து தடுத்தும் அதில் இடித்துவிட்டு சுமோ எங்கும் நிற்காமல் வந்துள்ளது. போலீசாரும் திரைப்பட பாணியில் தொடர்ந்து சுமோவை 35 கிலோ மீட்டர் தூரம் விரட்டி வந்துள்ளனர். அப்போது சுமோ திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள பனங்குடிக்கு வந்த போது சாலை ஓரத்தில் உள்ள குடிநீர் குழாய்க்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் சிக்கியது.
சுற்றி வளைத்த போலீஸ்:
அதனைத் தொடர்ந்து சுமோவிலிருந்து இறங்கிய ஐந்து நபர்களும் காட்டுப் பகுதிக்குள் ஓட்டம் பிடித்துள்ளனர். இந்த நிலையில் அங்கு தயார் நிலையில் இருந்த நன்னிலம் துணை காவல் கண்காணிப்பாளர் தமிழ்மாறன் காவல் ஆய்வாளர் விஜயா உதவி ஆய்வாளர் கோபிநாத் தலைமை காவலர் கோபிநாத் காவலர் மனோ ஆகியோர் அவர்களை விரட்டிச் சென்று மடக்கி பிடித்தனர்.மேலும் போலீசார் அவர்கள் வந்த டாடா சுமோவை சோதனை செய்தபோது அதில் கத்தி பாறை முகமூடி உள்ளிட்ட பொருட்கள் இருப்பது தெரிய வந்தது.
கொலை, கொள்ளைச் சம்பவங்கள்:
அதனை தொடர்ந்து திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தலைமையிலான போலீசார் விசாரணையில் மதுரை மலையப்பப்பட்டியை சேர்ந்த கண்ணன் (23), மேலூர் வசப்பட்டியை சேர்ந்த பக்ருதீன் (30),மதுரை பொன்மேனியை சேர்ந்த பாண்டி(30), சிவகங்கை முனைப்பட்டியை சேர்ந்த அஸ்வின் (30) மற்றும் தஞ்சையை சேர்ந்த ராஜேஷ் (33) ஆகியோர் மதுரை மற்றும் சிவகங்கை பகுதியில் கொலை கொள்ளை போன்ற குற்றச்சம்பவங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வந்த நிலையில் சிவகங்கையில் இருந்து காரில் கிழக்கு கடற்கரை சாலை வழியாக வேளாங்கண்ணிக்கு வந்து அறை எடுத்து தங்கி இருந்தது தெரிய வந்தது.மேலும் வரும் வழியில் வழிப்பறியில் ஈடுபட்டு வந்ததும் விசாரணையில் தெரிய வந்தது. மேலும் கொள்ளையர்கள் ஐந்து பேரும் திருவாரூர் மாவட்ட போலீசாரால் கரூர் மாவட்ட போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்