திருட்டு போன வாகனத்திற்கு இன்சூரன்ஸ் தொகை கொடுக்காத நேஷனல் இன்சூரன்ஸ் - ரூ.3 லட்சம் அபராதம் விதிப்பு
நேஷனல் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் சேவை குறைபாடு மற்றும் நியாயமற்ற வர்த்தக நடைமுறை போன்றவற்றிற்காக ரூ 10,000 ரூபாயும் மற்றும் இழப்பீட்டு தொகையாக இரண்டு லட்ச ரூபாயும் கொடுக்க வேண்டும் என உத்தரவு
திருட்டு போன வாகனத்திற்கு இன்சூரன்ஸ் தொகை கொடுக்காத நேஷனல் இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு 3 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து திருவாரூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
திருவாரூர் தெற்கு மடவளாத்தை சேர்ந்த கண்ணபிரான் என்பவர் 2009 மாடல் டி.வி.எஸ் எக்ஸ்.எல் பைக் ஒன்றை பயன்படுத்தி வந்து இருக்கிறார். இந்த நிலையில் அவரது பைக் கடந்த 2017 ஆம் ஆண்டு ஜூலை 24ஆம் தேதி திருவாரூர் தலைமை தபால் நிலையத்திற்கு முன்பு திருடு போயுள்ளது. இதுகுறித்து அவர் திருவாரூர் நகர காவல் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளார். இந்த புகார் மனு குறித்து முதல் தகவல் அறிக்கை நகல் கண்ணபிராணிடம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் வாகன பதிவு நகல், காப்பீட்டு நகல் முதல் தகவல் அறிக்கை நகல் ஆகியவற்றை இணைத்து நேஷனல் இன்சூரன்ஸ் பொதுத்துறை நிறுவனத்தின் திருவாரூர் கிளையில் தனது திருட்டு போன வாகனத்திற்கு இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டுமென கண்ணபிரான் விண்ணப்பித்துள்ளார். இதனையடுத்து நேஷனல் இன்சூரன்ஸ் கம்பெனியின் திருவாரூர் கிளை கடந்த 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் 5 ஆம் தேதி கண்ணபிரானிடம் காவல் துறையிடமிருந்து வண்டியை கண்டுபிடிக்க முடியவில்லை என்கிற சான்றிதழை வாங்கி வருமாறு அறிவுறுத்தியுள்ளது. இதனை அடுத்து கடிதம் மூலம் அந்தச் சான்றிதழ் உள்ளிட்ட நகல்களை கடந்த 2020 ஆம் ஆண்டு நவம்பர் 23ஆம் தேதி நேஷனல் இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு கண்ணபிரான் அனுப்பி வைத்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து 2020 ஆம் ஆண்டு டிசம்பர் 7ஆம் தேதி திருவாரூர் நேஷனல் இன்சூரன்ஸ் கிளை போதிய ஆவணங்களை தாங்கள் சமர்ப்பிக்கவில்லை என்றும் மேலும் விண்ணப்பிக்க காலதாமதமாகி விட்டதால் தங்களுக்கு இன்சூரன்ஸ் தொகை வழங்க முடியாது என்றும் தெரிவித்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த கண்ணபிரான் கடந்த 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி 4-ஆம் தேதி திருவாரூர் நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய திருவாரூர் நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் சக்கரவர்த்தி கண்ணபிரானை நேஷனல் இன்சூரன்ஸ் நிறுவனம் வேண்டுமென்றே இழப்பீட்டு தொகையை கொடுக்காமல் அலைகழித்து அவரை மன வேதனைக்கும் மன உளைச்சலுக்கும் பொருள் நஷ்டத்திற்கும் ஆளாக்கி உள்ளதாகவும் இதனால் புகார்தாரரின் இரு சக்கர வாகன இன்சூரன்ஸ் மதிப்பு தொகையான 8 ஆயிரத்து 572 ரூபாயை வண்டி காணாமல் போன நாளிலிருந்து 9 சதவீத வருட வட்டியுடன் சேர்த்து வழங்க வேண்டும் என்றும், நேஷனல் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் சேவை குறைபாடு மற்றும் நியாயமற்ற வர்த்தக நடைமுறை போன்றவற்றிற்காக ரூ 10,000 ரூபாயும் மற்றும் இழப்பீட்டு தொகையாக இரண்டு லட்ச ரூபாயும் கொடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.
மேலும் கண்ணபிரானின் கோரிக்கை மனுவானது உரிய காலத்திற்குள் ஆவணங்களை சமர்ப்பிக்காததாலும் 3 ஆண்டுகளுக்கு மேல் கால தாமதம் ஏற்பட்டுள்ளதாக கூறி நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் அது புகார்தாரரை ஏமாற்றும் நடைமுறையாகும் என இந்த ஆணையம் கருதுகிறது என்றும் மேலும் ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் போல புகார்தாரர் இதுபோன்று வேறு பலர் இதே போன்று இன்சூரன்ஸ் தொகையை பெற முடியாமல் பாதிக்கப்பட்டு இருப்பார்கள் என்று இந்த ஆணையம் கருதுகிறது என்றும் இத்தகைய செயலுக்காக கூடுதல் இழப்பீடு தொகையாக நேஷனல் இன்சூரன்ஸ் நிறுவனம் ரூபாய் ஒரு லட்சத்தை கண்ணபிரானுக்கு வழங்க வேண்டும் என ஆணையத் தலைவர் சக்கரவர்த்தி தீர்ப்பளித்து உத்தரவிட்டுள்ளார்.
மேலும் இந்த உத்தரவு கிடைக்கப் பெற்ற ஆறு வாரத்திற்குள் கண்ணபிரானுக்கு இந்த தொகையை கொடுக்க வேண்டுமென்றும் தவறும் பட்சத்தில் இழப்பீடு மற்றும் செலவுத் தொகையாக 3 லட்சத்து 10 ஆயிரத்திற்கு உத்தரவை பிறப்பித்த நாளிலிருந்து 6 சதவீத வருட வட்டி சேர்த்துக் கொடுக்க வேண்டும் என்று அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்